ஹலால் ஹராம் சட்டவிதிகள்
Last Updated (Tuesday, 30 November 1999 00:00) Tuesday, 28 October 2008 10:39
ஹலால் ஹராம் சட்டவிதிகள்இனி ஹலால் ஹராம் தொடர்பான இஸ்லாத்தின் கண்ணோட்டத்தையும், அதேநேரம் ஒன்றை ஹலால் என்றோ அல்லது ஹராம் என்றோ தீர்மானிப்பதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்ற அளவுகோள்கள், பெறுமானங்கள், காரணங்கள் முதலானவற்றை புரிந்து கொள்ளும் நோக்குடன் அவை தொடர்பான சில சட்ட விதிகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்விதிகளை ஆரம்பகால இமாம்களும் இஸ்லாமிய அறிஞர்களும் குர்ஆன் ஸுன்னாவின் ஒளியில் மிகவும் துல்லியமாக அமைத்துத் தந்துள்ளார்கள். ஒரு சட்டவிதியை பிரயோகித்து பல பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் வகையில் ஒவ்வொரு சட்டவிதியும் செறிவானதாகவும் ஆழமானதாகவும் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
சட்ட விதிகள்
அடிப்படையில் எல்லாம் ஆகுமானவையே
இது ஹலால் ஹராம் தொடர்பாக இஸ்லாம் வகுத்துள்ள முதல் அடிப்படை விதியாகும். அடிப்படையில் அல்லாஹ் படைத்த அனைத்துப் பொருட்களும் அதனால் பெறப்படும் பயன்களும் ஹலாலானவை முபாஹானவை அதாவது ஆகுமானவை. தெளிவான நம்பகமான ஒரு சட்டவசனம் ஹராமெனக் காட்டுகின்ற ஒன்றே ஹராம் எனக் கொள்ளப்படும். எனவே ஒன்றை ஹலால் என்று கூறுவதற்கு ஆதாரம் அவசியப்படுவதில்லை. ஹராம் என்று சொல்லுகின்ற போதே அது ஆதாரத்தின் மூலம் நிறுவப்படல் வேண்டும். பொதுவாக பொருட்கள், பயன்பாடுகள் அடிப்படையில் ஹலாலானவையே என்ற இந்த விதிக்கு ஆதாரமாக இஸ்லாமிய அறிஞர்கள் பல அல்குர்ஆன் வசனங்களை முன்வைக்கின்றார்கள். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவை:
அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காக படைத்தான். (பகரா: 29)
வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் தனது அருளால் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்ஜாஸியா: 13)
வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருப்பதையும், வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உங்களுக்கு அவன் அருள்களை வாரி வழங்கியிருப்பதையும் நீங்கள் அவதானிக்கவில்லையா? (லுக்மான்: 20)
அல்லாஹ் மனிதனுக்காகப் பொருட்களையெல்லாம் படைத்ததாகவும், அவற்றை அவனுக்கு வசப்படுத்திக் கொடுத்திருப்பதாகவும், அருளாக அளித்திருப்பதாகவும் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான். அப்படியானால் மனிதன் அனுபவிக்க முடியாதவாறு அல்லாஹ் அவற்றை எப்படி ஹராமாக்கியிருக்க முடியும்? ஆகவே எல்லா பொருட்களும் ஹலாலானவை என்பதுதான் அடிப்படையாகும். இவற்றுள் சிலவற்றை மட்டுமே சில காரணங்களுக்காக அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான்.
இஸ்லாமிய ஷரீஆவில் ஹராத்தின் வட்டம் மிகக் குறுகியதாகவும், ஹலாலின் வட்டம் மிக விரிந்ததாகவும் காணப்படுகின்றது. ஏனெனில் ஹராமானவற்றைப் பற்றி விளக்கும் தெளிவானதும், நம்பகமானதுமான சட்டவசனங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஹலால் ஹராம் என்று தெளிவாகக் குறித்துக் காட்டும் சட்டவசனங்கள் இல்லாத போது அத்தகைய விடயங்கள் பொதுவாக முபாஹ்; - ஆகுமானவையாகவே கொள்ளப்படும். இதுபற்றி விளக்கும் சில ஹதீஸ்களை கீழே நோக்குவோம்.
