பித்அத்கள் தோன்றுவதற்கான காரணங்கள்;

பித்அத்கள் தோன்றுவதற்கான காரணங்கள்;

பித்அத்கள் தோன்றுவதற்குக் காரணங்களாக அமைபவை பல. அவற்றைக் கணக்கிட்டுக் குறிப்பிடுவது சிரமமானதாகும். அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகிறது:

''நிச்சயமாக இது தான் நேரான வழியாகும். அதனையே நீங்கள் பின்பற்றுங்கள். மற்றவைகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் பரிசுத்தவான்களாவதற்காக இறைவன் இவற்றை உங்களுக்கு நல்லுபதேசம் செய்தான்.''(6:153)

இத்திருவசனத்தை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) அறிவிக்கும் நபிமொழி மேலும் விளக்குகிறது. 'ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் எமக்கு ஒரு கோட்டைக் கீறிக் காட்டி, 'இதுதான் அல்லாஹ்வின் வழி' எனக் குறிப்பிட்டார்கள். பின்னர் அதன் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இன்னும் பல கோடுகளைக் கீறிக் காண்பித்து, 'இவைகள் பல வழிகளாகும்; இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஷைத்தான் இருந்துகொண்டு அதன்பால் அழைத்துக்கொண்டிருக்கின்றான்.' எனக் கூறிவிட்டு மேற்குறிப்பிட்ட வசனத்தை ஓதினார்கள்.

இவ்விளக்கத்திலிருந்து அல்லாஹ்வின் வழி - நேர்வழி - ஒன்றாக இருப்பினும், வழிகேட்டினதும் பித்அத்களினதும் வழிகள் பலவாக, வரையறைகளுக்கு உட்படாதவைகளாக இருக்கின்றன என்பதனைப் புரிந்துகொள்ளலாம். ஆயினும், இதுபற்றி ஆழமாக ஆராய்ந்த இஸ்லாமிய அறிஞர்கள், பித்அத்கள் உருவாவதற்குரிய பிரதான காரணங்களை விளக்கியுள்ளனர். இவ்வகையில் இமாம் ஷாதிபீ (றஹ்) தனது அல் இஃதிஸாம் எனும் நூலில் பல காரணங்களைக் குறிப்பிட்டு, அவைபற்றி அழகாக விளக்கியுமுள்ளார். அவ்வாறே பித்அத் பற்றி நீண்டதோர் ஆய்வை மேற்கொண்டு, அத்துறையில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட கலாநிதி இஸ்ஸத் அலி அதிய்யாவும் தனது அல் - பித்ஆ எனும் ஆய்வு நூலில் மேலும் சில காரணங்களைக் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். நவீன இஸ்லாமிய உலகின் தலைசிறந்த அறிஞர்களுள் ஒருவராக மதிக்கப்படுகின்ற முஹம்மத் அல்- கஸ்ஸாலியும், பித்அத்களின் தோற்றத்திற்கான இரு அடிப்படைக் காரணங்களை விளக்கியுள்ளார். காரணங்களைக் கீழ்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

   1. அறியாமை
   2. பகுத்தறிவின் மீதுள்ள நம்பிக்கையும் நல்லெண்ணமும்
   3. சுயவிருப்பு வெறுப்புகளுக்கு இடம்கொடுத்தல் (மனோ இச்சையைப் பின்பற்றல்)
   4. அல்முதஷாபிஹ் எனும் புலனுறுப்புக்களால் புரிய முடியாதவற்றை ஆராய்ந்து பின்பற்ற முயலல்.
   5. பாவங்கள் செய்வதிலிருந்து பாதுகாப்புப்; பெறாதோரை ஏற்று அங்கீகரித்துப் பின்பற்றுதல்.
   6. ஷரீஅத்தில் சட்ட மூலாதாரமாகக் கொள்ள முடியாத ஒன்றை ஏற்றுச் செயற்படல்.
   7. சில ஹதீஸ்களை தவறாக விளங்கிக்கொள்ளல்.
   8. தீனைப் பின்பற்றுவதில் வரம்பு மீறிய தீவிரப் போக்கைக் கடைப்பிடித்தல்.

இக்காரணங்கள் ஒவ்வொன்றும் சுருக்கமாகக் கீழே ஆராயப்படுகின்றன.

1.அறியாமை:

மார்க்கத்தைப் பற்றித் தெளிவில்லாதவர் அது பற்றிப் பேசுவதனாலும் அதனைக் கற்பிப்பதனாலும், அது தொடர்பான தீர்ப்புக்களை வழங்குவதனாலும் பித்அத்கள் தோன்ற ஏதுவாகிறது. அறியாமை எனும்போது கீழ்வரும் விடயங்கள் பற்றிய தெளிவின்மையையே குறிக்கும்.

