ஹராத்திற்கு வழிவகுக்கும் (இட்டுச் செல்லும்) அனைத்தும் ஹராமாகும்
Last Updated (Tuesday, 30 November 1999 00:00) Friday, 06 February 2009 18:31
ஹலால் ஹராம் சட்டவிதிகள் - 08
இதுவும் ஹலால் ஹராம் தொடர்பான ஒரு முக்கிய விதியாகும். இஸ்லாம் ஒன்றை ஹராமாக்குகின்ற போது அதற்கு இட்டுச் செல்லும் வழிகளையும் அடைத்து விடுகின்றது. உதாரணமாக விபச்சாரத்தை இஸ்லாம் தடை செய்யும் போது அதற்கு வழிவகுக்கக் கூடிய ஆண், பெண் சுதந்திரமாகக் கலந்து பழகுதல், நிர்வாணப்படங்கள், உணர்ச்சியைத் தூண்டும் பாடல்கள், ஆபாச இலக்கியங்கள், பெண்கள் தமது கவர்ச்சியை வெளிக்காட்டல் போன்றவற்றையும் தடை செய்கின்றது.
இந்த அடிப்படையிலேயே ஹராத்திற்கு இட்டுச் செல்லும் அனைத்துமே ஹராம் என்ற அடிப்படை விதியை இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் நிறுவினார்கள்.
இந்தவகையில் ஹராத்திற்கான பாவம் அதனைச் செய்தவரை மட்டும் சாராது. அதற்கு ஏதோ ஒருவகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவும் அனைவரையும் அது சாரும். தான் பங்கெடுத்துக் கொண்ட அளவுக்கு ஒவ்வொருவரும் குற்றவாளியாகக் கருதப்படுவார். மதுவைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது மது அருந்துபவரையும் மது பிழிபவரையும் அதனைச் சுமந்து செல்பவரையும் சபித்தார்கள்ளூ வட்டியைப் பொறுத்தவரையில் வட்டி சாப்பிடுபவரையும், வட்டி கொடுப்பவரையும், வட்டிக்கணக்கு எழுது பவரையும், அதற்குச் சாட்சியாக இருப்பவரையும் அன்னார் சபித்துள்ளார்கள். இவ்வாறுதான் ஹராத்திற்குத் துணை புரியக்கூடியவர்கள் எல்லோரும் அதன் பாவத்தில் பங்குகொள்கின்றார்கள்.
