யுக முடிவு

யுக முடிவு

''உலகம் அழியும் வேளையில் வானம் வெடித்து விடும் போது, நட்சத்திரங்கள் சதறி விடும் போது, சமுத்திரங்கள் வெடிக்க வைக்கப்படும் போது (அல்லது பிளக்கப்படும் போது), புதை குழிகள் (கப்ருகள்) திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும் தான் முன்னர் செய்து அனுப்பியதையும் தான் விட்டு வந்ததையும் நன்கு அறிந்து கொள்ளும். மனிதனே! உன்னைப் படைத்து, மேலான விதத்தில் உருவமைத்து, செம்மையாக உன்னை ஒழுங்குபடுத்திய மிகவும் கண்ணியமிக்க உனது இறைவனின் விடயத்தில் மதி மயக்கியது எது? நீங்களோ கூலி கொடுக்கப்படும் மறுமை நாளை பொய்யாக்குகின்றீர்கள். நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கண்ணியமான எழுத்தாளர்கள் ஆவர். நீங்கள் செய்தவற்றை அவர்கள் அறிவார்கள். நிச்சயமாக நல்லோர் சுகபோகத்தில் இருப்பார்கள். தீயவர்களோ நிச்சயமாக நரகில் இருப்பார்கள். கூலி கொடுக்கப்படும் நாளில் அதில் அவர்கள் நுழைவார்கள். அவர்கள் அதிலிருந்து மறைந்து தப்பிவிட மாட்டார்கள். (நபியே) கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? மேலும், கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? அந்நாள் எந்த ஆத்மாவும் மற்றொரு ஆத்மாவுக்கு எதையும் செய்ய சக்தி பெறாத நாள். முழு அதிகாரமும் அன்றைய நாளில் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.'' (அல் இன்பிதார்: 1-19)

''எவர் கியாமத் நாளை தன் கண்களால் பார்ப்பது போன்ற உணர்வைப் பெற விரும்புகின்றாறோ அவர் இதஷ்ஷம்ஷூ குவ்விரத், இதஸ்ஸமாஉன் பதரத், இதஸ்ஸமாஉன் ஷக்கத் ஆகிய அல்குர்ஆன் ஸூறாக்களை ஓதட்டும்'' (அஹம்மத், திர்மிதி)

இந்நபி மொழியில் ஸூறா அல்இன்பிதாரும் குறிப்பிடப்பட்டுள்ளமையைக் காண்கின்றோhம்.

ஸூறதுல் இன்பிதார் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ள ஓர் அத்தியாயமாகும். ஸூறாவின் முதற் பகுதி, கியாமத் எனும் யுக முடிவை உலகத்தின் அழிவைப் பற்றி விளக்குகின்றது.

அவ்வேளையில் அனைத்தையும் அனைவரையும் வியாபித்த நிலையில் இப்பிரபஞ்சத்தில் ஏற்படவுள்ள பாரிய பிரளயத்தை இப்பகுதி சித்தரித்துக்காட்டுகின்றது. இந்த வகையில் யுக முடிவின் போது வானம் வெடிக்கும், நட்சத்திரங்கள் சிதறும், சமுத்திரங்கள் பிளக்கும், புதைகுழிகள் திறக்கும் என்றும், தொடர்ந்து ஒவ்வொரு மனிதனும் தான் உலகில் செய்தவற்றையும் மறுமைக்காக தேடியவற்றையும் அறிந்து கொள்வான் என்றும் இந்தப் பகுதியில் உள்ள வசனங்கள் குறிப்பிடுகின்றன.

மிகச் சிராகவும் ஒழுங்காகவும் ஒரு கட்டுக்கோப்பில் அமையப்பெற்ற இந்த முழுப்பிரபஞ்சமும் தலைகீழாகப் புரண்டு, சிதைந்து, சீர்குலைந்து, சின்னாபின்னமாகிப் போய்விடும் என்ற உண்மையை ஸூறா அத்தக்வீரின் வசனங்களைப் போன்றே இவ்வசனங்களும் மிக அற்புதமாக, அல்குர்ஆனுக்கே உரிய தனித்துவமான தெய்வீக நடையில் விளக்கியிருப்பதை காண்கின்றோம்.

ஸூறாவின் இரண்டதம் பகுதி, தன்னை சீராகப் படைத்து, செம்மையாக அமைத்து, தன்மீது அளப்பரிய அருட்கொடைகளைச் சொரிந்துள்ள அல்லாஹ்வை மறந்து, நன்றி கெட்டு நடந்து கொள்ளும் மனிதனைப் பற்றிப் பேசுகின்றது. இத்தகைய மனிதனை, அவனது போக்கைக் கண்டிக்கும் பாணியில் இந்தப் பகுதியில் உள்ள வசனங்கள் அமைந்துள்ளன.

