பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள்

பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள்

நடைமுறையில் பித்அத்களுக்கு எதிராக எவ்வாறு போராடுவது? அவற்றை ஒழிக்க முற்படும்போது கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் என்ன, அணுகு முறைகள் யாவை, என்பன பற்றி ஒரு தாஈ அறிந்திருப்பது அவசியமாகும்.

அனைத்து பித்அத்களும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் இரு வேறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. ஒரு சாதாரண பித்அத்கூட ஒழிக்கப்பட வேண்டும் என்பது வாதப் பிரதிவாதங்களுக்கு இடமற்ற உண்மையாகும். ஒருமுறை ஒருவர் தும்மிவிட்டு, 'அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்' எனக் கூறினார். இதனைச் செவிமடுத்த அப்துல்லாஹ் பின் உமர்(றழி) அம்மனிதரை நோக்கி 'அல்லாஹ்வின் தூதர் தும்மினால் இவ்வாறு சொல்வதற்கு எமக்குக் கற்றுத்தரவில்லையே. 'அல்ஹம்துலில்லாஹ்' என்று மாத்திரமே கூறுமாறு போதித்தார்கள்' எனக் கூறினார். இச்சம்பவத்தைக் குறிப்பிடும் ஷெய்க் கஸ்ஸாலி 'சிலரைப் பொறுத்தவரையில் ஓர் அற்ப விடயமாகக் கருதப்படுகின்ற இந்த நூதனத்தைக் கண்டும் கண்டிக்காமலிருப்பதை இப்னு உமர் (றழி) சரிகாணவில்லை. அம்மனிதர் ஸுன்னாவின் வரம்பை மீறாமல், அதில் எத்தகைய கூடுதலும் குறைத்தலும் செய்யாமலிருக்க வேண்டும், அதற்கு வழிகாட்டுவது தனது கடமையாகும் எனக் கருதினார். அன்று இப்னு உமர் (றழி) இந்த நூதனத்துக்கு இடம் கொடுத்திருந்தால் இன்று பித்அத் வாதிகள் தும்மிவிட்டுச் சொல்வதற்கு பல கட்டுரைகளையும் அதற்குப் பதில் சொல்வதற்கு அதைவிட நீளமான கட்டுரைகளையும் கூட உருவாக்கியிருக்கக்கூடும். இத்தகைய சிறிய விவகாரங்களில் ஏற்படும் நூதனங்கள்தான் படிப்படியாகப் பெரிய விடயங்களிலும் நூதனங்களை ஏற்படுத்தத் தூண்டுகோலாய் அமைகின்றன' எனக் குறிப்பிடுகிறார்.

ஆயினும் இஸ்லாமியப் பிரசாரத்தின்போது பித்அத்களை ஒழிப்பதில் கவனத்திற்கொள்ள வேண்டிய பல அம்சங்கள் உண்டு. இஸ்லாம், 'இல்ம்' எனும் அறிவாகவும் 'தஃவா' எனும் அழைப்பாகவும் 'தர்பிய்யா' எனும் பயிற்சியாகவும் 'மஃரகா' எனும் போராட்டமாகவும் மனித சமூகத்திற்கு முன்னால் வைக்கப்படுகின்றது. இஸ்லாத்தை எந்த அடிப்படையில் சமூகத்திற்கு முன்வைக்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கான அணுகுமுறைகள் வித்தியாசப்படும். இஸ்லாத்தை 'இல்ம்' ஆக வழங்குகின்ற பொழுது கைக்கொள்ளும் வழிமுறைகளைத்தான் அதனை தஃவாவாக வழங்கும் பொழுதும் கைக்கொள்ள வேண்டுமென்பதில்லை. தஃவாவின்போது கைக்கொள்ளும் அணுகுமுறைகளை விட்டும் வித்தியாசமாக 'தர்பிய்யா'வின்போது கைக்கொள்ளும் வழிமுறைகள் அமைய வேண்டி ஏற்படும். தஃவா, தர்பிய்யா, இல்ம் ஆகிய நிலைகளின் பொழுது கருத்திற்கொள்ளாத விடயங்களை, வித்தியாசமான வழிமுறைகளை 'மஃரகா' எனும் போராட்டத்தின்போது கடைப்பிடிக்க வேண்டி ஏற்படும்.

தஃவாவின்போது கவனத்திற்கொள்ள வேண்டிய அம்சங்களை - தஃவாவுக்கான முறைகளை இஸ்லாமிய ஷரீஅத் ஒரு தனித் தலைப்பின் கீழ் விளக்குகிறது. இஸ்லாமிய 'பிக்ஹ்'இல் (சட்டத்தில்) இது, 'அஸ்ஸியாஸதுஷ் ஷரஇய்யா பித்தஃவா' என்றும் 'அல் ஹிஸ்பா' என்றும் வழங்கப்படுகின்றன. இஸ்லாமிய பிக்ஹ் நூல்கள் இபாதாத், முஆமலாத், ஜியானாத் போன்ற அம்சங்களைத் தனியான தலைப்புக்களின் கீழ் ஆராய்வது போலவே மேலே குறிப்பிட்ட தலைப்புக்களின் கீழ் தஃவா முறை பற்றியும் ஆழமாக விளக்குகின்றன.

