தஃவா பாதையில் எதிர்நோக்கும் தடைகள்
Last Updated (Tuesday, 30 November 1999 00:00) Tuesday, 28 October 2008 11:06
தஃவா பாதையில் எதிர்நோக்கும் தடைகள்தஃவாவின் பாதை மலர்கள் தூவப்பட்ட, கம்பளங்கள் விரிக்கப்பட்ட, சொகுசான பாதையல்ல. அது கரடுமுரடான ஒரு பாதை. கற்களும் முற்களும் மலிந்த நீண்ட நெடும் பாதை. இதில் பயணம் செய்யும் தாஇகள் மலர் மாலை சூடி வரவேற்கப்படப் போவதில்லை. கற்களும் வன்சொற்களுமே அவர்களை வரவேற்கக் காத்திருக்கின்றன.
இப்பாதை இப்படி அமையவேண்டுமென்பது அல்லாஹ்வின் நியதியாகும். இது சுவனத்துக்கான பாதை. சுவனமே அல்லாஹ்வின் பண்டம். அதனைப் பெறுவதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டும்.
இப்பாதையில் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையில் என்றும் போராட்டம் நடந்து கொண்டே இருக்கும். பிரச்சினைகளென்பது தவிர்க்க முடியாத ஒன்றாய் அமைந்திருக்கும்.
எனவே, தஃவாவின் பாதையில் செல்வோர் அவசியம் தடைகளை எதிர்கொள்ளவும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். அல்குர்ஆன் கூறுவதனைக் கேளுங்கள்:
''மனிதர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் நாங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றோம் என்று கூறுகின்றனர். எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வின் வழியில் ஏதும் துன்பமேற்பட்டால் மனிதர்களால் ஏற்படும் அத்துன்பத்தை அல்லாஹ்வின் வேதனையைப் போல ஆக்கிக்கொள்கின்றனர். உம் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஏதும் உதவி கிடைத்து விட்டால், நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தான் இருந்தோம் என்று கூறுகின்றனர். உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் அல்லவா? விசுவாசம் கொண்டவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். மேலும் நயவஞ்சகர்களையும் அவன் உண்மையில் அறிவான்.'' (அல்அன்கபூத் : 10)
''உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக்கொண்டீர்களா? தூதரையும் அவருடன் விசுவாசம் கொண்டோர்களையும் கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்து அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வரும் என்று அங்கலாய்க்கும் அளவுக்கு அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள். அவ்வேளையில் நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்தில் இருக்கின்றது (என்று கூறப்பட்டது).'' (அல்பகரா : 214)
இப்பாதையில் சென்ற ரஸுல்மார்கள், நபிமார்கள் உட்பட அனைத்துச் சத்திய சீலர்களும் சோதிக்கப்படவே செய்தனர். இப்பாதையில் அடியெடுத்து வைத்தோரும் பயணம் செய்வோரும் சோதனைகளை எதிர்நோக்கவில்லையாயின் கஷ்ட நஷ்டங்களுக்கு முகம் கொடுக்கும் நிலைக்கு உட்படவில்லையாயின் அவர்கள் ஒரு முறை தம்பாதையைத் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கும். உண்மையில் தாம் தஃவாவின் பாதையில் தான் இருக்கின்றோம் என்பது சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருக்கும்.
இப்பாதையில் செல்வோர் இவ்வாறு சோதிக்கப்படுவதற்கும் தடைகளை எதிர்நோக்குவதற்கும் பின்னால் மேலான பல நோக்கங்கள் இருப்பதைக் காணமுடியும். இவ்வம்சத்தை குர்ஆன் ஸுன்னாவின் வெளிச்சத்தில் நோக்கும் போது அல்லாஹுத்தஆலா கீழ்வரும் நோக்கங்களுக்காகத் தனது பாதையில் செல்வோரை, தன்னுடைய உலகில் ஸ்தாபிப்பதற்காக உழைப்போரைச் சோதிக்கின்றான் என்பதைக் காணலாம். அவையாவன:
1. ஈமானின் உண்மையாளர்களாய்த் திகழ்வோரை அதில் பொய்யர்களாக இருப்போரிலிருந்து பிரித்தறிதல். அதாவது முனாபிக்குகளிடமிருந்து முஃமின்களை இனங்காணுதல்.