அல்லாஹ் தனது வேதத்தில் ஹலாலாக்கிய விடயங்களே ஹலாலாகும். அவன் ஹராமாக்கியவையே ஹராமாகும். அவன் எதுவும் சொல்லாது விட்டவை, மௌனம் சாதித்தவை அவன் மன்னித்து சலுகையாகத் தந்தவையாகும். அல்லாஹ் சலுகையாகத் தந்;தவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ் மறக்கக் கூடியவனல்ல. இவ்வாறு கூறிய நபியவர்கள் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள். உமது இரட்சகன் மறக்கக் கூடியவனல்ல. (மர்யம்: 64) (ஹாகிம், பஸ்ஸார்)
நபி (ஸல்) அவர்களின் மற்றுமொரு ஹதீஸும் இங்கு மேற்கோள் காட்டத்தக்கதாகும்.
அல்லாஹ் கடமைகளை விதித்துள்ளான். அவற்றை நீங்கள் எடுத்து நடக்காது பாழ்படுத்தி விட வேண்டாம். வரையறைகளை விதித்துள்ளான். அவற்றை மீறி விடாதீர்கள். சிலவற்றை ஹராமாக்கியுள்ளான். அவற்றை செய்துவிடாதீர்கள். மறதியாகவன்றி உங்கள் மீது கொண்ட அருளின் காரணமாக சிலவற்றைப் பற்றி பேசாது விட்டுள்ளான். அவற்றைப் பற்றி தேடித் திரியாதீர்கள். (தாரகுத்னி)
அல்லாஹ் ஹராமாக்கியவை எவை என்பதை அறிந்து கொண்டால் அவை தவிர்ந்த அனைத்தும் ஹலாலே என்பது இந்த நபி மொழிகளில் இருந்து தெளிவாகின்றது. வணக்க வழிபாடுகள் அல்லாத அனைத்துக்கும் இந்த விதி பொருந்தும். இஸ்லாமிய சட்டவழக்கில் இபாதாத் அல்லாதவை ஆதாத், முஆமலாத் என அழைக்கப்படுகி;ன்றன. இத்தகைய அம்சங்களின் அடிப்படை, பொதுவாக ஆகுமானவை என்று கொள்ளப்படல் வேண்டும்.
ஆயினும் இபாதாத் எனும் வணக்க வழிபாடுகள் இந்த விதியில் இருந்து வேறுபடுகின்றன. அவற்றுக்கு வஹியே அடிப்படையாகும். இது பற்றி நபி (ஸல்) அவர்கள்:
எமது விடயத்தில் (இஸ்லாமிய விவகாரங்களில்) அதில் இல்லாத புதிய ஒன்றை யார் உருவாக்குகின்றாரோ அது ஏற்கத்தக்க தல்ல மறுக்கப்படக் கூடியதாகும் என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
சன்மார்க்கத்துடன் தொடர்பான இரு முக்கிய உண்மைகள் இருக்கின்றன:
1. அல்லாஹ் மட்டுமே இபாதத்துக்குரியவன். (வணங்கப்படக்கூடியவன்)
2. அவன் வகுத்த சட்டங்களின் வழிநின்றே அவனை வணங்க வேண்டும்.
புதிதாக ஓர் இபாதத்தை எவர் தோற்றுவித்தாலும் அது வழிகேடாகக் கணிக்கப்பட்டு மறுக்கப்படும். ஏனெனில் அல்லாஹ் மட்டுமே வணக்க வழிபாடுகளை உருவாக்கும் தனியுரிமை பெற்றவன். மனிதர்கள், அல்லாஹ் தான் நேரடியாகவோ தன் ரஸூலின் ஸுன்னா மூலமோ உருவாக்கிய அந்த இபாதத்துக்களின் மூலமே அவனை வணங்க வேண்டும்.
ஆனால் முஆமலாத், ஆதாத் விடயங்களை பொறுத்தவரையில் மனிதர்களே அவற்றை உருவாக்குகின்றார்கள். அல்லாஹ் திருத்தி, ஒழுங்குபடுத்தி சிலவற்றை ஏற்று வேறு சிலவற்றை நிராகரிக்கும் வகையிலேயே இப்பகுதியில் சட்டம் இயற்றுகின்றான்.