இவ்வகையில் தஃவாக் களத்தில் பித்அத்களை ஒழிக்க முற்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைக் கீழ்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

   1. நிதானம்
   2. முக்கியமானவற்றிற்க்கு முன்னுரிமை வழங்கல்.
   3. பித்அத்களை ஒழிப்பதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்த்தல்.
   4. ஒழித்த பித்அத்துக்குப் பிரதியீடாக அதனைவிடச் சிறந்த ஒன்றை வழங்க முயல்தல்.
   5. பித்அத்களை ஒழிப்பதைவிட ஸுன்னத்துக்களை உயிர்ப்பிப்பதில் கூடிய கவனம் செலுத்துதல்.
   6. பித்அத்துக்களை ஒழிப்பதுவே முழு இஸ்லாமிய தஃவாவாகும் என்ற கருத்தைக் கொள்ளாதிருத்தல்.
   7. ஹிக்மா எனும் ஞானத்தையும் 'அல்-மவ்இழதுல் ஹஸனா' எனும் நல்லுபதேசத்தையும் கடைப்பிடித்தல்.

   1. நிதானம்

பித்அத் ஒழிப்பின் பொழுது நிதானத்தைக் கைக்கொள்வது முக்கியமான ஓர் அம்சமாகும். பித்ஆ ஹகீகிய்யா குல்லிய்யா எனும் பிரிவில் அடங்குகின்ற மிகப் பாரதூரமான பித்அத்துகளை எதிர்ப்பதிலும்கூட நிதானம் கடைப்பிடிக்கப்படல் வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஹஸ்ரத் மூஸா(அலை) அவர்கள் மீகாத்திற்காக (அல்லாஹ்வைச் சந்திப்பதற்காக) தன் சமூகத்தைச் சேர்ந்த சிலரை அழைத்துக்கொண்டு செல்லும் வேளையில் அல்லாஹ்வை அவசரமாகச் சந்திக்க வேண்டும், அவனிடமிருந்து கட்டளைகளைப் பெற வேண்டும் என்ற அவாவினால் தன்னோடு வந்தவர்களையும் முந்திக்கொண்டு தூர்ஸீனா மலையை நோக்கி விரைந்தார்கள். அவ்வாறு அவர்கள் சென்ற வேளையில் அல்லாஹ் அவர்களை நோக்கிக் கேட்டதையும் அதற்கு அவர்கள் கொடுத்த பதிலையும் அப்பதிலுக்கு அல்லாஹ் கொடுத்த மறுப்பையும் அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகின்றது:

''மூஸாவே, நீர் உம்முடைய சனங்களைவிட்டு விட்டு இவ்வளவு அவசரமாக வருவானேன்? (என்று அல்லாஹ் கேட்டான்) அதற்கவர், அவர்கள் இதோ என்னைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். என் இறைவனே, உன்னைத் திருப்திப்படுத்து வதற்காக அவசர அவசரமாக (முன்னதாகவே) வந்துவிட்டேன். அதற்கு இறைவன், அதன் காரணமாக நாம் உம்முடைய ஜனங்களைச் சோதனைக்குள்ளாக்கினோம். சாமிரி என்போன் அவர்களை வழிகெடுத்துவிட்டான்'' என்று கூறினான்.

இவ்வசனத்தில் வரும் 'பக' எனும் இடைச் சொல்லே 'அதன் காரணமாக' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இமாம் அல் ஆலூஸி தனது 'ரூஹுல் மஆனி' எனும் அல்குர்ஆன் விளக்கவுரையில் இவ்வசனத்தில் வரும், 'பக' எனும் இடைச்சொல்லுக்கு இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளதுடன் அல்லாஹ் இதன் மூலம் மூஸா (அலை) அவர்கள் தன்னைச் சந்திப்பதற்கு நிதானமிழந்து அவசரப்பட்டிருக்கக்ககூடாது என்றும், அவர்களது அவசரத்தினால்தான் அம்மக்கள் சாமிரியினால் வழிகெடுக்கப்பட்டார்கள் என்றும் கூற விரும்புகிறான் என விளக்குகிறார்.

அல்லாஹ்வைச் சந்திப்பதைவிட வேறு மேலான காரியம் ஒன்றிருக்க முடியாது. ஆயினும், அதற்குக்கூட நிதானமிழந்து அவசரப்படுவதனை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை என்பதனை இந்நிகழ்ச்சியிலிருந்து விளங்கிக்கொள்ள முடிகின்றது.