   1. மொழியின் போக்கு அதன் பிரயோகங்கள் பற்றிய தெளிவின்மை
   2. ஸுன்னா பற்றிய அறியாமை

அல்குர்ஆன் தூய்மையான அறபு மொழியில் உள்ள வேத நூலாகும். வேறெந்த மொழிக்கும் இல்லாத தனித்துவமான பண்புகளையும் நுணுக்கங்களையும் தன்னகத்தே கொண்ட அம்மொழி, இம் மொழிக்கே உரிய பண்புகள், நுணுக்கங்கள் பற்றி அறிஞர்கள் பலர் விளக்கியுள்ளனர். குறிப்பாக, இமாம் அஷ்ஷாபிஈ தனது அர்ரிஸாலா எனும் நூலில் இது பற்றி விளக்கியுள்ளார். ஓர் இடத்தில் கீழ்வருமாறு அவர் குறிப்பிடுகிறார்: 'அறபிகளின் மொழி, மொழிகளிலே மிக விரிவானதாகவும் அதிகமான சொற்களைக் கொண்டதாகவும் விளங்குகிறது. நாம் அறிந்தவரையில் இம்மொழி பற்றிய முழுமையான ஞானத்தை நபிமார்களைத்தவிர ஏனைய மனிதர்களால் பெற்றுக்கொள்வதென்பது சிரமமானது.'

அறபு மொழியின் நுணுக்கங்களை விளக்கவந்த இமாம் இப்னு குதைபா இரு காரணங்களை எடுத்துக் காட்டுகிறார்.

    ழூ ஹாதா காதிலுன் அகீ
    ழூ ஹாதா காதிலு அகீ

இவ்விரு வாக்கியங்களும் குறியீட்டால் மாத்திரமே வேறுபடுகின்றன. முதல் வாக்கியத்தில் 'காதிலுன்' என்றும் இரண்டாம் வாக்கியத்தில் 'காதிலு' என்றும் வந்திருப்பதனை அவதானிக்கலாம். இச்சிறிய மாற்றம் வசனத்தின் பொருளையே மாற்றி விடுகிறது. முதலாவது வசனத்தின்படி, 'இவன் எனது சகோதரனை இன்னும் கொலை செய்யவில்லை' என்ற பொருளும், இரண்டாம் வாக்கியத்தின்படி 'இவன் எனது சகோதரனைக் கொலைசெய்துவிட்டான்' எனும் பொருளும் பெறப்படுகின்றன.

இமாம் இப்னு குதைபா குறிப்பிடும் அடுத்த உதாரணம் கீழ்வருமாறு:
'பலா யஹ்சுன்க கவ்லுஹும் இன்னா நஃலமு மா யுஸிர்ரூன வமா யுஃலினூன்' இது ஒரு குர்ஆன் வசனமாகும். இதன் பொருள், 'நபியே அவர்களது பேச்சு உமக்குக் கவலையைத் தர வேண்டாம், நிச்சயமாக நாம் அவர்கள் இரகசியமாகக் கூறுபவற்றையும் பகிரங்கமாகக் கூறுபவற்றையும் அறிந்தே வைத்திருக்கிறோம்' என்பதாகும்.

இவ்வசனத்தில் 'இன்ன' என வரும் சொல்லை 'அன்ன' என்று வாசித்துவிட்டால் வசனத்தின் பொருளே தலைகீழாக மாறிவிடும். இந்த நிலையில் வசனத்தின் பொருள் 'நாங்கள் அவர்கள் ரகசியமாகக் கூறுபவற்றையும் அறிந்தே இருக்கிறோம் என்று அவர்கள் கூறுவது உங்களுக்குக் கவலைதராமல் இருக்கட்டும்'  என மாறிவிடும். இவ்வுதாரணத்தைக் கூறும் இமாம், வேண்டுமென்றே ஒருவர் மேற்குறிப்பிட்டவாறு 'இன்ன' என்பதை 'அன்ன' என்று வாசித்தால் (மிகப் பெரியதொரு பொருள் மாற்றம் ஏற்படுவதனால்) காபிராகிவிடுகிறார் என்ற கருத்தையும் கூறுகிறார்.

இத்தகைய காரணங்களினால்தான், ஷரீஅத் பற்றிப் பேசுபவர் அறபு மொழியை துறைபோகக் கற்றிருத்தல் வேண்டும் என அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் வலியுறுத்துகின்றனர். இது பற்றி இமாம் ஷாதிபீ குறிப்பிடும் போது, 'ஷரீஆ சார்ந்த எவ்விடயம் பற்றி ஒருவர் பேசுவதாயினும், அவர் அறபியாகவோ அல்லது அறபு மொழியை அறபிகளின் தரத்தை அடையும் அளவுக்கோ அல்லது அறபு மொழி மேதைகளான கலீல், ஸீபவைஹி, அல்கிஸாஈ, அல் பர்ராஃ போன்றோர்களின் தரத்தை அடையுமளவுக்கோ கற்றறிந்து அறபியை ஒத்தவராகவோ இருத்தல் வேண்டுமெனக் கூறுகிறார்.

