அடிப்படையில் எல்லாம் ஆகுமானவையே

அடிப்படையில் எல்லாம் ஆகுமானவையே

ஹலால் ஹராம் சட்டவிதிகள் - 02

இனி ஹலால் ஹராம் தொடர்பான இஸ்லாத்தின் கண்ணோட்டத் தையும், அதேநேரம் ஒன்றை ஹலால் என்றோ அல்லது ஹராம் என்றோ தீர்மானிப்பதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்ற அளவுகோள்கள், பெறுமானங்கள், காரணங்கள் முதலானவற்றை புரிந்து கொள்ளும் நோக்குடன் அவை தொடர்பான சில சட்ட விதிகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்விதிகளை ஆரம்பகால இமாம்களும் இஸ்லாமிய அறிஞர்களும் குர்ஆன் ஸுன்னாவின் ஒளியில் மிகவும் துல்லியமாக அமைத்துத் தந்துள்ளார்கள். ஒரு சட்டவிதியை பிரயோகித்து பல பிரச்சினை களுக்குத் தீர்வு வழங்கும் வகையில் ஒவ்வொரு சட்டவிதியும் செறிவானதாகவும் ஆழமானதாகவும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது.

அடிப்படையில் எல்லாம் ஆகுமானவையே!

இது ஹலால் ஹராம் தொடர்பாக இஸ்லாம் வகுத்துள்ள முதல் அடிப்படை விதியாகும். அடிப்படையில் அல்லாஹ் படைத்த அனைத்துப் பொருட்களும் அதனால் பெறப்படும் பயன்களும் ஹலாலானவை முபாஹானவை அதாவது ஆகுமானவை. தெளிவான நம்பகமான ஒரு சட்டவசனம் ஹராமெனக் காட்டுகின்ற ஒன்றே ஹராம் எனக் கொள்ளப்படும். எனவே ஒன்றை ஹலால் என்று கூறுவதற்கு ஆதாரம் அவசியப்படுவதில்லை. ஹராம் என்று சொல்லுகின்ற போதே அது ஆதாரத்தின் மூலம் நிறுவப்படல் வேண்டும். பொதுவாக பொருட்கள், பயன்பாடுகள் அடிப்படையில் ஹலாலானவையே என்ற இந்த விதிக்கு ஆதாரமாக இஸ்லாமிய அறிஞர்கள் பல அல்குர்ஆன் வசனங்களை முன்வைக்கின்றார்கள். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவை:

;''அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காக படைத்தான்.'' (பகரா: 29)

''வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் தனது அருளால் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்''(அல்ஜாஸியா: 13)

''வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருப்பதையும், வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உங்களுக்கு அவன் அருள்களை வாரி வழங்கியிருப்பதையும் நீங்கள் அவதானிக்கவில்லையா?'' (லுக்மான்: 20)

அல்லாஹ் மனிதனுக்காகப் பொருட்களையெல்லாம் படைத்ததாகவும், அவற்றை அவனுக்கு வசப்படுத்திக் கொடுத்திருப்பதாகவும், அருளாக அளித்திருப்பதாகவும் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான். அப்படியானால் மனிதன் அனுபவிக்க முடியாதவாறு அல்லாஹ் அவற்றை எப்படி ஹராமாக்கியிருக்க முடியும்? ஆகவே எல்லா பொருட்களும் ஹலாலானவை என்பதுதான் அடிப்படையாகும். இவற்றுள் சிலவற்றை மட்டுமே சில காரணங்களுக்காக அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான்.

இஸ்லாமிய ஷரீஆவில் ஹராத்தின் வட்டம் மிகக் குறுகியதாகவும், ஹலாலின் வட்டம் மிக விரிந்ததாகவும் காணப்படுகின்றது. ஏனெனில் ஹராமானவற்றைப் பற்றி விளக்கும் தெளிவானதும், நம்பகமானதுமான சட்டவசனங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஹலால் ஹராம் என்று தெளிவாகக் குறித்துக் காட்டும் சட்டவசனங்கள் இல்லாத போது அத்தகைய விடயங்கள் பொதுவாக முபாஹ்; - ஆகுமானவை யாகவே கொள்ளப்படும். இதுபற்றி விளக்கும் சில ஹதீஸ்களை கீழே நோக்குவோம்.

