ஹலாலை ஹராமாக்குவதும் ஹராத்தை ஹலாலாக்குவதும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஷிர்க்காகும்.
Last Updated (Tuesday, 30 November 1999 00:00) Monday, 29 December 2008 17:37
ஹலாலை ஹராமாக்குவதும் ஹராத்தை ஹலாலாக்குவதும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஷிர்க்காகும்.ஹலாலை ஹராமாக்குவது ஷிர்க் சார்ந்த ஒரு செயலாகும். எனவேதான் ஜாஹிலிய்யாக்கால முஷ்ரிக்கள் மிருகங்கள், தாவரங்களில் சிலவற்றை தமக்குத் தாமே ஹராமாக்கிக் கொண்டிருந்தமையை அல்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கின்றது. பஹீரா,ஸாயிபத், வஸீலத்,ஹாம் என்று அழைக்கப்பட்ட சில பண்புகளைக் கொண்ட ஆடு, ஒட்டகங்களை அவர்கள் ஹராமாக்கிக் கொண்டமை இதற்கு ஓர் உதாரணமாகும்.
பஹீரா, ஸாஇபா, வஸீலா, ஹாம் என எந்த மிருகத்தையும் அல்லாஹ் (ஹராம்) ஆக்கவில்லை. ஆனால் நிராகரிப்போரே அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள். அவர்களில் அதிகமானோர் சிந்திப்பதில்லை. அல்லாஹ் இறக்கியதன் பக்கமும், அல்லாஹ்வின் தூதர் பக்கமும் வாருங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் எமது முன்னோர்களிடம் நாம் கண்ட வழிமுறையே எமக்குப் போதுமானது என அவர்கள் கூறுவார்கள்.அவர்களின் முன்னோர் எதுவும் அறியாதிருந்தாலும் நேர்வழியில் இல்லாதிருந்தாலுமா அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வார்கள்.
ஸுறா அல்அன்ஆமிலும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றில் ஜாஹிலிய்யக் கால மக்கள் ஹராமாக்கிக் கொண்டிருந்தவை பற்றிய விரிவான ஒரு விளக்கம் காணப்படுகின்றது. இதனைப் பரிகசிக்கும் போக்கில் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
ஸுரா அல்அஃராபின் 32, 33ஆம் வசனங்களிலும் இவ்வகையான ஒரு விளக்கத்தைக் காண்கின்றோம். இதில் ஹராமாக்குவோருக்கு மறுப்புத் தெரிவிக்கப்படுவதோடு, நிரந்தரமாக ஹராமாக்கப்பட்டவற்றின் அடிப்படைகளும் விளக்கப்படுகின்றன.
மதீனாவில் சிலர் பேணுதல் என்ற பெயரில் ஒருவகை தீவிரப் போக்கின் காரணமாக அல்லாஹ் ஆகுமாக்கிய சிலவற்றை தம்மீது ஹராமாக்கிக் கொண்டு வாழ முற்பட்டபோது அந்தப் போக்கைக் கண்டித்து சில அல்குர்ஆன் வசனங்கள் இறங்கின.
விசுவாசிகளே! அல்லாஹ் ஹலாலாக்கிய நல்ல பொருட்களை நீங்கள் உங்களுக்கு ஹராமாக்கிக் கொள்ள வேண்டாம். அல்லாஹ் நிச்சயமாக அத்துமீறுவோரை விரும்புவதில்லை. அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் நல்லதை, ஹலாலானதைச் சாப்பிடுங்கள். நீங்கள் ஈமான் கொண்டுள்ள அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.||
(அல்மாஇதா:87, 88)