அறபு மொழிப் பாண்டித்தியம் இல்லாத நிலையில் மார்க்கத் தீர்ப்புக்களை வழங்க முன்வந்த பலர், பித்அத்கள் பல உருவாவதற்குக் காரணமாக அமைந்தனர். அறபு இலக்கணம் பற்றிய போதிய அறிவில்லாததன் காரணத்தினால் பலதார மணம் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் வசனத்தைப் பிழையாக விளங்கி, ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஒன்பது பெண்களை மனைவியராக வைத்துக்கொள்ள முடியும் என்ற பித்அத்தான கருத்தை வெளியிட்டனர். அறபுப் பதங்களுக்குச் சரியான பொருளை விளங்கிக்கொள்ளாத சிலர் ஹராமாக்கப்பட்ட சில உணவுகளைக் குறிப்பிடும் அல்குர்ஆன் வசனத்தில் வரும் 'லஹ்ம்' எனும் பதத்தைப் பிழையாக விளங்கி, பன்றி இறைச்சி மாத்திரமே புசிப்பதற்கு ஹராமானதென்றும், அதன் கொழுப்பு ஹராமானதல்ல என்றும் கூறினர். 'லஹ்ம்' என்ற பதம் இறைச்சி, கொழுப்பு எனும் இரு பொருளையும் கொடுக்கும்) 'வஜ்ஹ்' என்ற அறபுப் பதத்திற்கு முகம் என்ற பொருளை மாத்திரம் அறிந்திருந்த சிலர், அல்லாஹ் உட்பட அனைவரும், அனைத்துப் பொருட்களும் அழிந்துவிடும் என்றும் அல்லாஹ்வின் முகம் மாத்திரம் இறுதியில் எஞ்சியிருக்கும் என்றும் கூறினர். (வஜ்ஹ் என்ற பதம் ஒன்றை - ஒருவரை மொத்தமாகக் குறிக்கவும் பிரயோகிக்கப்படுகின்றது.) அறபுமொழிப் புலமை இன்மையால் தோன்றிய பித்அத்களுக்குச் சிறந்த உதாரணங்களாக ஸுன்னாவை மறுத்தல், அனைத்திறைக் கொள்கையை ஏற்றல் ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம். அறபு மொழி பற்றிய அறிவில்லாதபோது தீனில் பேரழிவும் பெரும் குழப்பமும் ஏற்படும் என்ற கருத்தை விளக்குகின்ற இமாம் ஹஸனுல் பஸரி, பித்அத்களை உருவாக்குவோர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது 'அஜமித் தன்மைதான் அவர்களை அழித்தது' என்கிறார்.

ஸுன்னா பற்றிய அறியாமையும் பித்அத்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இஸ்லாமிய சட்டவாக்கத்தில் ஸுன்னா வகிக்கும் பங்கு பற்றித் தெளிவில்லாதபோதும், ஹதீஸின் பிரிவுகள், தராதரங்கள் பற்றிய விளக்கம் இல்லாதபோதும் பித்அத்கள் தோன்றுகின்றன. இந்த வகையில் தோன்றிய ஒரு பித்அத்தான பிரிவினரே கராமிய்யாக்கள். இவர்கள் மார்க்கத்துக்கு முரணில்லாத வகையில், அதற்குச் சார்பான ஹதீஸ்களைப் புனைந்துரைப்பதைத் தமக்கு ஆகுமாக்கிக் கொண்டனர். 'அஹ்லுல் குர்ஆன்' எனும் குர்ஆனை ஏற்று, ஸுன்னாவை ஓர் இஸ்லாமிய சட்ட மூலாதாரமாக ஏற்;க மறுக்கின்ற பித்அத்தான பிரிவினரையும் இங்கு குறிப்பிட முடியும். முதவாதிர் அல்லாத அனைத்து நபிமொழிகளையும் மறுக்கின்ற பித்அத்தான பிரிவும் ஸுன்னா பற்றிய தெளிவின்மையால் உருவான ஒன்றேயாகும்.

