இலங்கை முஸ்லிம்களின் போதனா மொழிப் பிரச்சினை

இலங்கை முஸ்லிம்களின் போதனா மொழிப் பிரச்சினை

இலங்கை முஸ்லிம்களின் நீண்ட நெடுங்காலப் பிரச்சினைகளுள் மொழிப்பிரச்சினையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அரபு, தமிழ், ஆங்கிலம், அரபுத் தமிழ் ஆகிய மொழிகளுடன் இந்நாட்டு முஸ்லிம்களைத் தொடர்புபடுத்தி, அவற்றுடனான அவர்களின் நிலைப்பாடு பற்றி வரலாறு நெடுகிலும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வந்துள்ளன.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி மொழியைப் பொறுத்த வரையில் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் காலத்துக்குக் காலம் சிலர் பயின்று வந்தாலும் பொதுவாக இந்நாட்டு முஸ்லிம்களின் போதனா மொழியாக தமிழே இருந்து வந்துள்ளது. ஆனால், அண்மைக் காலமாகச் சிங்கள மொழி மூலம் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களின் தொகை கணிசமான அளவு அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. எதிர் காலத்தில் இத்தொகை மேலும் வேகமாக அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. இந்நிலையில், இலங்கை முஸ்லிம்களின் எதிர் காலக் கல்வி மொழியாக எம்மொழி அமைய வேண்டும் என்றொரு சர்ச்சையே கிளப்பி விடப்பட்டுள்ளது.

சிங்கள மொழி மூலம் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயில்வதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நாட்டில் மொத்தமாக ஏறத்தாழ 45000 முஸ்லிம் மாணவ, மாணவியர் சிங்கள மொழிமூலம் கல்வி பயிலுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது மொத்த முஸ்லிம் மாணவர் தொகையில் 13.05மூ ஆகும். கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட ஒரு மதிப்பீட்டின் படி, காலி மாவட்டத்தில் சுமார் 60மூ மான முஸ்லிம் மாணவர்களும் கொழும்பு மாவட்டத்தில் சுமார் 50மூ மான முஸ்லிம் மாணவர்களும் சிங்கள மொழிமூலம் கல்வி பயில்வது தெரிய வந்துள்ளது. இந்த மாவட்டங்களைத் தவிர கண்டி, குருணாகல், களுத்துறை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களிலும் கணிசமான தொகை முஸ்லிம் மாணவ, மாணவியர் சிங்கள மொழி மூலம் கல்வி பயில்கின்றனர்.

1.0 சிங்கள மொழிமூலம் கல்வி பயில்வதால் விளையும் நன்மைகள்:

முஸ்லிம்களின் கல்வி மொழியாகச் சிங்களம் அமைவதனால் குறிப்பிடத்தக்க பல நன்மைகள் விளையும் என்பதனை மறுப்பதற்கில்லை. அத்தகைய நன்மைகளில் முக்கியமான மூன்றை இங்கு குறிப்பிடலாம்.

   1. கல்வித்துறையில் சிங்கள மொழி மூலம் கிடைக்கப்பெறும் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டுதல்.
   2. பெரும்பான்மைச் சமூகத்துடனான பரஸ்பர புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டுதல்
   3. எமது கலை, கலாசார, பண்பாட்டுப் பரிவர்த்தனைக்கு ஊடகமாகச் சிங்கள மொழியை அமைத்துக் கொள்ளும் சாத்தியம் ஏற்படல்.

சிங்கள மொழிமூலம் கல்வி கற்பதனால் விளையும் மேற்குறிப்பிட்ட நன்மைகள் பற்றி விரிவாகக் கீழே விளக்கப்படுகின்றன.