மனிதனது இந்த நன்றி மறந்த போக்கிற்கான காரணம், அவன் மறுமையை, மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கையை மறுவுலக விசாரணையை நம்பாது நடந்து கொள்வதாகும் என்று ஸூறாவின் மூன்றாம் பகுதி விளக்குவதுடன், அந்த மறுமையையும் அதன் விசாரணையையும் உறுதிப்படுத்தி, வலியுறுத்தியும் நிற்கின்றது.

ஸூறாவின் இறுதிப்பகுதி விசாரணை நாளின் அதாவது மறுமையின் பாரதூரத்தை சித்தரித்துக்காட்டுகின்றது. அந்த நாளில் மனிதனின் நிர்க்கதியான நிலையை, எத்தகைய சக்தியோ, பலமோ அற்ற நிலையை விளக்கும் இந்தப் பகுதியின் வசனங்கள் அந்த நாளில் முழு அதிகாரத்துடன் அல்லாஹ் ஒருவனே செயற்படுபவனாக இருப்பான் என்றும் குறிப்பிடுகின்றன.

இனி நாம் ஸூறாவின் வசனங்களை சிறிது விளக்கமாக நோக்குவோhம்:

''உலகம் அழியும் வேளையில் வானம் வெடித்து விடும் போது''

இது ஸூறாவின் முதல் வசனமாகும். யுக முடிவின் போது வானமானது வெடித்து விடும். பிளந்து விடும், அதன் திரை நீங்கி விடும் என்ற கருத்துக்களை அல்குர்ஆனின் மற்றும் பல வசனங்களும் குறிப்பிடுகின்றன.

வானம் வெடிக்கும். பிளக்கும் என்று இந்த வசனங்கள் கூறுகின்றன. இது எப்படி நடக்கும்? நடந்த பின் எப்படி இருக்கும் என்பன பற்றி உறுதியாக எதுவும் கூறுவதற்கில்லை. எப்டியாயினும் இந்நிகழ்வு நடந்து விட்டால் இன்று நாம் காணும் கும்மட்ட வடிவிலான வானத்தின் இவ்வமைப்பு காணக்கிடைக்காது.

அடுத்த வசனம் :

''நட்சத்திரங்கள் சிதறி விடும் என்று கூறுகின்றது.''

அதாவது, கியாமத்தின் போது இந்த பிரபஞ்சத்தில் வியாபித்து காணப்படுகின்ற பாரிய நட்சத்திரங்களும் கோள்களும் தமது கட்டுக்கோப்பான அமைப்பில் இருந்து விடுபட்டு, ஒன்றோடு ஒன்று முட்டி மோதி, பயங்கரமாக அழியும் என்று இந்த வசனம் கூறுகின்றது.

எத்தகைய நட்சத்திரங்களுக்கு இந்நிலை ஏற்படும் என்பதனை உறுதியாக கூற முடியாது. எமது சூரிய குடும்பத்தில் கோள்களயும் கிரகங்களையும் மாத்திரம் இது குறிக்கின்றதா அல்லது பிரபஞ்சத்தில் வியாபித்துள்ள இலட்சோப இலட்சம் கோள்களையும் கிரகங்களையும் இது குறித்து நிற்கின்றதா என்பதனை அல்லாஹ்வே அறிந்தவன். எப்படியாயினும் உலக அழிவின் போது தமது ஒளியை இழந்து சிதறும் நட்சத்திரங்கள் உண்டு என்ற உண்மையை மாத்திரம் எங்களால் புரிய முடிகின்றது.

''சமுத்திரங்கள் nடிக்க வைக்கப்படும் போது (அல்லது பிளக்கப்படும் போது)'' இது ஸூறாவின் அடுத்த வசனமாகும்.

நீரின் மூலகங்களான ஒட்சிசனும் ஐதரசனும் பிரிக்கப்பட்டு நீர் என்னும் நிலை இல்லாது போவதனை இந்த வசனம் குறிக்கின்றது என விளக்கலாம். அணு பிளக்கப்படுவது போன்று நீரின் கூறுகள் பிளக்கப்பட்டு அதன் விளைவாக யுக முடிவின் போது ஏற்படும் படுபயங்கரமான நிலையை இந்த வசனம் கூற விறும்புகின்றது என்றும் விளக்க முடியும்.

புவி நடுக்கம், எரி மலைகள் போன்றவற்றின் மூலமாக சமுத்திரங் களுக்கிடையிலான தடைகள் நீக்கப்பட்டு, அவை ஒன்றோடு ஒன்று கலந்து பூமியில் ஏற்படும் மாபெரும் பிரளயத்தை இது குறிக்கும் என்று விளக்குவோரும் உள்ளார்கள்.