எனவே குர்ஆன் ஸுன்னாவை உள்ளடக்கிய வஹி, எதுவும் குறிப்பிடாது விட்ட ஒரு செயல் ஹராம் அல்ல என்பதும், அக்குறித்த செயல் குர்ஆன் ஸுன்னாவின் நேரடி ஆதாரத்தின் மூலமோ, துணை மூலாதாரம் ஒன்றின் மூலமோ தடுக்கப்படாத வரை அதனைச் செய்ய முடியும் என்பதும் தெளிவாகின்றது.
ஓர் இபாதத் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே உருவாக்கப்படல் வேண்டும். ஓர் ஆதத் அல்லாஹ்வின் கட்டளையின் ஊடாகவே ஹராம் ஆக்கப்படல் வேண்டும் என்ற சட்டவிதி இந்த அடிப்படையிலேயே நிறுவப்படுகின்றது.
ஹலாலாக்குவதும் ஹராமாக்குவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமுரிய ஏக அதிகாரமாகும்
இந்த சட்டவிதி, ஒன்றை ஹலால் என்றோ அல்லது ஹராம் என்றோ தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது எனக் கூறுகின்றது. மனிதர்களில் எவருக்கும் இந்த உரிமை வழங்கப்படவில்லை.
மதத்தலைவர்களுக்கோ, மன்னர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ ஹலால் ஹராமை நிர்ணயிக்கும் உரிமை இல்லை என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இவ்வாறு நடந்து கொள்பவர் அல்லாஹ்வின் ருபூபிய்யத் என்ற தனித்துவமான பண்பில் கைவைத்தவராகக் கருதப்படுவதுடன் அவரை ஏற்றுக்கொள்வோர் அவரை அல்லாஹ்வுக்கு இணை வைத்தோராகவும் கொள்ளப்படுவார்கள். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
'அல்லாஹ் அனுமதிக்காதவற்றை மார்க்கமாக இயற்றித்தரும் அல்லாஹ்வுக்கு இணையாகக் கொள்ளத்தக்கவர்கள் அவர்களுக்கு இருக்கின்றார்களா?'
தமது மதகுருமாருக்கு சட்டமியற்றும் அதிகாரத்தைக் கொடுத்த அஹ்லுல் கிதாப்களை அல்குர்ஆன் கண்டிக்கின்றது. அவர்கள் (அஹ்லுல் கிதாப்கள்) அல்லாஹ்வை விட்டுவிட்டு தங்களது மதகுருமார்களை ரப்புகளாக எடுத்துக் கொண்டு விட்டனர். மஸீஹ் பின் மர்யமையும் ரப்பாக எடுத்துக் கொண்டனர். ஒரே இறைவனை இபாதத் செய்யுமாறே அவர்கள் ஏவப்பட்டனர். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூய்மையானவன். (தௌபா: 31)
சட்டமியற்றும் அதிகாரத்தில் தலையிட்ட முஷ்ரிக்களையும் அல்குர்ஆன் கண்டிக்கிறது.
அல்லாஹ் உங்களுக்கு உணவுப் பொருட்களாக இறக்கிய வற்றை நீங்கள் ஹராம் ஹலால் என்று விதித்துக் கொள்கிறீர்களா? (நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ் உங்களுக்கு இதனை அனுமதித்து உள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் இட்டுக்கட்டிச் சொல்கின்றீர்களா? (யூனுஸ்: 59)
உங்கள் நாவால் பொய்யாக இது ஹலால், இது ஹராம் எனக் கூறி அல்லாஹ்வின் மீது பொய்யாகப் புனைந்து கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைப்போர் வெற்றி பெறுவதில்லை. (அந்நஹ்ல்: 116)
இந்த வகையில் ஹலால் ஹராமை தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உள்ளது. அல்குர்ஆன் மூலமோ அல்லது தனது தூதரின் ஊடாகவோ இப்பணியை அல்லாஹ் செய்கின்றான் என்பதை இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் (புகஹாக்கள்) தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். தமது பணி இறை சட்டங்களை விளக்குவதே அன்றி சட்டமியற்றுவதல்ல என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.
அல்லாஹ் ஹலாலாக்கியவை எவை ஹராமாக்கியவை எவை என்பதை தெளிவுபடுத்துவதோடு அவர்களின் பணி மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்து இருந்தது.
