அத்தவ்ஹீத்
Last Updated (Tuesday, 30 November 1999 00:00) Tuesday, 28 October 2008 09:17
அத்தவ்ஹீத்உலகில் தோன்றிய பெரும்பாலான மதங்கள் இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவையாகும். அதிலும் குறிப்பாக இஸ்லாம், அல்லாஹ்வை நம்புவதைத் தனது ஜீவநாடியாவும் அதன் அனைத்து நம்பிக்கைகளுக்கும் அத்திவாரமாகவும் கொண்டுள்ளது. இதனாலேயே இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் அல்லாஹ்வை நம்புவதே முதலில் குறிப்பிடப்பிடுகின்றமையைக் காண்கிறோம்.
இஸ்லாத்தை ஏற்கும் ஒருவர் முதலில் அல்லாஹ்வை நம்பியதன் பின்னரே ஈமானின் ஏனைய அடிப்படைகளான மலக்குகள், வேதங்கள், இறைதூதர்கள், மறுமை நாள், இறைவனது ஏற்பாடு ஆகியவற்றை நம்ப வேண்டியவராக உள்ளார்.
இஸ்லாம் இறைநம்பிக்கையில் ஒரு குறிப்பிட்ட அம்சத்துக்கு அதிகளவு அழுத்தம் கொடுக்கின்றது; அது தௌஹீத் ஆகும். இவ்வம்சத்தில் தான் இஸ்லாமானது இறைநம்பிக்கை விடயத்தில் ஏனைய மதங்களிலிருந்து வேறுபடுகின்றது.
இறைவன் ஒருவனே, அவன் ஏகன்;, அவனே அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன்;, இரட்சித்துக் காப்பாற்றுபவன், அவனே வணக்கத்துக்குரியவன்;, வழிகாட்டத் தகுந்தவன்;, சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளவன்;, நன்றிக்குரியவன்;;, மனிதனுடைய தேவைகளை அறிந்து நிறைவேற்றக் கூடியவனும் அவனே. இவ்வுண்மைகளே தௌஹீத் எனும் ஏகத்துவத்தின் சுருக்கமான விளக்கமாகும்.
இறைநம்பிக்கை இஸ்லாத்துக்கு அடிப்படையாயிருப்பது போல், தௌஹீத் இறைநம்பிக்கைக்கு அடிப்படையாகவுள்ளது. இதனால் தான் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற அனைத்து அடிப்படைகளுக்கும் மேலாக இஸ்லாம், தௌஹீதுக்கு முதலிடம் அளிக்கின்றது. அல்குர்ஆன் முன்வைக்கும் அனைத்துக் கருத்துக்களினதும் அடிப்படை தௌஹீதேயாகும். இத்தௌஹீதைச் சரியாகப் புரிந்து, ஏற்று வாழ்வதில் தான் ஈருலக வெற்றியும் தங்கியுள்ளது.
தௌஹீதின் பிரிவுகள்
அல்குர்ஆனின் ஒளியில் தௌஹீதை நோக்கும் போது, அது முப்பெரும் பிரிவுகளைக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அவையாவன:
1. தௌஹீத், ருபூபிய்யா
2. தௌஹீத் உலூஹிய்யா
3. தௌஹீத் அல் அஸ்மா வஸ் ஸிபாத்
இம்மூன்றையும் நாம் சிறிது விளக்கமாக ஆராய்வோம்.
தௌஹீத் ருபூபிய்யா:
அல்லாஹ்வை அகிலத்தின் படைப்பாளனாகவும், அனைத்தையும் போஷித்துக் காப்பாற்றுபவனாகவும் ஏற்றுக் கொள்வதை இது குறிக்கும். (உங்களுக்குப் பரிச்சயமான ரப்பு என்ற பதம் ருபூபிய்யத் எனும் சொல்லிலிருந்து பிறந்ததாகும். தௌஹீதின் இப்பிரிவை மறுத்தவர்கள் மனித வரலாற்றில் மிகவும் குறைவு : நபி (ஸல்) அவர்களது வருகைக்கு முன்பு வாழ்ந்த அரேபியர் கூட இவ்வம்சத்தை ஏற்று, நம்பியிருந்தனர். இவ்வுண்மையை உறுதிப்படுத்தும் வகையில் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
''அவர்களிடம் வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார், சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தியவன் யார் என்று நீங்கள் கேட்டால், நிச்சயமாக அல்லாஹ்வே என்று கூறுவார்கள்.''(29:61)
''வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனைக் கொண்டு இறந்த பூமியை உயிர்ப்பிப்பவன் யார் என்று நீங்கள் அவர்களைக் கேட்டால், அல்லாஹ் தான் என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்.'' (29:63)
அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்கி வந்த அவ்வரேபியரும் ருபூபிய்யத்தை மறுப்பவர்களாக இருக்கவில்லை என்பதனை இவ்வசனங்கள் எடுத்துக் காட்டகின்றன. ஆயினும், அவர்கள் இறைவனை மாத்திரம் வணங்கி வழிபடத்தகுந்தவனாக நம்பாத காரணத்தால், அவர்கள் ருபூபிய்யத்தை விசுவாசித்த போதிலும், முஸ்லிம்களாகக் கருதப்படவில்லை.