இஸ்லாம் இவ்விவகாரத்தையும் அமைதியாக, அவசரமின்றி, நிதானத்துடன் மேற்கொள்ள வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றது. 'பதற்றமும் அவசரமும் ஷைத்தானின் குணமாகும், நிதானமும் அவசரமின்மையும் ரஹ்மானான அல்லாஹ்வின் குணமாகும்' என்பது நபிமொழியாகும். நவீனகால இஸ்லாமிய இயக்கங்கள் தமது பணியில் பூரண வெற்றியடையாமலிருப்பதற்கு அவற்றின் நிதானமிழந்த செயற்பாடுகள் முக்கிய காரணங்களில் ஒன்றாகுமென இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக கலாநிதி யூசுப் அல்கர்ளாவி இவ்விடயத்தை விளக்கியுள்ளார்.

2. முக்கியமானவற்றிற்கு முன்னுரிமை வழங்கல்

இது இஸ்லாமிய தஃவாவுக்கான ஓர் அடிப்படை விதியாகக் கொள்ளப்படுகிறது. இவ்வகையில் எல்லா பித்அத்களும் ஒரே தரத்தில் இல்லாததன் காரணத்தினால், அவையனைத்தையும் ஒரே நிலையில் வைத்து நோக்குவதும், ஒழிக்கப் போராடுவதும் பிழையானதாகும். மாறாக, பித்அத்களுக்கிடையே உள்ள தர வித்தியாசங்களைக் கவனத்திற்கொண்டு, அவற்றில் மிகப் பாரதூரமானவற்றை ஒழிப்பதிலேயே கூடியகவனம் செலுத்தப்படல் வேண்டும்.

இவ்வடிப்படையில் நடைமுறை வாழ்வில் பல்வேறுபட்ட பித்அத்கள் இருப்பினும் அவற்றில் முன்னுரிமை கொடுத்து முக்கியத்துவமளித்து ஒழிக்கப்பட வேண்டிய பெரிய பித்அத்கள் எவை என்பது இனங் காணப்படல் வேண்டும். இந்நாட்டைப் பொறுத்தவரையில் உடன் எதிர்பார்க்கப்பட வேண்டியதும் ஒழிக்கப்பட வேண்டியதுமான (ஹகீகிய்யா குல்லிய்யா எனும் பிரிவிலடங்கும் முப்பெரும்) பித்அத்து களைத்; தற்போதைய நிலையில் இனங்காண முடியும். அவையாவன:

   1. ஹதீஸை மறுக்கும் வாதம்
   2. அனைத்திறை (அத்வைத)க் கொள்கை
   3. ஷீஆக் கோட்பாடு

இத்தகைய 'பித்ஆ குல்லிய்யா ஹகீகிய்யாவை' ஒழிப்பதற்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை பித்ஆ இளாபிய்யா எனும் பாரதூரம் குறைந்த பித்அத்துக்களை எதிர்ப்பதற்குக் கொடுப்பதானது, தஃவா வழிமுறைக்குப் பிழையானதாகும். ஓவ்வொன்றையும் அதனதன் தரத்தில் வைத்து நோக்க வேண்டியது ஈமான் வேண்டிநிற்கின்ற ஓர் அம்சமாகும். அல்லாஹ்வும் அவனது தூதரும் வகுத்துள்ள அமைப்புகளை மாற்றுவது பாரதூரமான குற்றமாகும். எனவே, 'பித்ஆ இளாபிய்யாக்களை' எதிர்ப்பதில் கூடுதலான தீவிரம் காட்டுவது தவிர்க்கப்படல் வேண்டும். இதனையிட்டு விளக்குகின்ற அஷ்ஷெய்க் அல்கஸ்ஸாலி,இளாபிய்யாவான பித்அத்துகளை எதிர்ப்பதில் நிதானமான போக்கைக் கடைப்பிடித்தல் வேண்டுமென்றும். அவற்றைச் செய்பவர்களுக்கு உண்மையை உணர்த்துவதில் நளினமாக நடந்துகொள்ள வேண்டுமென்றும் கூறுகிறார். இத்தகைய பித்அத்துகளை வன்மையாக எதிர்க்கப்போய் அர்த்தமற்ற குழப்பங்கள் ஏற்படுவதனைத் தவிர்க்க வேண்டுமென்றும் குறிப்பிடுகிறார்.

பித்ஆ இளாபிய்யா, பித்ஆ தர்கிய்யா போன்றன பிக்ஹு ரீதியான கருத்து வேறுபாடுகளுக்கு உட்பட்ட அம்சங்களென்றும், அவற்றில் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய கருத்தைக் கொண்டிருப்பதில் பிழையில்லையென்றும் இமாம் ஹஸனுல் பன்னா குறிப்பிடுகிறார். இதே கருத்தை இமாம் இப்னு தைமிய்யாவும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

3. பித்அத்துகளை ஒழிப்பதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்த்தல்