2. உண்மையான முஜாஹிதுகள், பொறுமைசாலிகள் யாரென்பதைத் தெரிந்து கொள்ளுதல். பிடிவாதக்காரர்களையும் வரம்பு மீறுவோர்களையும் அறிந்து கொள்ளுதல்.
3. உலகில் இறைவனது கலீபாவாகத் திகழ்ந்து அவனது சட்டங்களை அமுல்படுத்துவதற்குத் தேவையான தகுதிகளைப் பெறுவதற்கான பயிற்சிகளை வழங்குதல்.
தஃவாவின் போது பல்வேறுபட்ட சோதனைகளும் தடைகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாதென்ற காரணத்தினாலேயே லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனுக்குச் செய்த உபதேசத்தில் தஃவாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திவிட்டுத் தொடர்ந்து பொறுமையைக் கைக்கொள்வதன் அவசியத்தையும் சொல்லிவைத்தார்கள். அவ்வுபதேசத்தை அல்குர்ஆன் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது:
''என் அருமை மகனே! நீ தொழுகையைக் கடைபிடித்தொழுகு. நன்மையை ஏவித் தீமையை விலக்கு (இப்பணியில்) உனக்கு ஏற்படும் கஷ்டங்களை பொறுமையுடன் சகித்துக்கொள்.செயல்களில் நிச்சயமாக இது மிக்க உறுதியுள்ளதாகும்'' (லுக்மான் : 17)
இனி நாம் தஃவாவின் பாதையில் எத்தகைய சோதனைகளையும் தடைகளையும் எதிர் நோக்க வேண்டியிருக்குமென்பதனை நோக்குவோம் :
1. மக்களின் புறக்கணிப்பு
தஃவாவின் போது எமது அமைப்பை எத்தகைய எதிர்ப்போ ஆட்சேபணையோ இன்றி மக்கள் ஏற்பார்களென்று கூறமுடியாது. இப்பணிக்கென்றே அனுப்பப்பட்ட, இறைவனது நேரடி வழிகாட்டலையும் உதவியையும் பெற்ற இறைத்தூதர்களும் கூட மக்களால் எவ்வளவு தூரம் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதனை வரலாறு நெடுகிலும் காணமுடிகின்றது. சுமார் 950 வருடங்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நபி நூஹ் (அலை) அவர்களையும் அவர்களது தூதையும் அன்றைய மக்கள் புறக்கணித்ததைப் பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
தன்னைப் புறக்கணித்த அம்மக்களைப் பற்றி நபி நூஹ் (அலை) அவர்கள் தன் இறைவனிடம் கீழ்வருமாறு முறையிட்டார்கள் ''என் இறைவனே, நிச்சயமாக நான் என்னுடைய சகோதரர்களை இரவு, பகலாக அழைத்தேன். வெருண்டோடுவதைத் தவிர எனது அழைப்பானது வேறு எதனையும் அவர்களுக்குக் காட்டவில்லை. நீ அவர்களுக்கு மன்னிப்பளிக்க, நான் அவர்களை அழைத்த போதெல்லாம் அவர்கள் தங்களது காதுகளில் தங்களின் விரல்களை வைத்து அடைத்துக்கொண்டு தங்கள் ஆடைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொண்டார்கள். பெரும் அகங்காரம் கொண்டு தங்கள் தவறின் மீது பிடிவாதமாய் நிலைத்திருந்தார்கள். பின்னர் அவர்களை நான் சப்தமிட்டு அழைத்தேன். மேலும், நான் அவர்களுக்குப் பகிரங்கமாகவும் கூறினேன். இரகசியமாகவும் அவர்களுக்குக் கூறினேன்.'' (ஸுறா நூஹ் : 5-9)
மக்கள் தனது அழைப்புக்குச் செவிசாய்க்காது புறக்கணித்து நடந்து கொண்டதால் கோபமுற்ற யூனுஸ் (அலை) அவர்கள் பற்றியும் அதனையிட்டு அல்லாஹ் அன்னாரைத் தண்டித்த விதம் பற்றியும் அல்குர்ஆன் விளக்குகின்றது. (பார்க்க: அன்பியாஊ : 87-88)
2. பரிகசிப்புக்கும் ஏளனத்திற்கும் உட்படல்
இது தஃவாவின் பாதையில் தாஇகள் எதிர்நோக்க வேண்டியுள்ள மற்றுமொரு சோதனையாகும். முஹம்மத் (ஸல்) அவர்கள் கூட பொய்யர், பைத்தியக்காரர், சூனியக்காரர் என்றெல்லாம் திட்டப்பட்டு ஏளனப்படுத்தப்பட்டார்கள். அன்னார் தாயிப் சென்றிருந்த போது சாதாரண சிறுவர்களினாலும் கீழ்த்தரமாகப் பரிகசிக்கப்பட்டதை ஸீரா நமக்கு விளக்குகின்றது. தாஇக்களைப் பொறுத்தவரையில் இத்தகையதொரு நிலையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதனையும் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் அழகுற ஒரு வசனத்தினூடாக விளக்குகின்றார்கள்.