         1. கல்வித்துறையில் சிங்கள மொழிமூலம் கிடைக்கப்பெறும் வசதிகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிட்டுதல். (உ-ம்: கற்றல் சாதனங்கள், தரமான பாடசாலை வசதி, பல்துறை சார்ந்த கல்வி, தொழிற் பயிற்சி நிறுவனங்கள்)

சகல வசதிகளையும் கொண்ட தரமான சிங்களப் பாடசாலைகள் மாநகரங்கள், நகரங்கள் உட்பட பட்டினங்களிலும் காணப்படுகின்றன. கிராமங்களிற் கூடத் தரமான சிங்களப் பாடசாலைகள் அமைந்துள்ளன. ஆனால், தரமான முஸ்லிம் பாடசாலைகள் தேசிய மட்டத்தில் நோக்கினாலும், மிகக் குறைவாகவே உள்ளன.
சுமார் 750 முஸ்லிம் பாடசாலைகள் இருப்பினும், அவை குறைந்த தரத்தையுடையனவாகவே காணப்படுகின்றன. இந்நிலையில் முஸ்லிம் பெற்றோர், தமது பிள்ளைகளைச் சிங்களப் பாடசாலைகளிற் சேர்ப்பதில் நியாயமிருப்பதாகக் கருதுகின்றனர்.

தமிழ் மொழியுடன் ஒப்பிடும் போது கற்றல் சாதனங்களும் சிங்கள மொழியில் தாராளமாகக் கிடைக்கின்றன. குறிப்பாக உயர்வகுப்புப் பாடங்களுக்குத் தேவையான நூல்கள், துணைநூல்கள், வழிகாட்டிகள் போன்றன சிங்கள மொழியில் அதிகமாகக் கிடைக்கக் கூடியனவாகவுள்ளன. சிறிய வகுப்பு மாணவர்கள் முதல் உயர் வகுப்பு மாணவர்கள் வரை கல்வித்துறையில் பயனடையக் கூடிய பல சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் சிங்கள மொழியில் வெளிவருகின்றன. தொலைக் காட்சியிலும் மாணவர்களின் கல்விக்கு உதவக்கூடிய தரமான நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை சிங்கள மொழியிலேயே ஒளிபரப்பப்படுகின்றன. தமிழ் மொழிமூலம் கற்கும் மாணவர்களுக்கு இத்தகைய வாய்ப்புக்களை அடைந்து கொள்ள முடிவதில்லை. பல்கலைக்கழக பிரவேச வாய்ப்புக் கிட்டாத மாணவர்களைக் கருத்திற் கொண்டு பல வகையான தொழிற் கல்வி சார்ந்த பாட நெறிகள் இன்று நடாத்தப்படுகின்றன. இத்தகைய பாட நெறிகள் பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே நடாத்தப்பட்டு வருகின்றன.

1.2 பெரும்பான்மைச் சமூகத்துடன் பரஸ்பரப் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டுதல்:

உண்மையில், இன்றுவரை தீர்க்கப்படாததும் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதுமான இலங்கையின் இனப் பிரச்சினைக்கு முஸ்லிம்கள் சிங்கள மொழியைக் கற்பது ஒரு தீர்வாக அமையலாம். இக்கண்ணோட்டத்திலேயே அண்மைக் காலமாகச் சிங்களத்தை தமிழ் பேசுவோருக்கும், தமிழைச் சிங்களம் பேசுவோருக்கும் கற்பிக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், மேற்படி நோக்கத்தை அடைவதற்காகச் சிங்களத்தை முஸ்லிம்கள் தமது கல்வி மொழியாக அமைத்துக் கொள்ளத்தேவையில்லை. அவர்கள் சிங்கள மொழியை ஒரு பாடமாகக் கற்றால் மாத்திரம் போதுமானதாகும்.

