பெண்கள் தொழில் புரிதல் - பகுதி 1

பெண்கள் தொழில் புரிதல்

பெண்கள் தொழில் புரிதல் தொடர்பான ஷரீஆவின் கண்ணோட்டத்தையும் தொழில் புரியும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள், நெறிமுறைகள், வரையறைகள் என்பவற்றையும் விளங்குவதற்கு முன்னர் சில முக்கியமான அடிப்படை விடயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றின் வெளிச்சத்தில்தான் பெண்கள் தொழில் புரிவது தொடர்பான விடயம் அலசி ஆராயப்பட வேண்டும்.

 

ஆண்-பெண் வேறுபாடு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

இஸ்லாம் ஆண்-பெண் என்ற பாகுபாடின்றி இரு பாலாருக்குமிடையே சமத்துவத்தைப் பேண விரும்புகிறது. சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர பொதுவாக இஸ்லாம் ஆண் -பெண் இரு பாலாருக்குமிடையே அனைத்து விவகாரங்களிலும் சமத்துவத்தைப் பேணுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 

“பெண்கள் ஆண்களின் சரிபாதி, சமபாதி.”   (அஹ்மத், அபூதாவூத்)

“ஆணோ பெண்ணோ உங்களில் ஒருவருடைய செயலையும் நான் வீணாக்க மாட்டேன். நீங்கள் ஒரு சாரார் மற்றைய சாராரைச் சார்ந்தவர்களாக இருக்கின்றீர்கள்.” (ஆலு இம்ரான்: 195)

ஆணோ பெண்ணோ எவராக இருந்தாலும் அவர் செய்கின்ற எந்த ஒரு செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அல்லாஹ் கூறுகிறான். பொதுவாக அல்லாஹ் மனிதர்களுடைய செயற்பாடுகளையே பார்க்கிறான் எண்ணங்களுக்கேற்ப அவர்களது செயற்பாடுகளுக்கு கூலி வழங்குகின்றான். இதில் எத்தகைய வேறுபாட்டையும் அவன் காண்பிப்பதில்லை.

“ஆணோ பெண்ணோ முஃமினாக இருக்கும் நிலையில் எவர் நற்காரியங்கள் செய்கிறாரோ நிச்சயமாக நாம் அவருக்கு நல்ல வாழ்க்கையை வழங்குவோம். மேலும் அத்தகையவர்கள் செய்து கொண்டிருந்த நற்காரியங்களுக்கு நிறைவான கூலியையும் நாம் கொடுப்போம்.”  (அந்நஹ்ல்: 97)

ஆண்-பெண்  என்ற பாகுபாடின்றி யாராக இருந்தாலும் ஈமான் கொண்ட நிலையில் நற்காரியங்கள் செய்கிறாரோ அவருக்கு நல்ல வாழ்க்கையையும் அவர் செய்து கொண்டிருந்த செயல்களுக்கு உரிய கூலியையும் நிச்சயமாக நாம் வழங்குவோம் என்று அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்.

 

“ஆணோ பெண்ணோ யார் முஃமினாக இருக்கும் நிலையில் நற்காரியங்கள் செய்கின்றாரோ நிச்சயமாக அவர்கள் சுவனம் நுழைவார்கள்.”   (அந்நிஸா: 124)

ஆண் என்ற காரணத்தினாலோ அல்லது பெண் என்ற காரணத்தினாலோ எவருக்கும் அணுவளவு அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. அவர்களது செயற்பாடுகளுக்கான கூலி கூட்டியோ குறைத்தோ வழங்கப்பட மாட்டாது. அனைவரது செயலுக்கும் நிறைவான கூலி கிடைக்கும். இதில் ஆண்-பெண் என்ற வேறுபாடு கிடையவே கிடையாது என்று இந்த வசனம் தெளிவாகச் சொல்கிறது.

இம் மூன்று ஸூராக்களில் வரும் முப்பெரும் வசனங்கள் இஸ்லாம் எவ்வாறு பால் வேறுபாட்டைக் கவனத்திற் கொள்ளாமல் ஆணையும் பெண்ணையும் ஒரே தரத்தில் வைத்து நோக்குகிறது என்பதனை  மிகத் தெளிவாகவும் அழகாகவும் எடுத்துரைக்கின்றன.

தொடரும்...

 

We have 58 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player