2. பகுத்தறிவுக்கு அளவு கடந்த முக்கியத்துவம் கொடுத்தல்

இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் கூறுகின்ற முடிவுகளுக்கு முரணாக, பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனடிப்படையில் முடிவுகளைப் பெற்றபோது பல பித்அத்கள் தோன்றுவதற்கு முஃதஸிலாக்களே பெரிதும் காரணமாக அமைந்தனர். இவர்கள் தமது பகுத்தறிவுக்கு முரணாகத் தெரிகின்ற ஹதீஸ்களை மறுத்தனர். இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டில் காணப்படும் பல அடிப்படைகளையே நிராகரித்தனர். அவற்றிற்கு வலிந்து பல பிழையான விளக்கங்களைக் கொடுத்தனர். இவர்களால் உருவான சில பித்அத்தான கருத்துக்கள் கீழ்வருமாறு:-

          ழ மறுமையில் அல்லாஹ்வைக் கண்களால் காணமுடியாது.
          ழ ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் உலகிற்கு வரப்போவதில்லை.
          ழ கப்றில்; வேதனை கொடுக்கப்படுவதில்லை.

மேலும், ஸிராத், மீஸான் போன்ற பகுத்தறிவினால் புரிந்துகொள்ள முடியாத, அகீதா தொடர்பான ஆதாரபூர்வமான பல அம்சங்களுக்கு பகுத்தறிவினடிப்படையில் பல பிழையான விளக்கங்களைக் கொடுத்தனர். இத்தகையோர் பற்றி ஷாஹ்; வலியுல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறார்: 'இந்த பித்அத்வாதிகள் பல இஸ்லாமிய சட்டங்களில், அவை பகுத்தறிவுக்கு முரணானவை என்று கூறி சந்தேகத்தை ஏற்படுத்தினர். பகுத்தறிவுக்கு முரணான அனைத்தும் மறுக்கப்பட வேண்டும் அல்லது அவற்றிற்குரிய விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இவ்வகையில்தான் கப்றின் வேதனையைப் பொறுத்தவரையில் அது புலன்களும் பகுத்தறிவும் ஏற்றுக்கொள்ளாத ஒன்று எனக் குறிப்பிட்டு அதனை மறுத்தனர். அவ்வாறே ஹிஸாப், ஸிராத், மீஸான் போன்றவை பற்றியும் மிகத் தூரமான விளக்கங்களைக் கூறியுள்ளனர்.' இஸ்லாமிய அறிஞர்கள் எப்போதும் பகுத்தறிவுவாதிகளை பித்அத்வாதிகளாகக் கருதிவந்திருப்பதனைக் காணமுடிகின்றது.

'எல்லாக் காலங்களிலும், அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் பகுத்தறிவு வாதிகளை பித்அத் வாதிகளாகக் கருதியதோடு, அவர்களை என்றும் இஸ்லாமிய அறிஞர்களாக எவரும் ஏற்றுக்கொண்டதில்லை' என இமாம் இப்னு அப்தில் பர் குறிப்பிடுகின்றார்.

3. மனோ இச்சையைப் பின்பற்றல் (சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமளித்தல்)

மனோ இச்சைக்கு வழிப்பட்டு நடந்துகொண்டமை பித்அத்கள் உருவாவதற்கு ஓர் அடிப்படைக் காரணமாக இருந்துவந்துள்ளது. பிரபல்ய நோக்கம், பொருளாதார நோக்கங்கள், எதிரிமீது கொண்ட காழ்ப்புணர்ச்சி, சீர்திருத்தம் செய்வதிலும் சம்பிரதாயங்களுக்கு முரணாக நடந்துகொள்வதிலும் பலருக்கிருந்த அச்சம் பல பித்அத்கள் தோன்றி வளர்வதற்கு வழிவகுத்தன. சுயவிருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுத்ததனால் வரலாற்றில் தோன்றிய பித்அத்தான பிரிவுகள் ஏராளம். அவை தமக்கென ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு, அதனை நிறுவும் விதத்தில் பல சந்தர்ப்பங்களில் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் வலிந்து விளக்கங்கள் கொடுத்தும், பிழையான விளக்கங்கள் கொடுத்தும் வந்ததுடன், இஸ்லாத்தின் மூலாதாரங்கள் தம் கொள்கைக்கு முற்றிலும்; முரணாக அமைகின்றபோது, அவற்றைத் துணிந்து பொய்ப்பித்து மறுக்கவும் பின்வாங்கவில்லை. இதுபற்றி இமாம் இப்னு தைமிய்யா பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 'நமது முன்னோர் குர்ஆனையும் ஈமானையும் பற்றிப்பிடித்திருந்தனர். ஆனால், உம்மத்தில் பிளவுகளும் பிரிவினைகளும் உருவானபோது பல குழுக்களாக மாறிய பிரிவினைவாதிகள், (உள்ரங்கத்தில்) தங்களுக்கான அடிப்படைகளாக குர்ஆனையும் ஈமானையும் கொள்வதற்குப் பதிலாக, தமது தலைவர்கள் உருவாக்கிய அடிப்படைகளில் நிலைத்திருந்ததுடன் அவற்றுடன் இணைந்து ஒத்துவருகின்றவற்றை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு முரண்படுகின்ற அனைத்துக்கும் வலிந்து விளக்கங்களைக் கொடுத்தனர்.குர்ஆனினதும் ஹதீஸினதும் நோக்கங்களோ நாட்டங்களோ இவர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானதாக இருக்கவில்லை.' பித்அத்தான ஒவ்வொரு பிரிவினரும் அல்குர்ஆனை விளங்குவதற்கும் விளக்குவதற்கும் தமக்கென ஒரு தனியான கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தமை இதற்குச் சிறந்த உதாரணமாகும். குர்ஆனைக் கொண்டு தத்தமது பிரிவின் அடிப்படைகளை நிறுவிக்கொள்வதே இச்செய்கையின் நோக்கமாக இருந்தது.