ஒரு பித்அத்தை ஒழிப்பதன் மூலம் மிக மோசமான விளைவு ஏற்படும் என்றிருப்பின் அந்த பித்அத்தை எதிர்ப்பதைத் தவிர்க்கவேண்டும். அதற்கெதிரான போராட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும். இக்கருத்துக்கு ஆதாரமாகக் கீழ்வரும்; நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்பதற்காக தூர்ஸினா மலைக்குச் சென்றிருந்தபோது, சாமிரி என்பவன் மூஸா (அலை) அவர்களின் சமூகத்தவர்களை ஒரு காளை மாட்டை வணங்கும் முஷ்ரிக்குகளாக ஆக்கிவிட்டான். இவ்வேளையில் அச்சமூகத்தில் மூஸா(அலை) அவர்களின் பிரதிநிதியாக இருந்த ஹாரூன் (அலை) அவர்கள் அப் பெரும் பாவச் செயலைக் கண்டும்கூட, அதனை உடன் தடுக்காது மௌனம் சாதித்து விட்டார்கள். தன் சமூகத்தவர்கள் வழிகெட்டு விட்டதைக் கேள்விப்பட்ட மூஸா (அலை) அவர்கள் கோபாவேசத்துடன் திரும்பிவந்து ஹாரூன் (அலை) அவர்களை நோக்கி கீழ்வருமாறு வினவினார்கள்:

''ஹாரூனே, இவர்கள் வழிகெட்டுப் போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் என்னை நீர் பின்பற்றி நடக்க உம்மைத் தடைசெய்தது எது? நீர் என்னுடைய கட்டளைக்கு மாறுசெய்ய முற்பட்டீரா?(என்று கூறி அவருடைய தாடியையும் தலைமுடியையும் பிடித்தார்) அதற்கவர்,என்தாய் மகனே, என் தாடியையும் தலையையும் பிடித்திழுக்காதீர். 'இஸ்ரயீலின் சந்ததிகளுக்கிடையில் நீர் பிரிவினையை உண்டுபண்ணிவிட்டீர், நீர் என்னுடைய வார்த்தைகளைக் கவனிக்கவில்லை என்று நீர் என்னைக் கடுகடுப்பீர் என நிச்சயமாய் நான் பயந்தேன்!(அதனால்தான் அவர்களை நான் உடன் அப்பாவத்தை விட்டும்; தடுக்கவில்லை)'' என்றார்.

ஹாரூன் (அலை) அவர்களது இப்பதிலை மூஸா (அலை) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை, மறுத்துரைக்கவில்லை. ஒரு நபியின் கண்ணெதிரே அவரின் கட்டுப்பாட்டின் கீழுள்ளவர்கள் மிகப் பெருங் குற்றமான ஷிர்க்கைச் செய்ய முனைந்தபோதும், அதை உடன் தடுப்பதனால் சமூகத்தில் பிளவும் பிரிவினையும் குழப்பமும் ஏற்படும் என்ற காரணத்திற்காக அதனை அந் நபி தடுக்காமால் இருக்கிறார். தனது சகோதரன் வந்த பின் அவருடன் இப்பிரச்சினையை ஆராய்ந்து இதற்கு எவ்வாறு பரிகாரம் காணலாம் என்று சிந்தித்துச் செயல்படுவதே சாலச் சிறந்தது என்று கருதுகிறார். இது எத்தகைய பெரிய பித்அத்தாயினும் அதனை ஒழிப்பதில் நிதானம் தேவை என்பதைக் காட்டுவதோடு, ஒரு பித்அத்தை ஒழிக்க முனைவதனால் அதனைவிடப் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென்றிருப்பின் குறித்த பித்அத்தை எதிர்ப்பதை இடைநிறுத்தம் செய்தல் வேண்டும் என்பதையும் காட்டுகிறது. இப்போக்கிற்கு நபி (ஸல்) அவர்களது ஸீராவிலும் பெருந்தொகையான உதாரணங்களைக் காண முடிகிறது. ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (றழி) அவர்களை நோக்கி 'உங்களுடைய சமூகத்தவர்கள் மிக அண்மைக்காலம் வரை ஜாஹிலிய்யத்தோடு தொடர்புள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். இல்லையெனில் கஃபாவின் ஒவ்வொரு கல்லையும்கூடத் தகர்த்து மீண்டும் இப்றாஹீம் (அலை) அவர்கள் இட்ட அத்திவாரத்திலிருந்து கட்டியிருப்பேன்' என்றார்கள். நபியவர்கள் கஃபாவை இடித்து, தான் விரும்பியவாறு இப்றாஹீம் (அலை) அவர்களது அத்திவாரத்தை வைத்துக் கட்ட முற்படாதிருந்ததற்குக் காரணம், அறபு சமூகத்தில் அதன் காரணத்தினால் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகும் என்ற உண்மையை இந்நபிமொழியி லிருந்து விளங்க முடிகிறது. ஏனெனில், அறபிகள் இஸ்லாத்துக்கு முன்பே கஃபா மீது தீவிரமான பற்றுக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதனைத் தகர்க்க முற்பட்டால் நிச்சயம் அறபிகள் சகிக்க மாட்டார்கள், மாறாக பெரும் பிரச்சினையும் குழப்பமுமே தோன்றும். இதனை நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்ததனால்தான் அத்தகைய குழப்பத்தைத் தவிர்ப்பதற்குத் தனது திட்டத்தைச் செயல்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