உங்களுக்கு ஹராமாக்கியவற்றை அவன் உங்களுக்கு விளக்கியுள்ளான்.' (அன்ஆம்: 120)
இதனால்தான் அல்லாஹ்வின் இந்த அதிகாரத்தில் தலையிட்ட குற்;றத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயத்தில் பல இமாம்கள், அறிஞர்கள் தாம் பூரண தகுதியுடையோராக இருந்த நிலையிலும் பத்வா மார்க்கத் தீர்ப்புக்களை வழங்குவதில் பெரிதும் தயக்கம் காட்டினார்கள்.
தவறாகவேனும் ஹராத்தை ஹலாலாகவோ, ஹலாலை ஹராமாகவோ மாற்றிக் கூறிவிடுவோமோ என்ற பயத்தில் அடுத்தவரிடம் இப்பொறுப்பை சாட்டிவிட முயன்றார்கள்.
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் மாணவனான இமாம் அபூயூஸுப் கூறுவதாக இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறுகின்றார்கள்:
எமது ஆசிரியர்களான அறிஞர்கள் பலரையும் நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் அனைவரும் குர்ஆனில் மிகவும் தெளிவாக இருந்தால் அன்றி இது ஹலால், இது ஹராம் என்று பத்வா சொல்வதை வெறுத்தார்கள்.
ஒரு முக்கிய தாபிஊன்களில் ஒருவரான ரபீஃ இப்னு கைஸம் கூறியதாக இப்னுஸ் ஸாஇப் கூறுகின்றார்கள்:
அல்லாஹ் இதனை ஹலாலாக்கினான் அல்லது ஏற்றுக் கொண்டான் என்று கூறுவதையிட்டு நான் உங்களை எச்சரிக்கின்றேன். சிலவேளை நீங்கள் சொல்வது பிழையாக அமைந்து, அல்லாஹ் அதனை ஏற்காமல், நீ பொய் சொல்கின்றாய், நான் அதனை ஹலாலாக்கவில்லை ஏற்றுக்கொள்ளவும் இல்லை எனக் கூறக்கூடும். மேலும் அல்லாஹ் இதனை ஹராமாக்கினான் என்று நீங்கள் கூறுவதையும் நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் அல்லாஹ் அவரைப் பார்த்து, நீ பொய்யுரைத்து விட்டாய், நான் அதனை ஹராமாக்கவோ தடுக்கவோ இல்லை என்று கூறக்கூடும்.
இமாம் அபூ யூஸுப் (ரஹ்) தொடர்ந்தும் கூறுகின்றார்: எமது தோழர்களில் சிலர், கூபாவின் மிகப் பெரும் தாபிஈ சட்டஅறிஞர்களில் ஒருவரான இப்ராஹீம் அந்நகயீ தனது தோழர்கள் பற்றி பின்வருமாறு கூறியதாக அறிவிக்கின்றனர்:
அவர்கள் எதாவது ஒரு விடயத்தில் பத்வா சொன்னால், இது மக்ரூஹ், இதைச் செய்வதில் தவறில்லை என்றே கூறுவார்கள்ளூ இது ஹலால் இது ஹராம் என்று கூறுவது எவ்வளவு பாரதூரமான வார்த்தை என்று அவர்கள் சொல்வார்கள்.
இமாம் இப்னு தைமியா கூறியதாக இமாம் இப்னு முப்லிஹ் கூறுகின்றார்கள்: 'ஸலபுஸ்ஸாலிஹீன்கள் ஹராம் என்று திட்டவட்டமாகத் தெரிந்தவற்றையே ஹராம் என்று கூறுவார்கள்.'
இந்த வகையில்தான் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) போன்ற இமாம்கள் ஏதாவது ஒரு விடயம் பற்றிக் கேட்கப்பட்டால் ஹராம் என்ற வார்த்தையைத் தவிர்த்து இதனை நான் வெறுக்கின்றேன், இது எனக்குத் திருப்தியாகப்படவில்லை, நான் இதை விரும்பவில்லை போன்ற வார்த்தைகளையே பிரயோகிப்பார்கள்.
இமாம் அபூ ஹனீபா, இமாம் மாலிக் போன்றவர்களும் இதே மனப் போக்கைக் கொண்டிருந்தார்கள் என்பதைக் காணமுடிகின்றது.