இதனால்தான் மேற்கூறிய போக்கினையுடைய அல்கவாரிஜ், முர்ஜிய்யா, கதரிய்யா, அஷ்ஷீஆ போன்ற பிரிவுகள் இஸ்லாமிய அறிஞர்களால் 'அஹ்லுல் பிதாஇ வல்- அஹ்வாஃ' (மனோ இச்சைகளுக்கு வழிப்பட்ட பித்அத்வாதிகள்) என அழைக்கப்படுகின்றன.

4. அல் முதஷாபிஹ் எனும் மனித அறிவுக்கும் புலனுறுப்புகளுக்கும் உட்படாத, மார்க்கம் தொடர்பான விடயங்களை ஆராய்தல்

இத்தகைய ஆராய்ச்சிகளினாலும் பல பித்அத்கள் உருவாகின்றன. இமாம் ஷாதிபீ 'முதஷாபிஹ்' என்பதிலும் இருவகைகள் காணப்படுவதாகக் கூறுகிறார். அவையாவன:-

    ழூ முதஷாபிஹ் ஹகீகீ
    ழூ முதஷாபிஹ் இளாபீ

முதற்பிரிவில் அடங்குபவற்றை முஜ்தஹித்களால் கூட விளங்கிக்கொள்ள முடியாது. அல்குர்ஆனில் இப்பிரிவைச் சேர்ந்த வசனங்கள் காணப்படுகின்றன. அவை பற்றி ஆராய்வது அனைவருக்கும் தடுக்கப்பட்டுள்ளது.

''இதில் (தெளிவாகவும்) குறிப்பாக(வும்) உள்ள அர்த்தத்தை உடைய வசனங்களும் இருக்கின்றன. இவை தாம் இவ்வேதத்தின் அடிப்படை. மற்றவை முதஷாபிஹானவையாகும்.'' (3:7)

இவ்வசனத்தில் வரும் முதஷாபிஹாத் என்பது இப்பிரிவையே குறிக்கும். இரண்டாம் பிரிவான முதஷாபிஹ் இளாபீயைப் பொறுத்தவரை அதனை ஆராயும் அதிகாரம் முஜ்தஹித்களுக்கு உண்டு. கீழ்வரும் நபி மொழியில் வந்துள்ள சந்தேகத்துக்குரிய விடயங்கள் என்பது இப்பிரிவைச் சார்ந்த முதஷாபிஹாத்களையே குறிக்கும். இவற்றை இஸ்லாமிய அறிஞர்கள் ஆராய்ந்து சரியான கருத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கின்றனர். ஷரீஅத் பற்றிய அறிவில்லாதோர் இப்பிரிவைச் சார்ந்த முதஷாபிஹாத்களை ஆராய்வது கூடாது.

'ஹலாலும் தெளிவானது, ஹராமும் தெளிவானது. அவையிரண்டுக்குமிடையே (ஷுபுஹாத்) சந்தேகத்துக்குரிய பல விடயங்களுமுண்டு.'