மேலும் ஒரு சந்தர்ப்பத்தில், அன்ஸாரிகளில் சிலர் நபியவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே, இன்றிரவு நாங்கள் எங்களுக்கெதிரான காபிர்கள் அனைவரையும் கொலைசெய்து விடுவோம். நாளைக் காலையில் உங்களுக்கு உங்களது தஃவாவைப் பகிரங்கப்படுத்தி ஆட்சியாளராகவும் மாறிவிட முடியும்' என்று கூறினார். அதற்கு நபியவர்கள், 'இவ்வாறு அவசரப்பட்டுச் செயல்படுமாறு நான் ஏவப்படவில்லை' எனப் பதிலளித்து, அவர்களது ஆலோசனையை மறுத்துரைத்தார்கள். அன்று நபி (ஸல்) விரும்பியிருந்தால் இவ்வரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அம்மக்களை உற்சாகப்படுத்தி மிக வேகமான சீர்திருத்தத்தை மேற்கொண்டிருக்க முடியும். மிகக் குறுகிய காலத்தில் தனது பிரசாரத்தில் வெற்றிபெறும் வாய்ப்பை அடைந்திருக்க முடியும். ஆனால், நபி (ஸல்) அவர்கள் இத்தகைய போக்கை தஃவாவுக்கான சரியான அணுகு முறையாகக் கருதவில்லை. ஒரு நபியாக இருந்தும் அல்லாஹ்வின் உதவியும் வழிகாட்டல்களையும் நேரடியாகப் பெறும் அவனது தூதராக இருந்தும், இருபத்தி மூன்று வருடங்கள் அவர்கள் தமது சீர்திருத்தப் பணியை மேற்கொள்கிறார்கள். தமக்குப் பின்னால் வருபவர்கள் விளைவுகளைச் சிந்திக்காது, பாதிப்புக்களைக் கவனத்திற் கொள்ளாது நிதானமிழந்து, தஃவாப் பணியில் ஈடுபடக்கூடாது என்பதற்கு முன்மாதிரியாக நபியவர்கள் தமது தஃவாப் பணியை அமைத்துக்கொண்டார்கள்.

'அனைத்து பித்அத்துகளுக்கும் எதிராகப் போராடுவதும் அவற்றை ஒழிப்பதும் கடமையாக இருப்பினும், அவற்றை விடத் தீமையான விளைவுகள் ஏற்படாதவாறு அவற்றை ஒழிப்பதற்கு சிறந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தல் வேண்டுமென' இமாம் ஹஸனுல் பன்னா கூறுகிறார். இவ்வம்சம் ஷரீஆ கூறுகின்ற ஒரு பொது விதியென அறிஞர் ஸஈத் ஹவ்வா குறிப்பிடுகின்றார். இமாம் இப்னு தைமியா 'ஒரு பாவத்தை அதனைவிட ஒரு பெரும் பாவத்தைச் செய்வதன் மூலம் தடுக்கலாகாது' எனக் கூறுகிறார். 'ஒரு பித்அத்தை எதிர்ப்பதனால் மக்கள் மத்தியில் பிளவும், பிரிவும், குரோதமும் எதிர்ப்பு மனப்பான்மையும் ஏற்படுமென்றிருப்பின் குறித்த பித்அத்தை எதிர்ப்பதைத் தவிர்த்தல் வேண்டும்' என்கிறார் அறிஞர் மஹ்மூத் அப்துல் ஹலீம்.

இமாம் இப்னு தைமியா அவர்கள், தாத்தாரியர்கள் மதுபானம் அருந்துவதைத் தடுக்க வேண்டாம் என தனது மாணவர்களை வேண்டிக்கொண்டார். ஏனெனில், அவர்கள் மதுபானம் அருந்தினால் போதையின் காரணமாகத் தூங்கிவிடுவார்கள். அவர்கள் தூங்கிவிட்டால் முஸ்லிம்கள் அவர்களது தீங்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். அவர்கள் மதுபானம் அருந்தவில்லையாயின் இரவிலும் விழித்துக்கொண்டி ருப்பார்கள். விழித்துக்கொண்டிருந்தால் முஸ்லிம்களைக் கொலை செய்தும், அவர்களது சொத்துக்களை அபகரித்தும் மானபங்கப்படுத் தியும் அட்டகாசம் புரிவார்கள். எனவே, அவர்கள் மதுபானம் அருந்துவதனால் ஏற்படும் தீங்குகளைவிட அருந்தாமலிருப்பதனால் ஏற்படும் தீங்குகள் அதிகமாக இருக்கும் எனக் கண்டதனால்தான், தனது மாணவர்களைத் தாத்தாரியர்கள் மத்தியில் மதுபானத்திற் கெதிராகப் பிரசாரம் செய்ய வேண்டாமெனத் தடுத்தார்கள்.

