ஹராமானதை நாடவேண்டிய தேவையில்லாத அளவுக்கு ஹலால் நிறைவாக இருக்கிறது
Last Updated (Monday, 29 December 2008 17:56) Monday, 29 December 2008 17:55
ஹராமானதை நாடவேண்டிய தேவையில்லாத அளவுக்கு ஹலால் நிறைவாக இருக்கிறது
ஹலால் ஹராம் சட்டவிதிகள் - 06
இஸ்லாம் ஒன்றை ஹராமாக்கினால் அதற்கான பிரதியீட்டை ஹலாலில் வைத்திருக்கிறது. இது இஸ்லாத்தின் ஒரு தனிப்பெரும் சிறப்பம்சமாகும்.
இஸ்லாம் ஜாஹிலிய்யாக் காலத்தில் காணப்பட்ட அஸ்லாம் என்ற நன்மையை நாடி குறிபார்க்கும் முறையைத் தடை செய்தது. அதற்குப் பகரமாக இஸ்திகாரா என்ற வழிமுறையை அறிமுகம் செய்தது. இஸ்திகாரா என்பது ஒரு விடயத்தில் எதைச் செய்வது என்ற பிரச்சினை தோன்றினால் அல்லது ஒன்றைச் செய்வதா செய்யாமல் விடுவதா என்று தடுமாற்றம் ஏற்பட்டால் அந்த விடயத்தில் ஆனதைத் தனக்கு காட்டித் தருமாறு அல்லாஹ்விடம் வேண்டுவதைக் குறிக்கும். இதற்கான ஒரு தொழுகையும் நபியவர்கள் கற்றுத்தந்த ஒரு விஷேட துஆப் பிரார்த்தனையும் உண்டு.
வட்டியைத் தடைசெய்துள்ள இஸ்லாம் வியாபாரத்தில் ஈடுபட்டு இலாபம் பெறுவதை ஹலாலாக்கியுள்ளது. சூதாட்டத்தைத் தடை செய்யும் இஸ்லாம், போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெறுவதை ஹலாலாக்கி அதை ஈடுசெய்துள்ளது.
ஆண்களுக்கு பட்டாடையைத் தடைசெய்து அதற்கு ஈடாக பருத்தி, கம்பளி போன்றவற்றினால் செய்யப்படும் விலையுயர்ந்த ஆடைகள் அணிவதை ஆகுமாக்கியுள்ளது.
விபச்சாரத்தையும், தன்னினச் சேர்க்கையையும் ஹராமாக்கியுள்ள இஸ்லாம் திருமணத்தை அதற்குப் பதிலீடாக அமைத்துள்ளது.
மதுபானத்தை இஸ்லாம் விலக்கியுள்ளது. மறுபக்கத்தில் சுவையான மென்பானங்கள் அருந்துவதை ஹலாலாக்கியுள்ளது. மோசமான பொருட்களை தடை செய்துள்ள அதேவேளை நல்ல பொருட்களை அது அனுமதித்துள்ளது.
இவ்வாறு இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை நாம் தனித்தனியாக அணுகி ஆராய்ந்தால், அல்லாஹ் மனிதருக்கு ஒருபுறத்தால் தடை விதித்தால் மறுபுறத்தால் அதற்குப் பதிலாக வாழ்வை வசதியாக அமைத்துக் கொள்ளும் வழிவகைகளை ஆகுமாக்கியிருப்பதை அவதானிக்க முடியும்.
ஏனெனில் மனிதர்களுக்கு கஷ்டத்தைக் கொடுப்பதற்காக வந்த மார்க்கமல்ல இஸ்லாம். சிரமங்கள், நெருக்கடிகள் அற்ற ஒரு சீரான வாழ்வை மனிதருக்கு அமைத்துக் கொடுத்தல் வேண்டும் என்பதே அதன் அடிப்படை இலக்காகும். அல்குர்ஆன் இந்தக் கருத்தை ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பதைக் காணமுடியும்.
''இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை.''
