அசுத்தமானவையும் தீமை பயப்பனவுமே ஹராமாகக் கொள்ளப்படும்
Last Updated (Tuesday, 30 November 1999 00:00) Monday, 29 December 2008 17:53
அசுத்தமானவையும் தீமை பயப்பனவுமே ஹராமாகக் கொள்ளப்படும்
ஹலால் ஹராம் சட்டவிதிகள் - 05
அல்லாஹுத் தஆலா தனது அடியார்கள் மீது கொண்டுள்ள அன்பின், அருளின் காரணமாக நலன்களைக் கருத்திற் கொண்டும் நியாயமான காரணங்களுக்காகவுமே ஹலால் ஹராமை வகுத்துள்ளான். எனவே அவன் நல்லவற்றை, நன்மை பயக்கக் கூடியவற்றை ஹலாலாக் கியுள்ளான். அசுத்தமானவற்றையும் அசிங்கமானவற்றையும் ஹராமாக்கியுள்ளான்.
அல்லாஹுத்தஆலா சில முன்னைய சமூகங்களுக்கு அவர்களின் அத்துமீறல்களுக்கும் குற்றச் செயல்களுக்கும் தண்டனையாக சில நல்ல பொருட்களையும் ஹராமாக்கி இருந்தான். ஆயினும் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் நிலையானதும் எல்லோருக்கும் பொதுவானதுமான தனது இறுதித்தூதை கொடுத்து அனுப்பியபோது தண்டனையாக ஒரு சமூகத்தின் மீது விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கினான். அத்தகைய விலங்குகளை அகற்றினான். இதனைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
''தங்களிடமுள்ள இன்ஜீலிலும் தவ்ராத்திலும் குறிப்பிடப்பட்டவராக அவரை (இறுதித்தூதரை) அவர்கள் கண்டு கொள்வர். அவர் அவர்களுக்கு நன்மையை ஏவுவார். தீமைகளைத் தடுப்பார். நல்லவற்றை ஹலாலாக்குவார். தீமை பயப்பனவற்றை ஹராமாக்குவார். அவர்கள் மீதுள்ள பளுவையும் விலங்குகளையும் நீக்கிவிடுவார்.'' (அல்அஃராப்: 157)
இந்த வகையில் தீமை பயப்பனவும் அழுக்கானவையும் ஹராமெனக் கொள்ளப்படுகின்றன. அதேபோல ஒன்றிலுள்ள நன்மையை விட தீமை அதிகமாக இருப்பின் அதுவும் ஹராமாகக் கருதப்படுகின்றது. மறுபக்கத்தில் தீமையை விட நன்மைகளை அதிகமாகக் கொண்டவை ஹலாலானவையாகும். இந்த அடிப்படைகளை மது, சூது பற்றி குறிப்பிடும் அல்குர்ஆன் வசனம் தெளிவாக விளக்குகின்றது.
''மது, சூதாட்டம் என்பன பற்றி (நபியே!) அவர்கள் உங்களிடம் விசாரிக்கின்றனர். அவற்றில் பெருந்தீமையும் மனிதருக்கு சில நன் மைகளும் இருக்கின்றன. அவற்றின் தீமை அவற்றின் நன்மையை விடப் பெரியதாகும்.'' (அல்பகரா: 219)
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவை (ஹலாலாக்கப்பட்டவை) எவை என்ற வினாவுக்குக் கிடைக்கும் தெளிவான பதில், 'தய்யிபாத்' அனைத்தும் ஹலால் என்பதாகும். சீரான உள்ளம் படைத்தவர்கள் சிறந்தவையாகக் கருதுபவையே 'தய்யிபாத்' எனப்படுகின்றன.