         1. கலை, கலாசார, பண்பாட்டு பரிவர்த்தனைக்கு ஊடகமாகச் சிங்கள மொழியை அமைத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படல்:

சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் தொடர்பு இடைவெளி (ஊழஅஅரniஉயவழைn புயி) காணப்படுவது ஓர் உண்மையாகும். இதன் காரணமாக இரு சமூகங்களுக்கிடையிலும் பல தப்பபிப்பிராயங்களும், மனக்கசப்புகளும், அதிருப்தியும் நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது. மாடு அறுத்தல், குர்பான் கொடுத்தல், பள்ளிவாயலில் ஒலிபெருக்கி மூலம் அதான் சொல்லுதல், பலதார மணம், முஸ்லிம் பெண்களின் நிலை போன்ற பல விடயங்கள் தொடர்பாகப் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் காலத்துக்குக் காலம் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியும் காரசாரமான விமர்சனங்களைச் செய்தும் வருகின்றனர். இவ்வாறான விவகாரங்களில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டிலுள்ள நியாயங்களையும், அவர்களது சன்மார்க்க மாண்புகளையும் பொரும்பான்மை சமூகத்துக்கு எடுத்துச் சொல்லுவதில் மொழி ஒரு தடையாக அமைந்துள்ளது. முஸ்லிம்கள் சிங்கள மொழியைக் கற்பது இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமைவதுடன், தமது சன்மார்க்கப் போதனைகளையும் கலாசாரப் பண்பாட்டு மாண்புகளையும் பிறருக்கு நகர்த்தவும் துணைபுரியும்.
ஆனால், இந்நிலையும், முஸ்லிம்கள் சிங்கள மொழியைப் போதனா மொழியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்துவதாக தெரியவில்லை முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழியை ஒரு பாடமாகக் கற்பதே போதுமானதாக இருக்கும்.
மேற்கண்ட நன்மைகளைக் கருத்திற் கொண்டு, தமது பிள்ளைகளைச் சிங்களப் பாடசாலைகளுக்கு அனுப்பும் முஸ்லிம் பெற்றோர் இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் இத்தகைய நன்மைகள் எதனையும் கருத்திற்கொள்ளாது சிங்கள மொழியில் கற்பதும், பேசுவதும் ஒருவகை நாகரிகம் என்ற உணர்வில் அம்மொழி மூலம் தமது பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டும் பலர் முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்றனர் என்பதை மறுக்கமுடியாது.
2.0 சிங்கள மொழிமூலம் கல்வி பயிலுவதனால் விளையும் பாதகங்கள்:
முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழிமூலம் கல்வி கற்பதனால் குறிப்பிடத்தக்க நன்மைகள் சில கிடைத்தாலும் அதனால் விளையும் தீமைகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
அவற்றுள் முக்கியமானவற்றை பின்வருமாறு அடையாளங்காண முடிகின்றது:

   1. சமய, கலாசார, பண்பாட்டு ரீதியிலான பாதிப்புகள்
   2. கல்வித்துறையில் பின்னடையும் ஆபத்து
   3. சமூகம் பிளவுபடும் ஆபத்து

முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழிமூலம் கல்வி கற்பதனால் விளையும் மேற்கண்ட தீமைகளைச் சற்று விரிவாகக் கீழே நோக்குவோம்:

2:1 சமய, கலாசார, பண்பாட்டு ரீதியிலான பாதிப்புகள்:
ஒரு மொழியானது அதனைத் தாய் மொழியாகக் கொண்டோரின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், கலாசாரப் பண்பாடுகள் போன்றவற்றுடன் பின்னிப் பிணைந்ததாகவே இருக்கும். இந்த வகையில், சிங்கள மொழி, அடிப்படையில் பௌத்தர்களின் மொழியாகும். பௌத்தர்கள் இறைநம்பிக்கை, மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கை போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் என்பது தெளிவானதாகும். மேலும், அவர்கள் மத்தியிலுள்ள உருவ வழிபாடு, மறுபிறப்புக் கொள்கை போன்றனவும் முஸ்லிம்களின் அடிப்படைக் கொள்கைகளுடன் முரண்படுகின்றன. மேற்குறிப்பிட்ட நம்பிக்கைகளினடியாகவே பௌத்தர்களின் கலை, கலாசாரப் பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், நடை உடை பாவனைகள், சிந்தனைகள் அனைத்தும் பிறந்துள்ளன. இவற்றின் பின்னணியிலேயே சிங்கள மொழியும் வளர்ச்சியடைந்துள்ளது. சிங்கள மொழியிலுள்ள இலக்கியங்களும் பெரும்பாலும் மேற்கண்ட பௌத்த போக்குகளினடிப்படையிலேயே அமைந்துள்ளன. (சிங்கள மொழியில் கிறிஸ்தவ இலக்கியங்களும் கணிசமான அளவு உண்டு என்பதை மறப்பதற்கில்லை). இந்நிலையில் சிங்கள மொழிமூலம் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் போது விரும்பியோ விரும்பாமலோ இஸ்லாத்துக்கு முரணான சிந்தனைப் போக்குகளால் அவர்கள் தாக்கத்துக்குள்ளாகும் ஆபத்து உண்டு. நடை முறையில் சிங்கள மொழி மூலம் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களின் உள்ளங்களில் இத்தகைய இஸ்லாத்துக்கு முரணான மனப்பதிவுகள் ஏற்பட்டுள்ளதனை அவதானிக்கமுடிகின்றது.

சிங்கள மொழியில் தேவையானளவு இஸ்லாமிய இலக்கியங்கள் இல்லாமை இந்நிலை மேலும் மோசமடையக் காரணமாக அமைகின்றது. தமது இலக்கியத் தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக, சிங்கள மொழியில் கற்ற, கற்கின்ற முஸ்லிம் மாணவர்கள் பிற சிங்கள இலக்கியங்களை வாசித்து பாதிப்புக்குள்ளாகின்றனர். இஸ்லாமிய நூல்கள் தமிழிலேயே அதிகம் கிடைக்கின்றன. வாராந்த குத்பா பிரசங்கம் உட்பட சமய நிகழ்ச்சிகள் அனைத்தும் பெரும்பாலும் தமிழிலேயே நடைபெறுகின்றன.
இவற்றின் காரணமாகச் சிங்கள மொழி மூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்களின் இஸ்லாமிய அறிவும் குறைவாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. 1991 ஆம் ஆண்டு க.பொ.த.(சா.த) பரீட்சையில் இஸ்லாம் பாடத்திற்குத்தோற்றிய முஸ்லிம் மாணவர்களுள் தமிழ்மொழி மூலம் எழுதியோரில் சித்தியடைந்தோர் சுமார் 80மூ ஆக இருக்க, சிங்கள மொழிமூலம் எழுதியோரில் சுமார் 58மூ மானோரே சித்தியடைந்துள்ளனர்.