ஆராயக்கூடாத முதஷாபிஹ் ஹகீகியோடு தொடர்பானவற்றை ஆராய முனைந்ததனால் பல பித்அத்கள் உருவாயின. அல்லாஹ்வின் 'தாத்து' 'ஸிபாத்து'பற்றிய ஆய்வில் ஈடுபட்டதனால்தான் வரலாற்றில் முஜஸ்ஸிமாக்கள், முஷப்பிஹாக்கள், முஅத்திலாக்கள், பாத்தினிய்யாக்கள் பேன்ற பிரிவுகள் உருவாகின. இஸ்லாமிய அறிஞர்கள் இவ்வனைத்துப் பிரிவுகளையும் 'அஹ்லுல் பிதஇ வல்-அஹ்வாஃ' எனும் பிரிவிலேயே அடங்குகின்றனர். முதஸாபிஹ் ஹகீகியோடு தொடர்பானவற்றை ஆராய முனைந்ததனால்தான் 'வஹ்ததுல் வுஜூத்' எனும் வழிகெட்ட அனைத்திறைக் கோட்பாடும் தோற்றம் பெற்றதென்பது குறிப்பிடத்தக்கதாகும். அல்லாஹ்வின் தாத்து-ஸிபாத்து போன்ற முதஷாபிஹ் ஹகீகியோடு தொடர்பான விடயங்களை ஆராய்வதனை இமாம் கஸ்ஸாலி வன்மையாகக் கண்டிக்கிறார். ஒருவர் இத்தகைய ஆய்வில் ஈடுபடுவதைவிட வீண் விளையாட்டுக்களில் ஈடுபடுவது சிறந்தது எனக் கருதுகிறார். அதிலும் குறிப்பாக, ஒரு பாமரனைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வின் மூலத்தை அறியும் ஆராய்ச்சியில் ஈடுபடுவதை விட உடல் சார்ந்த பாவங்களில் ஈடுபடுவது அவனுக்குப் பாதுகாப்பானது எனக் கூறும் இமாம் கஸ்ஸாலி, அதற்கான காரணத்தைக் குறிப்பிடுகையில், வீண் விளையாட்டுக்களும் உடல் சார்ந்த குற்றங்களும், கூடியது பெரும்பாவமாக மாத்திரமே அமையும், ஆனால், இறைவன் பற்றிய ஆய்வின் இறுதி எல்லை ஷிர்க்காக அமைந்துவிடும். அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்க மாட்டான். ஏனையவற்றை தான் நாடியவர்களுக்கு மன்னித்து விடுகிறான் எனக் கூறுகிறார்.

5. பாவங்கள், தவறுகள், பிழைகள் ஆகியவற்றைச் செய்வதிலிருந்து பாதுகாப்புப் பெறாதோரை முற்றாக ஏற்றுப் பின்பற்றுதல்.

ஷீயாக்கள் தங்களது இமாம்களைப் பாவங்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்களாகக் கருதி அவர்களை முற்று முழுதாக ஏற்றுப் பின்பற்றியதனால், தங்களுடைய இமாம்களின் சொல், செயல் அனைத்தையும் மார்க்கமாகக் அவர்கள் கருதினர். இதனால் உருவான பித்அத்கள் எண்ணிலடங்காதவை. ஸுன்னத்து வல்ஜமாஅத்தைச் சேர்ந்த பலரும்கூட தங்களது ஆன்மீக வழிகாட்டிகளையும் இமாம்களையும் மேற்குறித்த நிலையில் வைத்து நோக்க முனைந்ததனால் பல பித்அத்கள் உருவாகின என்பதை மறுப்பதற்கில்லை. ஏனெனில், இத்தகையோர் தமது தலைவர்களின் கருத்துக்களுக்கு முரணாக அமைந்த அனைத்தையும் வழிகேடாகக் கருதியது மாத்திரமல்ல, இஸ்லாத்தில் மூலாதாரங்களுக்கு அக்கருத்துக்கள் முரணாக அமைந்தாலும், அவற்றை ஏற்றுப் பின்பற்றத் தயங்கவில்லை. 'தக்லீத்' எனும் இமாம்களைப் பின்பற்றும் நிலையை இஸ்லாம் அனுமதித்தாலும், இத்தகைய போக்கை அது அனுமதிப்பதில்லை. இஸ்லாம் அனுமதிக்கும் 'தக்லீத்' அமைப்பை விளக்கவந்த ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி, ஒருவர் தான் பின்பற்றுகின்ற முஜ்தஹிதான இமாம், சரியான முடிவுகளைப் பெறும் ஆற்றல் படைத்தவராக இருப்பது போலவே பிழையான முடிவுகளுக்கும் வரக்கூடியவர் என்பதை அறிந்த நிலையில் அவரைப் பின்பற்றுவதை இஸ்லாம் அனுமதித்துள்ள 'தக்லீத்'என்றும், தனது இமாமின் கருத்துக்கு முரணான ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கின்ற நேரத்தில் தக்லீதை விட்டுவிட்டு ஹதீஸை ஏற்றுப் பின்பற்றுவோராகவும் அவர் இருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார்.

இதனால்தான் எல்லா இமாம்களும் தங்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதைக் கண்டிக்கின்றனர்.

6. ஷரீஅத்தில் சட்ட மூலாதாரமாகக் கொள்ள முடியாத ஒன்றை ஏற்றுச் செயற்படல்

கனவு, கராமத்துக்கள் போன்றன ஷரீஅத்தில் சட்ட மூலாதாரங்களாகக் கொள்ளப்பட முடியாதவைகளாகும். சிலர் இத்தகையவற்றை அடிப்படையாக வைத்து வெளியிட்ட கருத்துக்களினாலும் பல பித்அத்கள் உருவாகின.