(நாஸ்திகர் என்போர் தௌஹித் ருபூபிய்யத்தை மறுப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
தௌஹீத் உலூஹிய்யா:
அல்லாஹ்வே வணக்கத்துக்குரியவன்; தொழுதல், பிரார்த்தித்தல், உதவி கோருதல், நேர்ச்சை வைத்தல் போன்ற எல்லா வகையான வணக்க வழிபாடுகளும் அல்லாஹ் ஒருவனுக்காக மாத்திரமே மேற்கொள்ளப்படல் வேண்டும்;; தனக்குத் தேவையான சகல வழிகாட்டல்களையும் வழங்கத் தகுந்த ஏக நாயன் அவனே என்னும் விடயங்களை ஏற்றுக்கொள்வதே தௌஹீத் உலூஹிய்யத்தை விசுவாசிப்பதாகும்.
மேலே கூறப்பட்ட தௌஹீத் ருபூபிய்யாவும், தௌஹீத் உலூஹிய்யாவும் இணைகின்றபோதே தௌஹீத் (ஏகத்துவம்) முழுமையடைகின்றது.
ஆரம்பகால அரேபியர் தௌஹீதின் முதற்பகுதியை ஏற்ற போதிலும், அதன் அடுத்த பகுதியை விசுவாசிக்க வில்லை என்பதனை முன்னர் குறிப்பிட்டோம். ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வை ரப்பாக ஏற்றிருந்த போதிலும், அவனுக்கு இணை கற்பிப்போராகவும் விளங்கினர். பல நியாயங்களைக் கூறி, விக்ரகங்களையும் சிலைகளையும் இன்னும் பலவற்றையும் வணக்கத்துக்குரிய தெய்வங்களாக ஆக்கிக்கொண்டிருந்தனர்.
பொதுவாக மனித வரலாற்றிலே தௌஹீதின் இப்பகுதியை (தௌஹீத் - உலூஹிய்யாவை) மறுப்பவர்களே அதிகமாக இருந்து வந்துள்ளனர். பெரும்பாலும் இறை நம்பிக்கை விடயத்தில் இவ்வம்சத்திலேயே ஏனைய மதங்கள் இஸ்லாத்திலிருந்து வேறுபடுகின்றன. இதனாலேயே உலகில் தோன்றிய அனைத்து இறைதூதர்களும் தௌஹீத் ருபூபிய்யத்தை விட தௌஹீத் உலூஹிய்யாவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். இறை வேதங்களும் இப்பகுதியையே அதிகம் வலியுறுத்துவனவாக இருப்பதை நீங்கள் காணலாம்.
தௌஹீத் அல் அஸ்மா வல் ஸிபாத்:
இது அல்குர்ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் இடம்பெற்றுள்ள அல்லாஹ்வுடைய திருநாமங்களையும் பண்புகளையும் ஏற்று நம்புவதைக் குறிக்கும். இவ்விடயத்தில் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட பல பிரிவினர் வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளனர்.
'இறைவனும் படைப்புக்களும் ஒன்றே, அனைத்துப் படைப்புக்களும், அவனது வெளிப்பாடே, எல்லாம் அவனே, எங்கும் இருப்பவன் அவனே' என்ற கருத்தை ஒரு பிரிவினர் கொண்டிருந்தனர். இது இஸ்லாத்தின் தௌஹீத் கோட்பாட்டிற்கு முரணானது இக்கொள்கை (வஹ்ததுல் வுஜுத்) அத்வைதக் கொள்கை எனக் கூறப்படுகிறது.
இறைவனது, இராதத் எனும் நாட்டத்தையும் கழா எனும் விதியையும் மறுக்கும் மேலும் ஒரு பிரிவினர் இருந்தனர். இவர்களைக் கத்ரிய்யாக்கள் என்போம்.
ஜபரிய்யாக்கள் என்போர் மனிதனது செயற் சுதந்திரத்தை மறுத்ததுடன், நன்மையும், தீமையும், பாவமும் இறைவனின் நாட்டப்படியே நிகழ்கின்றன என்று நம்பினர். மனிதன் காற்றிற் சிக்கிய பஞ்சின் நிலையை ஒத்தவனாக இருக்கின்றான்; இந்த வகையில், அவன் செய்யும் குற்றங்களுக்காக அவனைத் தண்டிக்க முடியாது என்பது இவர்களின் கருத்தாகும்.
அல்லாஹ்வின் பண்புகளை மறுக்காமலும், செயலிழக்கச் செய்யாமலும், வலிந்து அவற்றுக்கு விளக்கம்கொடுக்காமலும், உவமைப்படுத்தாமலும், உதாரணம் கூறாமலும் உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொள்வதே தௌஹீத் அல் அஸ்மா வல் ஸிபாத்தை முறையாக ஏற்றுக்கொள்வதாகும்.
அல்லாஹ்வின் பண்புகளை விளங்க முற்படும் போது,
''அவனைப் போல எதுவுமில்லை. அவன் (யாவற்றையும்) நன்கு செவிமடுப்பவனாகவும் நன்கு பார்ப்பவனாகவும் உள்ளான்'' (42: 11) எனும் அல்குர்ஆன் வசனத்தை மனதிற் கொள்ளல் வேண்டும்.