மேலும் சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களின் ஆசிரியர்களாகவும், நண்பர்களாகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிமல்லாதோரேயாவர் கற்கும் சூழல், பாடசாலையின் சம்பிரதாயங்கள், வைபவங்கள், நடை, உடை பாவனைகள் போன்றனவும் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு மாறானவையாக அமையும் சந்தர்ப்பங்கள் பல உண்டு. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இங்கு விளக்க வேண்டிய அவசியமில்லை.
பெரும்பாலான சிங்கள மொழிப்பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்கள் இல்லாததனால் முஸ்லிம் மாணவர்களைப் பாடசாலைச் சூழலில் ஓரளவாவது பாதுகாக்கும் வாய்ப்பும் இல்லாமற் போகின்றது.
முஸ்லிம் பாடசாலைகளிற் கல்வி கற்கும் மாணவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் பாடசாலைக்கு வெளியேயும் தமது ஆசிரியர்களின் கண்காணிப்புக்கு உட்படுவதுடன் அவர்களின் வழிகாட்டல்களைப் பெறும் வாய்ப்பையும் அடைந்து கொள்கின்றனர். குறிப்பாக இந்நிலை கிராமப் புறங்களிற் காணப்படுகின்றது. ஆனால், சிங்களப் பாடசாலையில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு பாடசாலைக்கு வெளியே தமது ஊர்களில் இத்தகைய வாய்ப்புகள் கிட்டுவதில்லை. இதனால் அவர்கள் முறைகேடாக நடக்கவும், வழிதவறவும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இவர்களுக்கு நடைமுறையில் தமிழ்மொழி மூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு முரணான பல போக்குகள் அவதானிக்கப்படுகின்றன. குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்பது சமய, கலாசார, பண்பாட்டுக் கண்ணோட்டத்தில் மிகவும் ஆபத்தானது என்பதைக் குறிப்பிடல் வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுத்தப்படாதவாறு தடுப்பது குறித்து பண்டார நாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றவொரு கருத்தரங்கில் ஆய்வுரை நிகழ்த்திய கொழும்புப் பல்கலைக்கழக சமூகவியல் பீடத்தின் பேராசிரியர் வீரமுண்ட ஒரு முக்கியமான தகவலைத் தெரிவித்துள்ளார். அதன் சாரம்சம் பின்வருமாறு: கொழும்பு முதல் களுத்துறை வரையிலான கடற்கரை உல்லாசப்பயண ஹோட்டல்களில் பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுத்தப்படுவதாகப் புகார் உண்டு. ஆனால், பேருவளைப் பகுதியில் பல்வேறு உல்லாசப் பயணிகளின் ஹோட்டல்கள் நடாத்தப்பட்ட போதிலும், அங்கு ஒரு முஸ்லிம் சிறுவனாவது இத்தகைய உறவில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தகவலில்லை.

இலங்கை வரும் உல்லாசப் பயணிகள் நம்நாட்டுப் பிள்ளைகளை தமது பாலியல் உறவுக்கு ஈடுபடுத்துவது சம்பந்தமான விபரங்களைக் கண்டறிவதற்காகச் சமீபத்தில் களுத்துறைக் கடற்கரையோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரக் கணக்கெடுப்பை வெளிப்படுத்திய போதே பேராசிரியர் இதனைச் சுட்டிக் காட்டினார்.

பேருவளைப் பகுதி முஸ்லிம் பிள்ளைகள் இவ்வாறு ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கு அவர்களில் மிகப்பெரும்பாலானோர் இஸ்லாமிய சூழலில் முஸ்லிம் பாடசாலைகளிற் கல்வி கற்பதும் மிக முக்கியமான ஒரு காரணமாகும்.

சுருங்கக் கூறின், முஸ்லிம்கள் சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி கற்பதனால் அவர்கள் அந்நிய கலாசாரத் தாக்கத்திற்குட்பட்டுத் தமது தனித்துவத்தை இழக்கும் ஆபத்து இருக்கவே செய்கின்றது.

2:2 கல்வித்துறையில் பின்னடையும் ஆபத்து:

இலங்கை முஸ்லிமகளின் தாய்மொழியாகத் தமிழே இருந்து வருகின்றது. இந்நிலையில் முஸ்லிம் மாணவர்கள் ஒரு வேற்று மொழியான சிங்கள மொழியில் கல்வி பயிலும் போது கல்வித்துறையில் பின்னடையும் ஆபத்துண்டு.

ஒருவர் தனது சொந்த மொழியில் (தாய் மொழி) விடயங்களை கிரகிப்பது போன்று வேற்று மொழியொன்றில் கிரகிக்க முடியாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும். இவ்வடிப்படையில் சிங்கள மொழிமூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கு நியாயமானதொரு காலத்தை இவர்கள் செலவிட வேண்டிய நிலையிலும் உள்ளனர். இதனால், பாடங்களைக் கிரகிப்பதில் இவர்கள் பின்னடைந்து, பரீட்சைகளிலும் சிறந்த பெபேறுகளைப் பெறமுடியாமற் போய்விடுகின்றது.