''அல்லாஹ் தனது வேதத்தில் ஹலாலாக்கிய விடயங்களே ஹலாலாகும். அவன் ஹராமாக்கியவையே ஹராமாகும். அவன் எதுவும் சொல்லாது விட்டவை, மௌனம் சாதித்தவை அவன் மன்னித்து சலுகையாகத் தந்தவையாகும். அல்லாஹ் சலுகை யாகத் தந்;தவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ் மறக்கக் கூடியவனல்ல.'' இவ்வாறு கூறிய நபியவர்கள் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.''உமது இரட்சகன் மறக்கக் கூடியவனல்ல'' (மர்யம்: 64) (ஹாகிம், பஸ்ஸார்)

நபி (ஸல்) அவர்களின் மற்றுமொரு ஹதீஸும் இங்கு மேற்கோள் காட்டத்தக்கதாகும்.
''அல்லாஹ் கடமைகளை விதித்துள்ளான். அவற்றை நீங்கள் எடுத்து நடக்காது பாழ்படுத்தி விட வேண்டாம். வரையறை களை விதித்து ள்ளான். அவற்றை மீறி விடாதீர்கள். சிலவற்றை ஹராமாக்கியுள்ளான். அவற்றை செய்துவிடாதீர்கள். மறதியா கவன்றி உங்கள் மீது கொண்ட அருளின் காரணமாக சிலவற்றைப் பற்றி பேசாது விட்டுள்ளான். அவற்றைப் பற்றி தேடித் திரியாதீர்கள்.'' (தாரகுத்னி)

அல்லாஹ் ஹராமாக்கியவை எவை என்பதை அறிந்து கொண்டால் அவை தவிர்ந்த அனைத்தும் ஹலாலே என்பது இந்த நபி மொழிகளில் இருந்து தெளிவாகின்றது. வணக்க வழிபாடுகள் அல்லாத அனைத்துக்கும் இந்த விதி பொருந்தும். இஸ்லாமிய சட்டவழக்கில் இபாதாத் அல்லாதவை ஆதாத், முஆமலாத் என அழைக்கப்படுகி;ன்றன. இத்தகைய அம்சங்களின் அடிப்படை, பொதுவாக ஆகுமானவை என்று கொள்ளப்படல் வேண்டும்.

ஆயினும் இபாதாத் எனும் வணக்க வழிபாடுகள் இந்த விதியில் இருந்து வேறுபடுகின்றன. அவற்றுக்கு வஹியே அடிப்படையாகும். இது பற்றி நபி (ஸல்) அவர்கள்
''எமது விடயத்தில் (இஸ்லாமிய விவகாரங்களில்) அதில் இல்லாத புதிய ஒன்றை யார் உருவாக்குகின்றாரோ அது ஏற்கத்தக்க தல்ல மறுக்கப்படக் கூடியதாகும''; என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

சன்மார்க்கத்துடன் தொடர்பான இரு முக்கிய உண்மைகள் இருக்கின்றன.

1. அல்லாஹ் மட்டுமே இபாதத்துக்குரியவன். (வணங்கப்படக்கூடியவன்)
2. அவன் வகுத்த சட்டங்களின் வழிநின்றே அவனை வணங்க வேண்டும்.

புதிதாக ஓர் இபாதத்தை எவர் தோற்றுவித்தாலும் அது வழிகேடாகக் கணிக்கப்பட்டு மறுக்கப்படும். ஏனெனில் அல்லாஹ் மட்டுமே வணக்க வழிபாடுகளை உருவாக்கும் தனியுரிமை பெற்றவன். மனிதர்கள், அல்லாஹ் தான் நேரடியாகவோ தன் ரஸூலின் ஸுன்னா மூலமோ உருவாக்கிய அந்த இபாதத்துக்களின் மூலமே அவனை வணங்க வேண்டும்.

ஆனால் முஆமலாத், ஆதாத் விடயங்களை பொறுத்தவரையில் மனிதர்களே அவற்றை உருவாக்குகின்றார்கள். அல்லாஹ் திருத்தி, ஒழுங்குபடுத்தி சிலவற்றை ஏற்று வேறு சிலவற்றை நிராகரிக்கும் வகையிலேயே இப்பகுதியில் சட்டம் இயற்றுகின்றான்.

எனவே குர்ஆன் ஸுன்னாவை உள்ளடக்கிய வஹி, எதுவும் குறிப்பிடாது விட்ட ஒரு செயல் ஹராம் அல்ல என்பதும், அக்குறித்த செயல் குர்ஆன் ஸுன்னாவின் நேரடி ஆதாரத்தின் மூலமோ, துணை மூலாதாரம் ஒன்றின் மூலமோ தடுக்கப்படாத வரை அதனைச் செய்ய முடியும் என்பதும் தெளிவாகின்றது.

ஓர் இபாதத் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே உருவாக்கப்படல் வேண்டும். ஓர் ஆதத் அல்லாஹ்வின் கட்டளையின் ஊடாகவே ஹராம் ஆக்கப்படல் வேண்டும் என்ற சட்டவிதி இந்த அடிப்படையிலேயே நிறுவப்படுகின்றது.

We have 66 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player