இவ்விடயம் தொடர்பாக ஷரீஆ கூறும் பல சட்டவிதிகள் காணப்படுகின்றன. 'ஒரு தீமையை அதைவிட மோசமான தீமையைக் கொண்டு ஒழிப்பது கூடாது' என்பது ஒரு சட்ட விதியாகும். 'நன்மைகள் பெறப்படுவதைவிட, தீமைகள் ஏற்படுவது தவிர்க்கப்படுவது பிரதானமானது' என்பது மேலும் ஒரு சட்ட விதியாகும். 'ஒரு பெரிய தீங்கை ஒரு சிறு தீங்கைக் கொண்டு நீக்க வேண்டும்' எனவும் ஒரு சட்டவிதி கூறுகிறது. உதாரணமாக ஒரு பித்அத்தை எதிர்ப்பதனால் சமூகத்தில் அதைவிட மோசமான ஒரு பாதிப்பு ஏற்படுமாயின் அது ஒரு பெரிய தீங்காகக் கருதப்படும். இந்நிலையில் அப்பெரிய தீங்கு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு குறித்த பித்அத்தை எதிர்க்காமலிருக்கும் சிறிய தீங்கைச் செய்வதில் தவறில்லை.

4. ஒழித்த பித்அத்துக்குப் பிரதியீடாக அதனை விடச் சிறந்த ஒன்றை வழங்க முயல்தல்

சமூகத்திலிருந்து ஒரு பித்அத்தைக்களையும் வேளையில் அதற்குப் பிரதியீடாக ஷரீஅத் கூறும் ஒன்றை முன்வைக்க முயல வேண்டும். ஒரு பித்அத்தில் ஏதாவது நன்மை இருப்பின் அதனை ஒழிக்கும்போது அதற்குப் பகரமாக முடியுமானவரை ஷரீஆ அனுமதிக்கும் ஒரு நற்கரு மத்தை முன்வைக்க முயல வேண்டும். உள்ளங்கள் எப்பொழுதும் ஒன்றைப் பிரதியீடாகப் பெறாமல் ஒன்றை விடாது. ஒருவர் ஒரு நன்மையை விடுவதாயின் அதை ஒத்த ஒன்றையோ அல்லது அதனைவிடச் சிறந்த ஒன்றையோ பெற்ற பின்னரே அதனை விட வேண்டும், என்று கூறும் இமாம் இப்னு தைமிய்யா, தொடர்ந்து பித்அத்களைச் செய்வோர் குறைகூறப்பட வேண்டியவர்களாகவும் குற்றம் காணப்பட வேண்டியவர்களாகவும் இருப்பது போலவே நபிகளாரின் ஸுன்னாக்களை விடுவோரும் செயற்படுத்தாதோரும் கண்டிக்கத்தக்கவர்களாகவே இருக்கின்றனர் எனக் குறிப்பிடுகின்றார்.

5. பித்அத்துகளை ஒழிப்பதைவிட ஸுன்னத்துகளை உயிர்ப்பிப்பதில் கூடிய கவனம் செலுத்துதல்

மக்கள் மத்தியில் பித்அத்துகளை இனம் காட்டும் அதே வேளையில் சரியான ஸுன்னாக்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியமாகும். பித்அத்துக்களை ஒழிப்பதில் செலுத்தும் கவனத்தைவிட ஸுன்னாக்களை உயிர்ப்பிப்பதில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். இபாதத்துகளிலுள்ள பித்அத்துகளை எதிர்க்கின்ற பலர் ஸுன்னாக்களை எடுத்து நடப்பதிலும் அவற்றைப் பிறருக்கு ஏவுவதிலும் சிரத்தையற்றவர்களாய் இருக்கின்றனர். அந்த பித்அத்துகளைச் செய்பவர்களின் நிலையைவிட, பல சந்தர்ப்பங்களில் இத்தகையவர்களின் நிலை மோசமாகவே இருக்கின்றது. உண்மையில், மார்க்கம் என்பது நன்மையைக் கொண்டு ஏவுவதும் தீமையிலிருந்து தடுப்பது மாகும். இவ்விரண்டில் ஒன்றின்றி அடுத்தது நிலைக்க முடியாது என இமாம் இப்னு தைமியா குறிப்பிடுகின்றார். இக் கருத்தைக் கூறும் அவர், தொடர்ந்து மனித உள்ளங்கள் எப்பொழுதும் செயல்படுவதை விரும்புகின்றனவே அன்றி செயலிழந்திருப்பதையல்ல எனக் கூறுகிறார். இது ஓர் உளவியல் ரீதியான உண்மையாகும்.