தமிழ் மொழிமூலம் கற்கும் மாணவர்கள் மற்றொரு சிறுபான்மையினரான தமிழர்களுடன் மாத்திரமே போட்டியிட வேண்டியுள்ளனர். ஆனால் சிங்கள மொழிமூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்களோ பெரும்பான்மைச் சமூகத்துடன் போட்டியிடவேண்டியுள்ளனர். இந்நிலையும் இவர்கள் கல்வித்துறையில் பின்னடைய ஏதுவாகின்றது.

இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்தியில் சிங்கள மொழிமூலம் கல்வி கற்கவேண்டிய தேவை உண்டா என்று கேள்வி எழுப்பப்பட வேண்டியுள்ளது. இன்று சிங்கள மொழியைப் போன்றே தமிழ் மொழியும் அரசகரும மொழியாக இருப்பதனாலும் இனவிகிதாசாரத்தின் அடிப்படையில் தொழில் வழங்கும் அமைப்பு நடைமுறைப்படுத்தப்படு வதனாலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சிங்கள மொழிமூலம் கல்வி கற்கவேண்டிய அவசியம் இல்லையென்றே கூற வேண்டும். மேலும், கல்வித்துறையில் ஒருவர் தெரிவு செய்யும் துறையேயன்றி மொழி முக்கியமானதல்ல. இந்த வகையில் கல்வியில் முன்னேற்றம் காணச் சிங்கள மொழியே உதவும் என்ற கருத்துச் சரியானதல்ல என்பது உணரப்படல் வேண்டும்.கிட்டிய எதிர்காலத்தில் எல்லாத்துறைகளும் தனியார் மயப்படுத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அத்தகையதொரு நிலை உருவாகும் போது தனியார் நிறுவனங்கள் மொழியையன்றி தகுதியையும் திறமையையுமே முக்கியமாகக் கருத்திற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

2:3 சமூகம் பிளவுபடும் ஆபத்து:

இலங்கைவாழ் கிறிஸ்த்தவ சமூகம் மொழிரீதியாகச் சிங்களக் கிறிஸ்தவர்கள், தமிழ்க்கிறிஸ்த்தவர்கள் எனப் பிரிந்திருப்பதனால், அவர்களுக்குப் பல வகையான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கலாசார, பண்பாட்டு ரீதியிலும் அவர்கள் மத்தியில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவர்களுக்கிடையிலான உறவுகளும் சீராக இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் அவர்கள் மொழிரீதியாகப் பிளவுபடும் ஆபத்து இல்லாமலில்லை. ஏற்கனவே மலாயர் சமூகத்தைச் சேர்ந்த கணிசமான தொகையினர் சிங்கள மொழியைத் தமது வீட்டு மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் ஆக்கிக்கொண்டுள்ளனர். அவர்களிடையேயுள்ள வளர்ந்து வரும் இளம் தலைமுறையைச் சேர்ந்த பலருக்குத் தமிழ் மொழி விளங்காமல் இருப்பதைக் காணமுடிகின்றது. இலங்கைச் சோனகர் மத்தியிலும் சில பகுதிகளில் வாழ்வோர் தமது வீட்டு மொழியாகச் சிங்களத்தைக் கொண்டுள்ளனர். இத்தகையோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முஸ்லிம் மாணவர்கள் இன்றுள்ள வேகத்தில் சிங்கள மொழிமூலம் கற்பதைத் தொடர்ந்தால், முஸ்லிம் சமூகம் கிட்டிய எதிர்காலத்தில் மொழிரீதியாக இரு கூறுகளாகப் பிரியக்கூடிய பயங்கர நிலை தோன்றக்கூடும். தொடர்ந்து அவர்கள் மத்தியில் ஏற்படும் இடைவெளியானது விரிவடைந்து இறுதியில் ஒரு பெரும் பிளவே ஏற்படக்கூடிய ஆபத்தும் இல்லாமலில்லை. இதனால், இன்றுள்ள சமய கலாசார, பண்பாட்டு ரீதியிலான ஒற்றுமை குலைவதற்கு இடமுண்டு.

