ஜாமிஆ நளீமிய்யாவின் 8வது பட்டமளிப்பு விழா

அல்ஹாஜ் யாகூத் நளீம் அவர்கள் வழங்கிய ஆசிச் செய்தி.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்!.
இம்முறை அஷ்ஷெய்க் பட்டம் பெற்று வெளியேறும் ஜாமிஆ நளீமிய்யாவின் மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.


மர்ஹூம் எம்.ஐ.எம். நளீம் ஹாஜியார் அவர்களது தூரநோக்கின் விளைவாக 1973ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யா ஆத்மீகக் கல்வியையும் லௌகீகக் கல்வியையும் ஒருங்கே வழங்கும் கலாநிலையமாகத் திகழ்கிறது. இஸ்லாமிய உலக பல்கலைக்கழக ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டச் சான்றிதழ் உலகளாவிய பல சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் பெற்றது.பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இன்றுவரை வீறுநடைபோடும் ஜாமிஆ சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற்றிருப்பது முழு முஸ்லிம் சமூகத்துக்கும் பெருமை சேர்ப்பதாய் உள்ளது.

 


ஜாமிஆ நளீமிய்யாவினால் உருவாக்கப்படும் அறிஞர்கள் நவீன சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அதன் பாடத்திட்டத்தில் தகவல் தொழிநுட்பமும் ஒரு பாடமாக இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஜாமிஆவின் பட்டதாரிகள் தாம் பெற்றிருக்கும் ஒப்பற்ற செல்வமான கல்வி மூலமாக முழுமனித சமூகத்திற்கும் நன்மை பயப்பதோடு குறிப்பாக, முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் மத்தியில் தஃவாப்பணியைக் காத்திரமாக முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படு;கின்றனர்.
ஜாமிஆ நளீமிய்யாவின் வளர்ச்சிக்காகவும் உயர்ச்சிக்காகவும் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் ஒத்துழைப்பு வழங்கும் தனி மனிதர்களையும், பொது நிறுவனங்களையும் இந்தச் சந்தர்ப்பத்திலே நான் நன்றியோடு நினைவு கூருகிறேன்.
அல்ஹாஜ் எம்.ஐ.எம். நளீம் அவர்களுடைய சமூக, சமயப் பணிகளை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வதோடு எம் அனைவருக்கும் அருள்புரிவானாக!


பணிப்பாளர் அவர்களின் ஆசிச் செய்தி

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்!

ஜாமிஆ நளீமிய்யா அதன் அறிவுப் பணியின் மூன்றரை தசாப்தங்களைக் கடந்து, அதன் எட்டாவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

1973ம் ஆண்டு ஜாமிஆ நளீமிய்யா நிறுவப்பட்டதானது, இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகும். இஸ்லாமிய கல்வித்துறையில் ஒரு கல்விக் கொள்கையின் பரிசோதனைக் கூடமாக அது ஆரம்பமாகியது. சன்மார்க்கக் கல்வியை உலகியல் கல்வியுடன் இணைக்கும் இப் பரிசோதனை பற்றி வித்தியாசமான வினாக்கள் எழுப்பப்பட்டன.யெடநநஅhயதiஇது மிக நியாயமானதாகும். ஏனெனில் ஜாமிஆ ஆரம்பித்த பயணத்தின் இறுதி எல்லையும், குறிக்கோளும் தெளிவானது. ஆனால், அதனை அடைவதற்கான பாதையும் பயணமும் எவ்வளவு சிரமமானது என்பதை உணர்ந்ததன் விளைவே இப்பணியின் வெற்றி குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களாகும்.

அல்ஹம்துலில்லாஹ் இன்று தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நளீமிய்யாவின் பட்டதாரிகள் ஆற்றிவரும் பணிகள், அவர்களது அறிவுரீதியான அடைவுகள் வகிக்கும் பொறுப்புக்கள், பதவிகள், அனைத்துக்கும் மேலாக இஸ்லாமிய அறிவு சிந்தனைத் துறையில் அவர்கள் செலுத்திவரும் செல்வாக்கு என்பன ஜாமிஆவின் கல்விக் கொள்கையின் வெற்றிக்கு சிறந்த சான்றுகளாக உள்ளன.

இஸ்லாமிய கற்கை நெறித்துறையில் பரவலாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வில்; ஜாமிஆவின் கல்விக் கொள்கையின் செல்வாக்கு கணிசமான அளவு உண்டு என்பது ஒரு பொதுவான உண்மையாகும்.

அல்லாஹ் அதன் எதிர்காலப் பணி சிறப்பாக வளர்ச்சியடைய அருள்புரிவானாக! ஆமீன்!

ஜாமிஆ நளீமிய்யாவின் 35 வருட கால காத்திரமான கல்விப் பயணம்

அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்

இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் 1973 அதி முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாகக் கொள்ளப்படுகின்றது. இலங்கை முஸ்லிம்களின் கல்வித்துறையில் ஒரு திருப்புமுனை எனக் கருதப்படும் ஜாமிஆ நளீமிய்யா இந்த ஆண்டிலேயே தோற்றம் பெற்றது. மார்க்கக் கல்வி என்பது ஒன்று, உலகக் கல்வி என்பது மார்க்கக் கல்வியுடன் தொடர்பற்ற, தொடர்புபடுத்த முடியாத மற்றொன்று என்ற கருத்து சமூகத்தில் பரவலாக நிலவி வந்த ஒரு காலப்பிரிவில் இஸ்லாமியக் கலைகளையும் பொதுக்கல்வியையும் ஏக காலத்தில் கற்ற ஓர் அறிஞர் பரம்பரையை உருவாக்கும் சவால்மிக்க ஓர் பணியில் காலடியெடுத்து வைத்த நளீமிய்யா கலாபீடம் அதன் இலட்சியப் பயணத்தை இன்று வரை மிகவும் வெற்றிகரமாக தொடர்ந்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

நளீமிய்யா கலாபீடத்தின் தனித்துவமான கல்விக்கொள்கையையும்
இலக்குகளையும் துல்லியமாக விளக்குவதாக
அதன் இலட்சியப் பிரகடனம் அமைந்துள்ளது.