'தாஇக்களாகிய நீங்கள் மக்கள் முன்னால் கனிதரும் மரத்தை ஒத்தோராய்த் திகழுங்கள். மக்கள் அதற்குக் கல்லெறியும் போது அதுவோ அவர்களுக்குக் கனியையல்லவா வழங்குகின்றது'
3. இம்சிக்கப்படல்
இறைபாதையில் சத்தியத்தை நிலைநாட்டச் செல்வோர் இம்சிக்கப்படக் கூடும். பல இழப்புக்களையும் எதிர்கொள்ள நேரிடும். உண்மையில் இம்சைகள், இழப்புக்களின் அளவுக்கு ஏற்பவே வெற்றி கிட்டமுடியும். கடும் சோதனையானது வெற்றிக்கு கட்டியம் கூறுவதாகும். அவ்வுண்மையை அல்குர்ஆன் அழகாகக் கூறுகின்றது:
''மேலும், அவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். தொடர்ந்து அவர்களுக்கு எமது உதவி வந்தது. அல்லாஹ்வுடைய வாக்குகளை எவராலும் மாற்ற முடியாது'' (அல்அன்ஆம் : 34)
இத்தகைய சந்தர்ப்பங்களில் களத்தை விட்டு ஒதுங்குவதினால் அல்லது பின் வாங்குவதனால் பேரிழப்பும் நஷ்டமுமே ஏற்படும். இதனையிட்டு அல்குர்ஆன் கீழ்வருமாறு எடுத்துக்காட்டுகின்றது.
''நீங்கள் பின்வாங்கினால், அல்லாஹ் உங்களைவிட்டு விட்டு நீங்களல்லாத ஒரு கூட்டத்தினரை உங்கள் ஸ்தானத்தில் மாற்றியமைத்து விடுவான். அவர்களோ உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள்.'' (முஹம்மத் : 36)
4. செல்வங்களும் சொத்துக்களும்
தஃவாவின் போது தாஇகள் எதிர்கொள்ளக்கூடிய ஒரு பெரும் தடையாக உலக சுகங்களைக் குறிப்பிட முடியும். பதவி, பட்டம், திருமணம், மனைவிமக்கள், சொத்து சுகங்கள் போன்றன பெரிய அளவில் முட்டுக்கட்டைகளாக அமைவதுண்டு. இவ்விடயத்தை அல்குர்ஆன் பல இடங்களில் விளக்கியிருப்பதனைக் காணலாம். உதாரணத்திற்காக ஓரிரு வசனங்களைக் கீழே நோக்குவோம்:
''நிச்சயமாக உங்கள் செல்வங்களும் உங்களின் குழந்தைகளும் உங்களுக்குப் பெரும் சோதனைகளாகும் என்பதனையும் அறிந்து கொள்ளுங்கள்'' (8:28)
''விசுவாசிகளே! நிச்சயமாக உங்கள் மனைவிகளிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். எனவே, அவர்களைப்பற்றி நீங்கள் எச்சிரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்'' (64:14)
5. பலவீனப்படுத்தலும் தளர்வேட்படுத்தலும்
இதுவும் தஃவாவின் பாதையில் சந்திக்கக் கூடிய ஆபத்தான ஒரு தடையாகும். இப்பாதையிற் செல்வோரைப் பல சக்திகள் பலவீனப்படுத்த முயற்சி செய்யும். ஆலோசனைகள், வழிகாட்டல்கள், உபதேசங்கள் போன்ற பெயர்களில் தாஇகளை இச்சக்திகள் அவர்களது பாதையிலிருந்து பிறழவைக்க முனையும். அவநம்பிக்கையையும் விரக்தியையும் ஏற்படுத்தப் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படும். அல்குர்ஆன் இத்தகையோரைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர்களுக்கு எவ்வாறு மறுப்புத் தெரிவிக்க வேண்டுமென்பதனையும் கற்றுத்தருகின்றது.