இந்த வசனத்திற்கு விளக்கமாக,

''சமுத்திரங்கள் சூடேற்றப்படும் போது'' என்ற ஸூறா அத்தக்வீர்ரில் வரும் வசனம் அமைந்துள்ளது.

''புதைகுழிகள் (கப்ருகள்) திறக்கப்படும் போது''

கியாமத்தின் போது நடைபெறும் மேலே கண்ட நிகழ்வுகளின் விளைவாக புதைகுழிகள் திறக்கும் நிலை தோன்றலாம். அல்லது யுகமுடிவின் போது நடைபெறும் ஒரு தனியான நிகழ்வாகவும் இது அமையலாம். எப்படியும் கப்ருகள் திறந்து கொள்ளும். தொடர்ந்து அவற்றில் இருந்து மனிதர்கள் விசாரணைக்காக, கூலியைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிவருவார்கள் என்ற கருத்தையே இந்த வசனம் கூற விரும்புகின்றது.

இந்த நிலை எற்பட்ட பின்னர் என்ன நடக்கும் என்பதனை அடுத்த வசனம் விளக்குகின்றது:

''ஒவ்வோர் ஆத்மாவும் தான் முன்னர் செய்து அனுப்பியதையும் தான் விட்டு வந்ததையும் நன்கு அறிந்து கொள்ளும்''

ஒவ்வொரு மனிதனும் தான் முதலில் செய்தவற்றையும் இறுதியில் செய்தவற்றையும் அறிந்து கொள்வான் என்று இவ்வசனம் சிலரால் விளக்கப்படுகின்றது.

உலகில் தான் செய்தவற்றையும் அங்கே விட்டு விட்டு வந்த அவற்றின் அடையாளங்களையும் ஒவ்வோர் ஆத்மாவும் தெரிந்து கொள்ளும் என்று மற்றும் சில அறிஞர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் கூறுகின்றார்கள்.

மேலும், சில முபஸ்ஸிரீன்கள் ஒவ்வொரு மனிதனும் யுக முடிவைத் தொடர்ந்து கப்ருகளில் இருந்து வெளிப்பட்டதனை அடுத்து, தான் உலகில் வாழும் காலத்தில் செய்த செயல்களில் உலகத்திற்காக அமைந்தவை எவை, மறுமைக்காக அமைந்தவை எவை என்பதனை நன்கு அறிந்து கொள்வான் என்பதே இந்த வசனத்தின் கருத்தாகும் என்று கூறுகின்றனர்.

புலன்களுக்கும் உணர்வுகளுக்கும் அறிவுக்கும் ஆன்மாவுக்கும் ஊக்கத்தையும் விழிப்பையும் கொடுக்கும் இது வரை கண்ட வசனங்களுக்கு முன்னால் உலகில் வாழும் மனிதனின் பக்கம் ஸூறாவின் கவனம் தீரம்புகின்றது. அவனோ மறதியில், மதிமயக்கத்தில் இருக்கின்றான். எனவே, தொடர்ந்து வரும் வசனங்கள் அவனைத் தட்டியெழுப்பி அவனுக்கு உணர்ச்சியூட்டும் விதத்தில் அமைந்துள்ளன. தான் விரும்பிய அமைப்பில் படைக்கும் ஆற்றல் பெற்ற அல்லாஹ் மனிதனை இத்தகையதோர் அழகான அமைப்பில் செம்மையாகப் படைத்திருப்பது எத்தகையதொரு நிஃமத் - அருட்கொடடை - என்பதனை மனிதனுக்கு உணர்த்தும் விதத்திலும் தொடர்ந்து வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

''மனிதனே! உன்னைப் படைத்து, மேலான விதத்தில் உருவமைத்து செம்மையாக உன்னை ஒழுங்குபடுத்திய மிகவும் கண்ணியமிக்க உனது இறைவனின் விடயத்தில் உன்னை மயக்கியது எது?''

இங்கு அல்லாஹ் மனிதனே என்று விளிப்பதன் மூலம் இந்த ஜீவனுக்கு அவன் வழங்கியுள்ள மானுடம் என்ற அருட்கொடையை நினைவுபடுத்துகின்றான்.

மனிதனை அல்லாஹ் எத்துணை அழகாகவும் நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் படைத்திருக்கின்றான் என்பது இந்த வசனத்தினுடாக உணர்த்தப்படுகின்றது.