6. பித்அத்துகளை ஒழிப்பதுவே முழு இஸ்லாமிய தஃவாவாகும் என்ற கருத்தைக் கொள்ளாதிருத்தல்

இஸ்லாமிய பிரச்சாரம் என்பது பித்அத்துகளை எதிர்த்துப் போராடுவதே எனக் கருதுவது பிழையானதாகும். இஸ்லாம் தனக்கென ஓர் ஆட்சியையும் சமூகத்தையும் பெற்று மேலோங்கியிருந்த காலப் பகுதியில் பித்அத்துகளை ஒழிப்பது மாத்திரம் சிலவேளை இஸ்லாமியப் பிரசாரமாக அமைந்திருக்க இடமுண்டு. ஆனால் இன்றைய காலகட்டம் அத்தகையதல்ல. பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி இன்று இஸ்லாம் 'அல் குர்பத்துஸ் ஸானியா' எனும் இரண்டாவது அநாதரவான, அறிமுகமற்ற நிலையை அடைந்திருக்கின்றது. இஸ்லாம் இன்று ஆட்சிபீடத்திலில்லை. மனித வாழ்வின் பல துறைகளுக்கு அது இன்று அந்நியமானதாக மாறியுள்ளது. அதற்கெதிரான சதித்திட்டங்கள், அது எதிர்நோக்க வேண்டியுள்ள சவால்கள் ஒன்றிரண்டல்ல. எனவே, இஸ்லாத்தின் அடிப்படைகளே ஆட்டங்கண்டுள்ள இத்தகைய ஒரு காலப்பிரிவில் இபாதத்களில் காணப்படும் பித்அத்துக்களை எதிர்ப்பதே முழு தஃவாவுமாகுமென்று கருதுவது எவ்வளவு தூரம் அபத்தமானது! ஆகவே பித்அத்துக்களை ஒழிப்பதற்கான முயற்சி முழு இஸ்லாமிய தஃவாவின் ஒரு பகுதியேயாகும் என்பதனையும் இஸ்லாமியப் பிரசாரகர்கள் கவனத்திற் கொள்ளல் வேண்டும
7. 'அல்ஹிக்மா' எனும் ஞானத்தையும் 'அல்மவ்இழத்துல் ஹஸனா' எனும் நல்லுபதேசத்தையும் கடைப்பிடித்தல்

'உலகில் இரு விடயங்களுக்கு வரையறுக்கப்பட்ட நியதிகள் கிடையா. அவற்றில், ஒன்று யுத்தமாகும். அடுத்தது அன்பாகும்' எனக் கூறும் மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி 'வரையறுக்கப்பட்ட நியதிகளுக்குட்படாத மூன்றாவது ஓர் அம்சமும் உண்டு. அது தஃவாவாகும்' எனக் கூறுகின்றார். உண்மையில், இஸ்லாம் பிரசாரத்துக்கான பொதுவான வழிகாட்டல்களை மாத்திரமே வழங்குகிறது. இவ்வகையில் 'அல்ஹிக்மா' எனும் ஞானத்தையும், 'அல் மவ்இழதுல் ஹஸனா' எனும் நல்லுபதேசத்தையும் கொண்டு, சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து, தஃவாவில் ஈடுபட வேண்டியுள்ளது. குறிப்பாக இஸ்லாமியப் பிரசாரம் வெற்றிபெற 'அல்ஹிக்மா' பெரிதும் துணைபுரிய முடியும். இதனால்தான் அல்குர்ஆனும், அதனை வலியுறுத்துகிறது. ''(நபியே) நீர் உமது இறைவனின் பாதையில் ஹிக்மா எனும் ஞானத்துடனும் விநயத்துடனும் அழைப்பீராக''(16:125) ஹிக்மா என்பது விநயமும் நளினமும் பயனளிக்கும் வேளையில் அவற்றைக் கைக்கொண்டு இஸ்லாமியப் பிரசாரம்செய்வதும், கடுமையும் தீவிரமும் தேவைப்படும் வேளையில் அவ்வாறு நடந்து இஸ்லாமியப் பணி செய்வதுமாகும். இந்த ஹிக்மாவினடிப்படையில்தான் நிர்ப்பந்தத்தின் போது குப்ர் கலிமாவை மொழிவதற்கும் யுத்தத்தின்போது பொய்யுரைப்ப தற்கும் ஏமாற்றுவதற்கும் அனுமதியளித்துள்ளது. இதனடிப்படையில்தான் முஷ்ரிக்களை ஒழிக்க அவர்களைச் சேர்ந்தவர்களையே உதவியாகக் கொள்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தௌஹீதை நிலைநாட்ட வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவில் வாழ்ந்த காலப் பிரிவில் அல்லாஹ்வின் ஆலயமாம் கஃபதுல்லாவில் பல நூறு விக்கிரகங்களுக்கு மத்தியில் அவற்றைக் கண்டும் காணாதவர்களாகப் பொறுமையைக் கைக்கொண்டு நிதானமிழக்காமல் அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபடுவதானது அல்குர்ஆன் கூறும் மேலான ஹிக்மாவைச் சார்ந்ததாகும்.