ஜாமிஆவின் இலட்சியப் பிரகடனம் (MISSION STATEMENT)

. இஸ்லாமியக் கலைகளில் விரிந்த அறிவும் புலமையும் பெற்ற
. மானிடவியற் கலைகள் பற்றிய போதிய பின்புலத்தைக் கொண்ட
. இஸ்லாமிய உலக நோக்கும் கண்ணோட்டமும் உடைய
. இஸ்லாமிய ஆன்மீக, தார்மீக ஒழுக்க விழுமியங்களால் போஷிக்கப்பட்ட பூரண ஆளுமையைக் கொண்ட
. இஸ்லாமியப் பணியில் அர்ப்பண சிந்தையுடன் செயற்படக் கூடிய
. சமூகத்திற்கு அறிவு ரீதியான தலைமைத்துவத்தை வழங்குகின்ற
. நாட்டுக்கும் மனித சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாகப் பணி புரியும்
தகைமை படைத்த

ஓர் அறிஞர் பரம்பரையை உருவாக்குவதே ஜாமிஆ நளீமிய்யாவின் இலட்சியமாகும் என கலாபீடத்தின் உத்தியோகபூர்வ இலட்சியப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலட்சியங்களுக்கு அமைவாக இந்த கலாபீடம் கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலத்திற்குள் சாதித்துள்ள சாதனைகளுக்கு நாடும் சமூகமும் சாட்சி சொல்லப் போதுமானவையாகும். யெடநநஅhயதகைடந்த மூன்றரைத் தசாப்த காலத்துக்குள் 1300க்கும் மேற்பட்டோர் ஜாமிஆவின் அறிவுச் சுனையிலிருந்து நீர் பருகியுள்ளனர். 2008ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் 116 மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர்.

அபிவிருத்தி, ஆய்வு மற்றும் பயிற்சிக்கான அகடமி
(ACADEMY FOR DEVELOPMENT , RESEARCH AND TRAINING)

நளீமிய்யா கலாபீடம் கடந்த காலங்களில் அறிவுத்துறையில் பல முன்னோடி முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்ட ஒரு நிறுவனமாகும். இந்த வகையில் இதன்மற்றுமொரு முன்னோடி நகர்வாக அண்மைக்காலமாக இயங்கி வரும் அபிவிருத்தி, ஆய்வு மற்றும் பயிற்சிக்கான அகடமி அமைகின்றது.

ADRT என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அகடமி நளீமிய்யாவின் அறிவுப்பணியை நாடளாவிய ரீதியில் துரிதமாக விஸ்தரிக்கும் ஒரு பெரு முயற்சியாகும். குறுகிய காலப் பயிற்சி நெறிகள், பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் முதலான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களுக்கூடாக உலமாக்கள், இமாம்கள், கதீப்மார்கள், துறைசார் நிபுணர்கள் முதலான சமூகத்தலைமைகளை அறிவு ரீதியாக பயிற்றுவிப்பதே ADRT இன் பிரதான குறிக்கோளாகும். மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குவதும் ADRT இன் மற்றுமொரு நோக்கமாகும். பாடசாலைகளினதும் அரபுக்கலாபீடங்களினதும் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறைமை தொடர்பான வழிகாட்டல்களை வழங்கும் பயிற்சிநெறிகளையும் இந்நிறுவனம் நடாத்தவுள்ளது. சுருங்கக் கூறின் ஒரு திறந்த கலாபீடமாக ADRT இயங்கும் எனலாம்.

கணனிப் பயிற்சி நிலையம்:


சமகால சவால்களுக்கு முகம்கொடுக்கவல்ல புத்திஜீவித்துவ சமூகத்தலைமைகளை உருவாக்கும் நோக்குடன் இயங்கும் நளீமிய்யா கலாபீடம் காலத்தின் இன்றியமையாத தேவையாக விளங்கும் கணனி அறிவை மாணவர்களுக்கு வழங்கும் நோக்குடன் கடந்த சுமார் ஒரு தசாப்த காலமாக தனது கணனிப்பயிற்சி நிலையத்தை நடாத்தி வருகின்றது. மேலும் இருபது கணனி இயந்திரங்கள் புதிதாக கொள்வனவு செய்யப்பட்டு வலைப்பின்னல் கட்டமைப்புக்குட்பட்ட ஓர் நிலையமாக இது தற்போது நவீனமயப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



ஜாமிஆ நளீமிய்யாவின் வெளியீட்டுப் பணியகமும் நூலகமும் கடந்த மூன்று தசாப்த காலத்திற்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளன.



இந்தவகையில் ஜாமிஆ நளீமிய்யா எனும் விருட்சம் ஒரு பெரு விருட்சமாக மாறி முழு நாட்டுக்கும் சமூகத்திற்கும் நிழல் பரப்ப எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிய வேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போமாக! ஆமீன்.

We have 10 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player