மனிதனின் உடலமைப்பு எவ்வளவு அற்புதமானது. எழும்புகளின் அமைப்பு, தசைகளின் அமைப்பு, தோலின் அமைப்பு, சமிபாட்டுத் தொகுதி, சிறுநீரகத் தொகுதிகள் அனைத்தும் எவ்வளவு அதிசயமாக அமைந்துள்ளன. நவீன தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ள எவற்றுடனும் ஒப்பிட்டு நோக்க முடியாத அளவுக்கு அவற்றின் அமைப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றைப் பற்றியௌல்லாம் மனிதனை சிந்திக்கத் தூண்டும் வசனம் இது. உடலின் ஒவ்வோர் உறுப்பினதும் மிக நுணுக்கமான அமைப்பைப் பற்றி நவீன அறிவியல் வியந்து பேசுகின்றது. இத்தகைய அருட்கொடைகளை வழங்கியுள்ள அந்த அல்லாஹ்வை மனிதன் மறந்து மதிமயங்கி இருக்கக் காரணம் என்ன என்பதை தொடர்ந்து விளக்குகின்றது.

மனிதன் மரணத்தின் பின்னுள்ள வாழ்க்கையை, மறுமையை, அங்கு இடமடபெறவிருக்கின்ற விசாரணையை ஏற்று நம்பாது இருப்பதுவே அவனின் இந்நிலைக்கான காரணம் என்று தொடர்ந்து வரும் வசனங்கள் கூறுவதுடன், அந்த மறுமையின் உண்மையை உறுதிப்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளன.

''நீங்களோ கூலி கொடுக்கப்படும் மறுமை நாளை பொய்யாக்குகின்றீர்கள்.''

மறுமையை நம்பாத மனிதர்கள் இடத்தில் நல்லதை, நன்மைகளை, ஒழுங்கை, கட்டுப்பாட்டை எதிர்பார்ப்பதற்கில்லை என்பது இங்கு உணர்த்தப்படுகின்றது. எந்த மறுமையை ஏற்க மறுக்கின்றீர்களோ அந்த மறுமையை நோக்கியே நீங்கள் போய்க்கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் செய்தவை அனைத்தும் கணக்கில் இருக்கின்றன என்ற உண்மை எங்களைப் பார்த்து பின்வருமாறு சொல்லப்படுகின்றது:

''நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கண்ணியமான எழுத்தாளர்கள் ஆவர். நீங்கள் செய்தவற்றை அவர்கள் அறிவார்கள்.''

இங்கு கண்ணியமான எழுத்தாளர்கள் என்பது, மனிதனோடு நெருக்கமாக நின்று அவனது அனைத்து நடவடிக்கைகளையும் மிகக் கவனமாக அவதானித்து அவற்றை பதிவு செய்து கொள்ளும் அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்டுள்ள மலக்குகளைக் குறிக்கும்.

மனிதன் எத்தகைய கண்காணிப்பும் இன்றி வீணே விடப்படவில்லை. மாறாக அவனைப் பின்தொடரும் கௌரவமான காவலர்கள் இருக்கின்றனர். எனவே மனிதன் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மை இவ்வசனங்கள் மூலம் கூறப்படுகின்றன.

கிராமுன் காதிபூன் எனும் கண்ணியமிக்க எழுத்தாளர்களின் பதிவுகளின் அடிப்படையில் எவ்வாறு நல்லவர்கள் நல்ல முடிவுகளையும் தீயோர் டீமாசமான முடிவுகளையும் பெற்றுக் கொள்வர் என்பது அடுத்து வரும் வசனங்களில் விளக்கப்படுகின்றன:

''நிச்சயமாக நல்லோhர் சுகபோகத்தில் இருப்பார்கள். தீயவர்கள் நிச்சயமாக நரகில் இருப்பார்கள். கூலி கொடுக்கப்படும் நாளில் அதில் அவர்கள் நுழைவார்கள். அவர்கள் அதிலிருந்து மறைந்து தப்பிவிட மாட்டார்கள்.''

மறுமை அது மனிதனது குறுகிய அறிவினால் கிரகிக்க முடியாத அளவுக்கு பாரியது. பயங்கரமானது. அதனை எவராலும் விளக்க முடியாது. அது பற்றி அல்லாஹ் ஒருவனால் மட்டுமே வர்ணிக்க முடியும். இக்கருத்தையே அடுத்து வரும் வசனங்கள் கூறுகின்றன:

''நபியே! கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? மேலும், கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?''

அந்நாளில் மனிதன் அடங்கி, ஒடுங்கி, கூனிக்குறுகி, இயலாமையின் எல்லையில், பலவீனத்தின் உச்சியில் இருப்பன். அந்நாளில் முழு அதிகாரத்துடன் செயற்படுபவனாக இருப்பவன் அல்லாஹ் ஒருவன் மாட்டுமே எனக் கூறி, ஸூறாவின் இறுதி வசனங்கள் மறுமையின் பயங்கரத்தை அற்புதமாக சித்தரித்துக் காட்டுகின்றன.

''அந்நாளில் எங்த ஆத்மாவும் மற்றொரு ஆத்மாவுக்கு எதையும் செய்ய சக்தி பெறாத நாள். முழு அதிகாரமும் அன்றைய தினம் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.''

We have 10 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player