பித்அத்துகளை ஒழிக்க முற்படும்பொழுது, மேலே குறிப்பிட்ட அம்சங்களைக் கவனத்திற்கொண்டு செயற்படுகின்ற அதே வேளையில், மனதிற்கொள்ள வேண்டிய மேலும் ஓர் அம்சம் யாதெனில், பித்அத்துக் களில் ஈடுபடுவோரை நம்மைவிட்டும் தூரமான ஒரு தனிப் பிரிவினராகக் கருதக்கூடாது என்பதாகும். கலிமாவை மொழிந்த அனைவரையும் இஸ்லாமிய வட்டத்துக்குள் வைத்தே நோக்க வேண்டும். 'ஒருவரின் அகீதாவை அறியாதவரைக்கும் அவரை நாம் முஸ்லிம் எனக் கூறமாட்டோம் என்ற கருத்தும் பித்அத்தானதே' என அறிஞர் அப்துல் ரஹ்மான் அப்துல் காலிக் கூறுகிறார். 'நீர் உமக்கு அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் சொல்வீராக' என்ற நபிமொழியைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

இமாம் ஹஸனுல் பன்னா, கலிமாவை மொழிந்த அனைவரையும் முஸ்லிம்களாக ஏற்று, அவர்களை எம்மோடு சேர்த்து இணைத்து, இஸ்லாமிய சகோதரத்துவ உறவினால் எம்முடன் பிணைத்து, பின்னர் தர்பியத்தினூடாக அவர்களுக்குச் சரியான இஸ்லாம் பற்றிய விளக்கத்தைக் கொடுப்பதே முறையாகும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் 'மஜல்லதுல் இக்வான்' எனும் தனது இயக்க சஞ்சிகையில் இதுபற்றி விளக்கி எழுதினார். ஒரு பெரிய சதுரத்தை வரைந்து அதன் மத்தியில் ஒரு சிறிய சதுரத்தை வரைந்து பெரிய சதுரத்தின் நாலு பக்கங்களிலும் 'கலிமா தய்யிபாவை' எழுதிவிட்டு இஸ்லாத்தைச் சரியாக விளங்கி ஏற்றிருப்போர் எண்ணிக்கையில் சிறிய சதுரத்தை ஒத்தவர்களென்றும், பெரும்பாலான முஸ்லிம்கள் பெரிய சதுரத்திலேயே அடங்குவர் என்றும், அவர்களையும் முஸ்லிம்களாக ஏற்று எம்மோடு இணைத்துக்கொள்வதே தமது கொள்கை என்றும் ஒரு குறிப்பைக் கீழே எழுதியிருந்தார்.

பித்அத்துக்களின் பாரதூரம், அவற்றைச் செய்பவர்களைப் பொறுத்தும் வித்தியாசப்படும் என்பதனையும் இஸ்லாமியப் பிரசாரகர்கள் மறந்து விடலாகாது. ஒரு பொதுமகன் நன்மையை நாடி ஒரு பித்அத்தைச் செய்வதனால் பாவியாக மாட்டான். சிலவேளை அவனது நல்லெண்ண த்தின் காரணமாக அவனுக்கு நன்மைகூடக் கிடைக்க இடமுண்டு. அதே பித்அத்தை ஓர் ஆலிம் செய்கின்ற பொழுது ஒரு பெரும் குற்றத்தைச் செய்ததாகக் கருதப்படுவர். இக்கருத்தை இமாம் இப்னு தைமியா, நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதை உதாரணமாகக் காட்டி விளக்கியுள்ளார்.

உசாத்துணைகள்

   1. அல்-இஃதிஸாம்-இமாம் அஷ்ஷாதிபி- பாகம் 2, பக் 293-362
   2. அல்-முவாபகாத்- இமாம் அஷ்ஷாதிபி- பாகம் 3, பக். 54-56
   3. அல்-பித்ஆ-தஹ்தீதுஹா-வ- மௌகிபுல் இஸ்லாம்-மின்ஹா-கலாநிதி இஸ்ஸத் அலி அதிய்யா பக்;. 189-245
   4. இக்திழாஉஷ்ஸிராதில் முஸ்தகீம்- இமாம் இப்னு தைமியா, பக். 296-298
   5. லய்ஸ மினல் இஸ்லாம்- அஷ்ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி, பக். 64-71
   6. ஹுஜ்ஜதுல்லாஹில் பாலிகா- ஷாஹ் வலியுல்லாஹ் அத்திஹ்லவீ, பாகம் 1, பக் 17, 255
   7. மஜ்முஃ பதாவா இப்னு தைமியா- இமாம் இப்னு தைமியா- பாகம் 13, பக்; 58
   8. அர்ரிஸாலா- இமாம் அஷ்ஷாபிஈ- பக் 27
   9. அல்- இஹ்வானுல் முஸ்லிமூன்- அஹ்தாஸுன் ஸனஅதித்தாரீஹ் - கலாநிதி மஹ்மூத் அப்துல் ஹலீம், பாகம்-2, பக் 356
  10. அய்னல் கலல்- கலாநிதி யூஸுப் அல்- கர்ளாவி
  11. பீ ஆபாகித் தஆலிம்- ஸஈத் ஹவ்வா, பக் 100
  12. புஸுலுன் மினஸ்ஸியாஸதிஷ் ஷரஇய்யா பீ அத்தஃவதி இலல்லாஹ் - அப்துர் ரஹ்மான் அப்துல் ஹாலிக், பக் 107, 199-228

We have 6 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player