   1. முஸ்லிம்களின் கல்விமொழிப் பிரச்சினைக்கான தீர்வுகள்:

இதுவரை முஸ்லிம்கள் சிங்கள மொழிமூலம் கல்வி கற்க முற்படுவதனால் ஏற்படக்கூடிய அனுகூலங்களும், பிரதிகூலங்களும் ஆராயப்பட்டன.

முஸ்லிம்கள் தமிழ்மொழியைப் போதனா மொழியாக கொள்வதனாலும் பல நன்மைகள் இருப்பது போன்றே குறிப்பிடத்தக்க தீமைகளுமுண்டு. ஆயினும், இவ்வம்சம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
பொதுவாக, இலங்கை முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்தைப் பாதிக்கும் கல்வி மொழிப் பிரச்சினைக்குச் சரியானதும் பொருத்தமானதுமான தீர்வுகள் வழங்கப்படவேண்டியது அவசியமானதாகும். இங்கு சில தீர்வுகள் மிகச்சுருக்கமாக முன்வைக்கப்படுகின்றன. இவை கல்வியியலாளரின் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியனவாகும்.

3;:1 முஸ்லிம் மாணவர்களைத் தமிழ் மொழிமூலம் கற்பதற்கு ஊக்குவித்தல்:

முஸ்லிம்களின் தாய்மொழியாகத் தமிழ்மொழி இருப்பதனாலும் சமூகத்தில் சுமார் 85மூ க்கும் அதிகமான முஸ்லிம் மாணவர்கள் தமிழ்மொழி மூலம் கல்வி பயில்வதனாலும் பொதுவாக, முஸ்லிம் மாணவர்களைத் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கத்தூண்டுவது பொருத்தமாக அமையும். இது சமூகத்தின் திட்டமிட்ட ஒருங்கமைக்கப்பட்ட கல்வி முன்னேற்றத்திற்கும் துணைபுரியக் கூடியதாகும்.

ஆனால், முஸ்லிம் மாணவர்கள் தமிழ் மொழிமூலம் கல்வி கற்குமாறு தூண்டப்படுவதற்குப் பிரதான தடையாக அமைவது முஸ்லிம் பாடசாலைகளின் தரம் குறைவாக இருப்பதாகும். எனவே, முஸ்லிம் பாடசாலைகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். மாவனல்லை போன்ற பகுதிகளில் முஸ்லிம் மாணவர்கள் தமிழ் மொழிமூலம் ஆர்வத்துடன் கற்க முற்படுவதற்குப் பிரதான காரணம் அப்பகுதிகளில் தரமான முஸ்லிம் பாடசாலைகள் அமையப்பெற்றிருப்பதாகும். நடைமுறையில், சிங்கள மொழிமூலம் கல்வி கற்பதனால் விளையும் நன்மைகளையும் மற்றும் பல காரணங்களையும் கருத்திற் கொண்டு அம்மொழி மூலம் கல்வி பயிலும் குறிப்பிடத்தக்க ஒரு தொகையினர் இருந்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய மாணவர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு பின்வரும் ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

   1. முஸ்லிம் பாடசாலைகளிற் சிங்களமொழியிலான பகுதிகளை உருவாக்குதல்.

முஸ்லிம் பாடசாலைகளிற் சிங்கள மொழிமூலம் பாடபோதனைகளை நடாத்தும் பகுதிகள் உருவாக்கப்படுவதன் மூலமாக முஸ்லிம் மாணவர்கள் சிங்களப் பாடசாலைகளில் படிப்பதனால் ஏற்படக் கூடிய பல பாதிப்புகளை ஓரளவேனும் தவிர்க்க முடியுமெனக் கருதப்படுகின்றது.