''இந்த வெப்ப காலத்தில் நீங்கள் (யுத்தத்திற்கு)செல்லாதீhக்ள என்று கூறுகின்றனர். (அதற்கு நபியே, அவர்களை நோக்கி) நரகத்தின் நெருப்பு இதை விட மிக வெப்பமானது என்று கூறுவீராக, இதனை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?'' (அத்தௌபா : 81)
இத்தகையோரின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி விடாது உள உறுதியுடனும் மனோவலிமையுடனும் நடந்து கொள்ள வேண்டுமென அல்லாஹ் பணிக்கின்றான்.
''மேலும், நீங்கள் தைரியத்தை இழந்து விடவேண்டாம். கவலைப்படவேண்டாம். நீங்கள் முஃமீன்களாக இருந்தால் நீங்களே மேன்மை மிக்கவர்கள்'' (ஆலஇம்ரான் : 139), (ஆலஇம்ரான : 146)
இதுவரை கண்டவை தஃவாவின் பாதையில் ஏற்படக்கூடிய தவிர்க்கமுடியாத தடைகளாகும். ஆனால், இன்னும் சில தடைகள் இருக்கின்றன. நாம் உருவாக்கிக் கொண்டுள்ள அத்தடைகள் இஸ்லாமிய தஃவாவின் முன்னேற்றத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. அவற்றை இனங்கண்டு பரிகாரம் தேடுவது அவசியமும் அவசரமுமான ஒரு பணியாகும். அத்தடைகளிற் பிரதானமானவற்றை இங்கு மிகச்சுருக்கமாக நோக்குவோம்.
1. பரஸ்பரப் புரிந்துணர்வின்மை
இன்று இஸ்லாமிய தஃவாக்களத்தில் பல அமைப்புக்களும் இயக்கங்களும் உழைத்து வந்தாலும் அவற்றிற்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு, புரிந்துணர்வு இல்லாமையால் தப்பபிப்பிராயங்களும் பகைமையும் வெறுப்பும் வளர்ந்து அதுவே பூதாகரமான ஒரு பிரச்சினையாகவும் மாறியுள்ளதைக் காண்கின்றோம். ஒன்றுபட்டு செயற்படக்கூடியவர்களின் சக்தி சிதறடிக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. அற்பமான விவகாரங்களின் அடிப்படையில் பிரிந்து பிளவுபட்டுள்ள இவ்வமைப்புக்கள் பரஸ்பரம்; ஒன்றையொன்று சாடுவதையும் குறைகாண்பதையும் விடுத்து இணங்கிப் போகக்கூடிய அம்சங்களில் இணைந்து செயற்படவும் முற்படாதவரையில் இஸ்லாம் ஒரு பலம் பொருந்திய சக்தியாக மாறுவதற்கில்லை.
இஸ்லாத்துக்கு விரோதமான அமைப்புக்கள் இஸ்லாத்தைப் பொது எதிரியாகக் கொண்டு, எழுச்சி பெற்று வரும், இஸ்லாமிய சக்தியை முறியடிக்க முனைப்புடன் செயற்படும் இக்கால கட்டத்தில், இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புக்களும் குறுகிய இயக்க வேறுபாடுகளை மறந்து பொது எதிரியைச் சந்திக்க முன்வராதவிடத்து விளைவுகள் பயங்கரமாக அமைய இடமுண்டு.
'கிலாப்' எனும் கருத்து வேறுபாடுகள் 'ஷிகாக்' எனும் பிளவுக்கும் பிரிவினைக்கும் இட்டுச்செல்ல வேண்டியதில்லை.