7. சில ஹதீஸ்களைத் தவறாக விளங்கிக் கொண்டமை

மார்க்கத்தில் நூதனங்களைப் புகுத்த விரும்புவோர், குறிப்பாக கீழ்வரும் இரு ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி நல்ல செயல்களை (அவற்றுக்கு மார்க்கத்தில் ஆதாரங்கள் இல்லையெனினும்) அங்கீகரித்து வணக்கங்களாகக் கருதுவது பிழையானதல்ல என்று அன்றும் இன்றும் கூறிவருகின்றனர். அவ்விரு ஹதீஸ்களும் கீழ்வருமாறு:-

    ழூ 'எவர் ஒரு நல்ல வழிமுறையை உருவாக்குகின்றாரோ அவருக்கு அதற்குரிய கூலியும் இறுதி நாள் வரை அதனை எடுத்து பின்பற்றி நடப்போருக்கான கூலியும் கிடைக்கும்.' (முஸ்லிம்)
    ழூ 'முஸ்லிம்கள் நல்லதாகக் கருதுகின்ற அனைத்தும் அல்லாஹ்விடத்திலும் நல்லதாகவே இருக்கும்.'(ஆதாரம்: அஹ்மத், அல்-பஸ்ஸார், அத்தபரானி, அல்- பைஹகீ)

உண்மையில், இவ்விரு ஹதீஸ்களும் எவ்வகையிலும் மார்க்கத்தில் புதியன புகுவதற்கு ஆதாரங்களாக அமையக்கூடியவையல்ல. எந்தவொரு நல்ல வழிமுறையாக இருந்தாலும், அதற்கு குர்ஆனிலோ, ஸுன்னாவிலோ ஓர் அடிப்படை இருத்தல் வேண்டும். ஒரு நல்ல வழிமுறை அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தெரியாமற்போக முடியாது.

குர்ஆனிலோ ஸுன்னாவிலோ அது இடம்பெறாமல் இருக்கவும் முடியாது. எனவே, ஒரு நல்ல வழிமுறையை வகுக்கின்றபோது குர்ஆனையோ ஹதீஸையோ அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். இதுவே முதலாவது ஹதீஸுக்குரிய சரியான விளக்கமாகும். கீழ்வரும் ஹதீஸ்கள்கூட இவ்வடிப்படையிலேயே விளக்கப்படல் வேண்டும்.

'எவர் ஒரு நேர்வழியின் பால் அழைக்கின்றாரோ அவருக்கு அதற்குரிய கூலியும் அதனைப் பின்தொடர்ந்தவருக்குக் கிடைக்கும் கூலியும் கிடைக்கும்' (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத், நஸாயி, திர்மிதி)

'ஒரு நன்மையான விடயத்தைக் காண்பித்துக் கொடுத்தவர் அதனைச் செய்தவர் போலாவார்.' (அல்-பஸ்ஸாhர்,அத்தபரானி).

இரண்டாவது ஹதீஸைப் பொறுத்தவரையில் அது ஒரு நபி மொழியல்ல. ஒரு ஸஹாபியான அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (றழி) அவர்களின் கருத்தாகும். இக்கருத்தை கூறி, தீனில் ஒன்றைக் கூட்டுவதற்கோ, குறைப்பதற்கோ உம்மத்தினருக்கு அவர் அனுமதி கொடுத்திருக்க முடியாது. ஏனெனில், இந் நபித் தோழர் மார்க்க விவகாரங்களில் சுயவிருப்பு வெறுப்புகளுக்கும் மனோ இச்சைக்கும் இடம்கொடுக்காதவர். உண்மையில், ஸஹாபாக்களினதும், பிற்கால முஜ்தஹித்களதும் இஜ்மாஃ எனும் ஏகோபித்த முடிவுகளின் தூய்மையை எடுத்துக் காட்டுவதற்காகவே இக்கருத்தை அவர் கூறியிருக்க வேண்டும். அல்லது மார்க்கத்துடன் நேரடித் தொடர்பில்லாத சாதாரண வாழ்க்கை விவகாரங்களுடன் தொடர்பானவற்றில் பெரும்பாலான முஸ்லிம்கள் எடுக்கின்ற முடிவு, அல்லாஹ்விடத்திலும் சரியானதாக இருக்கும் என்பதை விளக்குவதற்காக இக்கருத்தை அவர் கூறியிருக்கலாம். நன்மையான எவ்விடயமும் விடுபடாதவாறு, அனைத்தையும் உள்ளடக்கியதாகவே இஸ்லாம் மனித சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதில் இடம்பெறாத ஒன்று மனிதர்கள் நன்மையாகக் கருதினாலும் அவ்வாறு அமைய முடியாதென்பதே ஒரு முஸ்லிமின் நம்பிக்கையாகும். இவ்வகையில் மேற்குறிப்பிட்ட இரு ஹதீஸ்களை, பித்அத்களை உருவாக்குவதற்கு ஆதாரங்களாகக் கொள்வது பிழையானதாகும்.