ஆனால், சிங்கள மொழிப்பகுதிகளைக் கொண்ட சில முஸ்லிம் பாடசாலைகள் இருந்தாலும் அவை வெற்றிகரமாகச் செயற்படுவதாகத் தெரியவில்லை. குறிப்பாக அங்கு கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களின் சிங்கள மொழியாற்றால் மிகவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இப்பாடசாலைகளில் தமிழ்மொழிச் சூழல் காணப்படுவதாகும். இத்தகைய குறைகளைத் தவிர்க்க முடியுமாயின் மேலும் பல முஸ்லிம் பாடசாலைகளில் சிங்கள மொழிப்பகுதிகளை உருவாக்குவது பொருத்தமானதாக அமையலாம்.

   1. சிங்களப் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கூட்டுதல்.

இன்று ஆயிரக்கணக்கான முஸ்லிம் மாணவர்கள் சிங்களப் பாடசாலைகளில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களின் சமய கலாசார நலன்களைப் பேணுவதற்காக இப்பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். 1991 ஆம் ஆண்டுப் புள்ளி விபரங்களின் படி முழு நாட்டிலும் 953 முஸ்லிம் ஆசிரியர்கள் சிங்கள மொழிமூலப் பாடசாலைகளில் கடமையாற்றினர். சிங்கள மொழி மூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இத்தொகை மிகவும் குறைவானதாகும்.

   1. சிங்கள மொழியில் தரமான இஸ்லாமிய நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் வெளியிடல்.

சிங்கள மொழிமூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்கள்  மத்தியில் அந்நிய கலாசாரத் தாக்கங்களைக் குறைத்து, அவர்களிடையே இஸ்லாமிய சிந்தனைப் பாங்கை வளர்ப்பதற்காகச் சிங்கள மொழியில் இஸ்லாமிய இலக்கியங்கள் எழுதப்படுவது முக்கியமானதாகும். இத்துறையில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கம் பயனுள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வமைப்பு சில இஸ்லாமிய நூல்களைச் சிங்களத்தில் பிரசுரித்துள்ளதுடன் மாதாந்தம் சிங்கள மொழியில் ஒரு சஞ்சிகையையும் (பிரபோதய) வெளியிட்டு வருகின்றது. மற்றும் சில ஸ்தாபனங்களும் தனிப்பட்டோரும் காத்திரமான சில முயற்சிகளைச் செய்துள்ளனர். ஆயினும், இவை போதியனவாக இல்லை. எனவே, சிங்களத்தில் பல வகையான இஸ்லாமிய இலக்கியங்களும் வெளிவருவதற்கு அவசரமாக வழிவகைகள் செய்யப்படல் வேண்டும்.

   1. சிங்கள மொழி மூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்க வழி செய்தல்.

சிங்கள மொழிமூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்கள் மாலை நேரங்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ தமிழ் மொழியைக் கற்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். அத்துடன் அவர்களின் வீட்டின் பேச்சு மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் தமிழ் அமைவதற்கு வழிசெய்தல் வேண்டும்.

முடிவுரை:
இலங்கை முஸ்லிம்கள் கல்வித்துறையில் திட்டமிட்ட அடிப்படையில் செயற்படாமல் இருப்பது கல்விமொழிப் பிரச்சினைக்கு முக்கியமானதொரு காரணமாகும். எதிர்காலத்தில் இப்பிரச்சினை வலுவடைந்து, எதிர்பார்க்கப்படும் தீமைகள் விளைய முன்னர் இப்பொழுதே பிரச்சினைக்கான தீர்வினைக் கண்டு, முஸ்லிம் மாணவர்களை நெறிப்படுத்தி, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வழியமைப்பது முஸ்லிம் புத்திஜீவிகளின் நீங்காக் கடமையாகும்.

We have 74 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player