2. திட்டமிடலில் உள்ள கோளாறு
இஸ்லாத்தின் எதிரிகள் திட்டமிட்ட அடிப்படையில் சதிநாசகார முயற்சிகளில் ஈடுபடும் வேளையில், முஸ்லிம்களிற் பலர் திட்டமிடுவது, இஸ்லாத்திற்கும் இஸ்லாம் கூறும் 'தவக்குல்' கோட்பாட்டிற்கும் முரணானது என நம்பிச் செயற்பட்டு வருகின்றனர். இன்னும் பலர் திட்டங்களைத் தீட்டிச் செயற்பட்டாலும் அவை நுணுக்கமற்றவைகளாகக் காணப்படுகின்றன.
பொதுவாக நபி (ஸல்) அவர்கள் தமது அனைத்துக் காரியங்களையும் திட்டமிடப்பட்ட அடிப்படையிலேயே மேற்கொண்டுள்ளார்கள் என்பதற்கு அன்னாரின் ஸீரா சான்று பகர்கின்றது. குறிப்பாக முதலாம், இரண்டாம் ஹிஜ்ரத்களின் போது நபி (ஸல்) அவர்கள் தீட்டிய திட்டங்கள், செய்த முன்னாயத்தங்கள், அல்குர்ஆன் குறிப்பிடும் யூஸுப் (அலை) அவர்களின் பொருளாதாரத்திட்டம் போன்றன இஸ்லாம் திட்டமிட்ட செயற்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.
3. நவீன பிரசார உத்திகளைக் கையாளாமை
பிரச்சாரத்தின் போது சிறந்த உத்திகளையும் வழிமுறைகளையும் கையாளுமாறு அல்குர்ஆன் பணிக்கிறது.
''நபியே! நீர் அறிவு ஞானத்துடனும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமது இறைவன் பால் அழைப்பீராக. மேலும், அவர்களுடன் நீர் சிறந்த முறையில் விவாதிப்பீராக'' (16 : 125)
நபி (ஸல்) அவர்கள் தமது காலத்துப் பிரசார முறைகளைப் பயன்படுத்தத் தவறவில்லை. இதற்குச் சிறந்த உதாரணங்களாக ஸபா மலையில் ஏறியும் ஜாஹிலிய்யாக்காலத்து சந்தைகள், வைபவங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் அன்னார் தமது தூதை முன்வைக்க முயன்றதைக் குறிப்பிடலாம். 'உலகில் இரண்டு அம்சங்களுக்கு வரையறைகள் இல்லை என்பார்கள். காதலும், யுத்தமுமே அவை இரண்டுமாம். மூன்றாவது ஓர் அம்சமும் உண்டு. அதற்கும் வரையறைகளில்லை. அதுவே தஃவாவாகும்' என்கிறார் அபுல் ஹஸன் அலி நத்வி.
இந்தவகையில் நவீன பிரசார சாதனங்களை இஸ்லாமியப் பிரசாரத்தின் போது பயன்படுத்த முடியும் என்றிருப்பினும் பெரும்பாலான தாஇகள் பயன்படுத்துவதில்லை. அவற்றை பிறர் பயன்படுத்துவதைக் கூட முறைகேடான செயலாகக் கருதுகின்றனர். இந்நிலை மிகவும் இரங்கத்தக்கதாகும். அதேநேரத்தில் இஸ்லாத்தின் எதிரிகளோ நவீன பிரசார சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
நவீன சாதனங்களைப் பயன்படுத்துவதில் முஸ்லிம்கள் கொண்டுள்ள இவ்வெதிர்மறையான போக்கு இஸ்லாமிய தஃவாவின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடை என்பதனை மறுப்பதற்கில்லை.
4. இஸ்லாத்தைப் பற்றிய தெளிவின்மை
இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பலர் இஸ்லாத்தைப்பற்றித் தெளிவற்றவர்களாக இருக்கின்றனர். முஸ்லிம்களே இஸ்லாதின் பல அடிப்படைகளைச் சரியாக விளங்கிக் கொள்ளாத துரதிஷ்ட நிலையைக் காண்கிறோம். இஸ்லாத்தில் அதிமுக்கியத்துவம் பெறும் தௌஹீத், இபாதத் போன்ற அம்சங்களைப் பொறுத்தவரையில் கூட மிகக்குறுகிய கண்ணோட்டங்களே காணப்படுகின்றன. பலர் இஸ்லாத்தை அரைகுறையாக முன்வைக்கின்றனர். இதனால் இஸ்லாம் இன்றைய பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைய முடியும் என்பதனை பலர் விளக்கிக்கொள்ளத் தவறிவிடுகின்றனர்.