8. மார்க்கத்தைப் பின்பற்றுவதில் அளவு கடந்த தீவிரப் போக்கைக் கடைப்பிடித்தல்

இஸ்லாம் வரம்புமீறிய தீவிரப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய போக்கைக் கடைப்பிடித்ததனால்தான் கிறிஸ்தவர்கள் முஷ்ரிகீன்களாக மாறினர் என அல்குர்ஆன் கூறுகிறது. 'வேதத்தை உடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறி தீவிரமாக நடக்காதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையையன்றி வேறெதனையும் கூறாதீர்கள்.'

அளவுகடந்த போக்கினால்தான் அல்லாஹ் ஆகுமாக்கிக் கொடுத்தவற்றைக் கூடத் தங்களுக்கு ஹராமாக்கிக்கொள்கின்றனர். இத்தகையோரை அல்குர்ஆன் கீழ்வருமாறு கண்டிக்கின்றது:

'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கித் தந்துள்ள நல்லவற்றை வரம்புமீறி ஹராமாக்கிக் கொள்ளாதீர்கள்.'

இத்தகைய தீவிரப் போக்கைக் கண்டிக்கும் பல நபிமொழிகளும் காணப்படுகின்றன. உதாரணமாக 'தீவிரவாதிகள் அழியட்டும்! தீவிரவாதிகள் அழியட்டும்!! தீவிரவாதிகள் அழியட்டும்!!!'

பின்வருவனவும் சமூகத்தில் பித்அத்கள் பரவக் காரணமாகின்றன:

    ழூ ஆலிம்கள் பித்அத்களை ஏற்றுச் செயற்படுவது:- இந்நிலையில் பொதுமக்களும் ஆலிம்கள் சரியானதையே செய்வர் என்று எண்ணி அவர்களைப் பின்பற்றி பித்அத்களை ஏற்றுச் செயற்பட முனைவர்.

    ழூ ஆலிம்கள் பித்அத்களை எதிர்க்காமல் மௌனம் சாதிப்பது: இந்நிலையில் பொதுமக்கள் அவர்களது மௌனத்தை அங்கீகாரமாகக் கருதி பித்அத்களைத் தொடர்ந்தும் செய்துவரல்.

    ழூ பித்அத்கள் சம்பிரதாயங்களாக மாறுதல்

    ழூ பித்அத்கள் மக்களது மனோ இச்சைகளுக்குச் சார்பானவைகளாக அமைதல்.

ஆலிம்களே பித்அத்களுக்கு வலிந்து விளக்கங்கள் கொடுத்து அவற்றை நியாயப்படுத்துவது.

உசாத்துணைகள்

   1. அல்-இஃதிஸாம்-இமாம் அஷ்ஷாதிபி- பாகம் 2, பக் 293-362
   2. அல்-முவாபகாத்- இமாம் அஷ்ஷாதிபி- பாகம் 3, பக். 54-56
   3. அல்-பித்ஆ-தஹ்தீதுஹா-வ- மௌகிபுல் இஸ்லாம்-மின்ஹா-கலாநிதி இஸ்ஸத் அலி அதிய்யா பக்;. 189-245
   4. இக்திழாஉஷ்ஸிராதில் முஸ்தகீம்- இமாம் இப்னு தைமியா, பக். 296-298
   5. லய்ஸ மினல் இஸ்லாம்- அஷ்ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி, பக். 64-71
   6. ஹுஜ்ஜதுல்லாஹில் பாலிகா- ஷாஹ் வலியுல்லாஹ் அத்திஹ்லவீ, பாகம் 1, பக் 17, 255
   7. மஜ்முஃ பதாவா இப்னு தைமியா- இமாம் இப்னு தைமியா- பாகம் 13, பக்; 58
   8. அர்ரிஸாலா- இமாம் அஷ்ஷாபிஈ- பக் 27
   9. அல்- இஹ்வானுல் முஸ்லிமூன்- அஹ்தாஸுன் ஸனஅதித்தாரீஹ் - கலாநிதி மஹ்மூத் அப்துல் ஹலீம், பாகம்-2, பக் 356
  10. அய்னல் கலல்- கலாநிதி யூஸுப் அல்- கர்ளாவி
  11. பீ ஆபாகித் தஆலிம்- ஸஈத் ஹவ்வா, பக் 100
  12. புஸுலுன் மினஸ்ஸியாஸதிஷ் ஷரஇய்யா பீ அத்தஃவதி இலல்லாஹ் - அப்துர் ரஹ்மான் அப்துல் ஹாலிக், பக் 107, 199-228

We have 9 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player