''தமக்கு எது ஹலாலாக்கப்பட்டுள்ளது என்று (நபியே!) அவர்கள் உங்களிடம் விசாரிக்கின்றார்கள். உங்களுக்கு தய்யிபாத் (நல்லவைகள்) ஹலாலாக்கப்பட்டுள்ளன என்று (நபியே!) நீர் கூறுவீராக.'' (அல்மாஇதா: 4)
அல்மாயிதாவின் 5ஆம் வசனமும் இதே கருத்தை வலியுறுத்துவதாக அமைந்திருக்கின்றது.
''இன்று உங்களுக்கு தய்யிபாத் ஹலாலாக்கப்பட்டுள்ளது.'' (அல்மாஇதா: 5)
இதுவரை கண்ட விளக்கங்களிலிருந்து ஒரு பொருள் ஹராமாக்கப்பட் டிருப்பின் அதிலுள்ள 'ஹுப்ஸ்' அதாவது அசுத்தம், அழுக்கு காரணமாக இருக்கும் அல்லது 'ழலர்' எனும் ஏதாவது ஒரு தீங்கு, கேடு காரணமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டோம். ஆயினும் சிலவேளை ஒரு பொருள் ஹராமாக்கப்பட்டிருப்பதன் காரணம் விளங்காதிருக்கலாம். ஒரு பொருளின் தீங்கு ஒரு காலத்தில் புரியாமல் இருந்து பிரிதொரு காலத்தில் தெரிய வரலாம். ஆனால் ஒரு முஃமின் நியாயம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஹராத்தை ஹராமாகவே கொள்ளுதல் வேண்டும்.
உதாரணமாக பன்றி இறைச்சி ஹராமானதாகும். அது அருவருக்கத்தக்கது என்று மட்டுமே ஆரம்ப கால முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் பின்னர், அது பயங்கரமான பல ஒட்டுண்ணிகளைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பன்றி இறைச்சியில் இத்தகைய தீமைகள் காணப்படுகின்றன என்று அறிவியல் கண்டுபிடிக்காவிட்டாலும் அல்லது தற்போது இருப்பதை விட அதிகமான தீங்குகள் அதில் இருப்பதாகக் கண்டுபிடித்தாலும் ஒரு முஸ்லிம் பன்றி இறைச்சி ஹராமானதே என்ற நம்பிக்கையை விட்டும் பிறழுவதற்கான வாய்ப்பு இல்லை.
மேலும் நபி (ஸல்) கூறினார்கள்:
''அல்லாஹ்வினதும் மனிதர்களினதும் சாபத்தை தேடித்தரும் நீர் நிலைகள், பொதுப் பாதை, நிழல் தரும் இடங்கள் போன்ற இடங்களில் மலங்கழிப்பதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.''
(அபூதாவூத், இப்னு மாஜா, பைஹகீ)
இந்தச் செயல் அருவருப்பான ஒன்று, நாகரிகமான ஒரு பழக்கமல்ல, இதனால் இது தடை செய்யப்பட்டுள்ளது என்று மட்டுமே ஆரம்ப கால மக்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால் இன்று அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக இது சுகாதாரத்திற்கும் சுற்றாடலுக்கும் எத்தகைய அச்சுறுத்தலாக அமைகின்றது என்பது தெரிய வந்துள்ளது. தொற்று நோய்கள் பரவுவதற்கு இவ்வாறான பொது இடங்களில் மலசலங் கழிப்பது காரணம் எனவும் தற்போது கூறப்படுகின்றது.இவ்வாறு அறிவியல் முன்னேற்றம் அடையும்போது இஸ்லாமிய சட்டங்களின் சிறப்பம்சங்களும், ஹலால் ஹராம் என அது கூறியதற்கான காரணங்களும் தெளிவாகின்றன.
''அல்லாஹ் நன்மை பயப்பதையும் தீமை பயப்பதையும் நன்கு அறிவான். அல்லாஹ் விரும்பினால் உங்களைக் கஷ்டப்படுத்திவிட முடியும். அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனும் ஆழ்ந்த ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.'' (அல்பகரா: 220)