எனவே, இந்நிலை இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஒரு பெருந்தடையாக அமைந்துள்ளது என்று கூறுவதில் தவறில்லை.
5. இஸ்லாத்திற்கெதிரான கொள்கைகளை இனங் கண்டு கொள்ளாமை
'இஸ்லாத்திற்கெதிரான ஜாஹிலிய்யாப் போக்குகளை அறியாதவன் இஸ்லாத்தை தகர்ப்பவனாகவே இருப்பான்.' என்றார்கள் உமர் (ரழி) அவர்கள். இன்று இராணுவ ரீதியில் படையெடுப்புக்களை விட சிந்தனா ரீதியிலான படையெடுப்புக்கள் படுபயங்கரமாக அமைந்துள்ளன. அவற்றை சரியாக இனங்கண்டு முறியடிக்கும் ஆற்றல் பலரிடம் இல்லாமை இஸ்லாத்தின் பின்னடைவுக்கு பிறிதொரு காரணமாகும். ஸியோனிச, கிறிஸ்தவ அமைப்புக்களின் கெடுபிடிகள் சர்வதேச மட்டத்திலும் உள்ளுர் மட்டத்திலும் வலுவடைந்து வருகின்றன.
அத்வைதம் போன்ற கொள்கைகளும் சுன்னத்ஜமாத் கொள்கைகளுக்கு முரணான மேலும் பல போக்குகளும் முஸ்லிம் சமூகத்தில் பரவி வருகின்றன.
காதியானியா, பஹாயிய்யா போன்ற கொள்கைகளை உடையோர் தீவிர பிரச்சார முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவப் பிரச்சாரம் மிகவும் தந்திரமாகவும் முனைப்புடனும் முஸ்லிம்களின் மத்தியில் நடந்து வருகின்றது. ஆனால் துரதிஸ்டவசமாக முஸ்லிம்கள் இத்தீய சக்திகளை சரியாக இனங்காணத் தவறியுள்ளனர். நண்பர் யார்? பகைவன் யார்? என்பதனை அறியாதிருக்கின்றனர். இது தஃவாவை எந்தளவு பாதிக்கின்றது என்பதனை சொல்ல வேண்டியதில்லை.
6. தீவிரப்போக்கு
இஸ்லாம் நிதானத்தை போதிக்கின்றது. தீவிரத்தை கண்டிக்கின்றது. 'பிடிவாதக்காரர்கள் அழியட்டும்' என்றார்கள் நபியவர்கள். கிறிஸ்தவர்கள் வழிகெடுவதற்கு அவர்கள் மதத்தைப் பின்பற்றுவதில் வரம்புமீறியமையே காரணம் எனக் கூறுகிறது அல்குர்ஆன்.
இன்று இஸ்லாத்தின்பெயரால் தோன்றியுள்ள கண்மூடித்தனமான தீவிரப்போக்கு இஸ்லாத்தையும் அதன் வளர்ச்சியையும் பாதித்துள்ளது. அவர்களின் போக்கை வைத்து இஸ்லாத்தையே பலர் பிழையாக எடைபோட தலைப்பட்டுள்ளனர். அதனைக் காலங்கடந்ததாக, காட்டுமிராண்டித்தனமானதாக, நடைமுறைக்கு ஒவ்வாததாக காணமுனைகின்றனர்.
இஸ்லாம் ஷிர்க்கை ஒழிப்பதில் கூட நிதானமிழந்து அவசரப்படுவதை விரும்புவதில்லை. நிதானம் றஹ்மானின் குணமாகும். அவசரம் ஷைத்தானின் பண்பாகும். பதற்றமும் தீவிரமும் நன்மை பயக்கப் போவதில்லை. நிதானத்துடன் உறுதியான அடிகளை எடுத்து வைத்து உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் செயற்படும் தாஇக்களே இன்று தேவைப்படுகின்றனர்.
எனவே, தஃவாவின் பாதையில் இயற்கையானதும் செயற்கையானதுமான எல்லாத்தடைகளையும் சரியாக இனங்கண்டு அவற்றை பொறுமையுடன் வெற்றிகரமாகக் கடந்து இஸ்லாத்தை உலகில் நிலைநிறுத்தக் கூடிய உணர்வைப் பெறுவோமாக.
