ஸூறா அல்பலத்
Last Updated (Saturday, 01 November 2008 13:22) Tuesday, 28 October 2008 07:03
அல் பலத் என வழங்கப்படும் அல்குர்ஆன் அத்தியாயம் 20 வசனங்களைக் கொண்ட மக்காவில் இறங்கிய ஒன்றாகும்.
இந்த சிறிய ஸூறா மனித வாழ்வு பற்றிய அடிப்படையான சில உண்மைகளை விளக்குகின்றது.
ஸூறாவின் ஆரம்ப வசனங்கள், சிலவற்றின் மீது சத்தியம் செய்வதாக அமைந்துள்ளன.
''(அல்லாஹ்வாகிய) நான் இந்த ஊரின் மீது சத்தியம் செய்கின்றேன்.'
இது ஸூறாவின் முதல் வசனமாகும்.
இங்கு 'இந்த ஊர்' என்பது மக்காவைக் குறிக்கின்றது.அதன் மீது சத்தியம் செய்ததன் மூலம் இறைவன் அதன் புனிதத்துவத்தையும் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டுகின்றான். ரப்புல் ஆலமீன் அதன் மீது சத்தியம் செய்யுமளவுக்கு அது கண்ணியத்துக்குரியது என்பது உணர்த்தப்படுகின்றது. உண்மையில், மக்கா நகரம் புனிதமானதுதான். ஏனென்றால் அங்குதான் மக்களுக்கு புகழிடமும் பாதுகாப்பும் வழங்கக்கூடிய உலகின் முதல் இறையில்லமாம் அல்மஸ்ஜிதுல் ஹராம் அமைந்துள்ளது. அங்கு நுழையும் மனிதர்கள் மாத்திரமன்றி அங்கும் அதைச் சூழவுமுள்ள மரம் மட்டைகள், பறவைகள், மிருகங்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் பாதுகாப்பு பெற்றவையாக இருக்கும். இருக்க வேண்டும்.
மேலும் இந்த இல்லம் காபிர்களினதும் முஸ்லிம்களினதும் தந்தைகளான இப்றாஹீம், இஸ்மாஈல் ஆகியோரினால் கட்டியெழுப்பப்பட்டதாகும்.
'நபியே நீங்கள் இந்த ஊரில் இருக்கும் நிலையில் இந்த ஊரின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.' என அமைகின்றது அடுத்த வசனம்.
இங்கு அல்லாஹ் தனது அடியாரும் தூதருமான முஹம்மத் (ஸல்) அவர்களை கௌரவிக்கின்றான். அன்னார் மக்காவில் இருப்பதானது அதன் கண்ணியத்தையும் சிறப்பையும் மேலும் கூட்டுவதாக அமைகின்றது எனக் கூறுகின்றான்.
இவ்வசனம் அன்று தம்மை அல்மஸ்ஜிதுல் ஹராமின் - கஃபதுல்லாவின் காவலர்கள் என்றும், நாங்கள் இஸ்மாஈலின் சந்ததிகள், இப்றாஹீமின் மதத்தவர்கள் என்றும் கூறிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களை ஏற்று வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் கொடுமைகள் புரிந்து கொண்டிருந்த மக்கத்து காபிர்களுக்கு கொடுத்த ஒரு பெரும் அடியாகவும் அமைந்தது.
Download Here 9.5MB
