நபிகளார் மீது பொய்யுரைத்தல்
Last Updated (Tuesday, 30 November 1999 00:00) Tuesday, 28 October 2008 08:58
நபிகளார் மீது பொய்யுரைத்தல்நபிகளார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
'அறிந்துகொண்டே எவர் என்மீது மனமுரண்டாகப் பொய்யுரைக்கின்றாரோ, அவர் தனக்குரிய இடத்தை நரகமாக ஆக்கிக்கொள்ளட்டும்.'
ஹதீஸ் ஆய்வாளர்கள் இதனை மிகவும் பலம் மிக்க நபிமொழிகளிலொன்றாகக் கருதுகின்றனர். ஹதீஸ்களில் மிகத்தரமான 'முதவாத்திர்' என்ற பிரிவில் இதனை அடக்குகின்றனர். அறுபதிற்கும் அதிகமான நபித்தோழர்கள் அறிவித்த ஒரே ஹதீஸாகவும், சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட பதின்மரும் இணைந்தறிவித்த ஒரே ஹதீஸாகவும் இது கருதப்படுகின்றமை இந்த ஹதீஸின் சிறப்பம்சமாகும். இமாம்களான புகாரி, முஸ்லிம் ஆகிய இருவரும் இந்த ஹதீஸைத் தத்தமது கிரந்தங்களில் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இறைதூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யாகப் புனைந்துரைப்பது (போலி ஹதீஸ்களை அறிவிப்பது) மிகப் பெரும் பாவமாகும் என்ற உண்மையையே இந்த ஹதீஸ் விளக்கி நிற்கின்றது. உண்மையில், நபிகளார் (ஸல்) மீது பொய்யுரைப்பது அல்லாஹ்மீது பொய்யுரைப்பதேயாகும். 'அன்னார் தமது இஷ்டப்படி எதனையும் கூறுவதில்லை. அவர் பேசுவதெல்லாம் வஹியாகவே இருக்கின்றது.' (53:3-4) இந்த வகையில் இறைதூதர் (ஸல்) கூறாத ஒன்றைக் கூறுபவர், இறைவன் தன் தூதருக்குக் கூறாத ஒன்றைக் கூறுகின்ற ஒருவராகக் கருதப்படுவார். இது வஹியின் தூய்மைக்கு எதிரான பாரதூரமான வரம்பு மீறலாகும். இத்தகையோரைப் பற்றியே இறைவன் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றான்:
'கற்பனைக்கு அல்லாஹ்வின் மீது பொய் கூறி, யாதோர் ஆதாரமுமின்றியே மக்களை வழிகெடுப்போனைவிட அக்கிரமக்காரன் யார்? நிச்சயமாக் அல்லாஹ் இத்தகைய அக்கிரமக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.' (6:144)
எனவேதான் பொய்யான ஹதீஸ்களைக் கூறுவதைப் பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவமாக இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இமாமுல் ஹரமைன் (றஹ்) அவர்களின் தந்தையான இமாம் அபூ முஹம்மத் அல் ஜுனைவனி (றஹ்), அறிந்த நிலையில் அண்ணலார் மீது பொய்சொல்பவர் காபிர் எனக் குறிப்பிடுகின்றார்.
பொய்யான ஹதீஸ்களை அறிவித்தவர்களது தௌபா அங்கீகரிக்கப்படுமா என்ற விடயத்தில் இமாம்கள் மத்தியில் கருத்து முரண்பாடு நிலவுகின்றது. பெரும்பாலான அறிஞர்கள், இத்தகையவர்களின் முறையான தௌபா அங்கீகரிக்கப்பட முடியும் எனக் கருத்துக் கொண்டிருப்பினும், பல அறிஞர்கள் இதற்கு மாற்றமான கருத்தையும் கொண்டுள்ளனர். குறிப்பாக, இமாம்களான அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் புகாரியின் ஆசிரியர் அபூபக்கர் அல் ஹுமைதி, இமாம் அபூபக்ர் அஸ்ஸைரபி போன்றோரும் இன்னும் பல முக்கிய ஷாபிஈ மத்ஹபின் ஆரம்பகால அறிஞர்களும் இத்தகைய மனிதனின் தௌபாவை அங்கீகரிக்க முடியாது என்றும், அவரின் எந்த அறிவிப்பையும் ஏற்கமுடியாதென்றும் தீர்க்கமாகக் கூறுகின்றனர்.
சட்டங்களுடன் தொடர்பற்ற 'பழாஇல்' எனப்படும் அமல்கள் பற்றிய சிறப்புகள் தொடர்பான விடயங்களில் போலி ஹதீஸ்களை (மக்களுக்கு 'தீனில்' ஆசையையும் ஆர்வத்தையும் ஊட்டும் நோக்கில்) குறிப்பிடலாமெனக் கருதும் ஒரு கூட்டத்தினர் இஸ்லாமிய வரலாற்றில் இருந்து வந்துள்ளனர். இவர்களை 'கராமியாக்கள்' என்று அழைப்பர். ஆயினும், எவ்விடயத்திலும் இறைதூதர்மீது பொய் உரைப்பது பெரும் பாவம் என்பதே உண்மையாகும். இதுவே, இமாம்களின் 'இஜ்மாஉ' எனப்படும் ஏகோபித்த முடிவாகும்.
இஸ்லாம் உலகில் நிலைபெற, பொய்யர்களின் தேவை இறைவனுக்கும் அவனது தூதருக்கும் இருந்திருக்க முடியாதல்லவா? அன்றி, இறைதூதர் சொல்லாதவற்றைச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட அன்னார் மார்க்கத்தை எத்திவைப்பதில் குறை செய்திருக்க வேண்டுமல்லவா? சாதாரண மக்கள் விடயத்தில் பொய்யுரைப்பதையே பெரும் பாவமாகக் கருதும் இஸ்லாம், வஹியைப் பேசுகின்ற, ஷரீஅத்தைக் கூறுகின்ற நபி மீது பொய்யுரைப்பதை எங்கே அனுமதிக்கப் போகின்றது! இதனால்தான் ஒரு போலி ஹதீஸை, அது போலியானது என்பதை அறிந்துகொண்டு அதனைக் கூறுவது ஹராமாகுமென்றும். அத்தகைய ஹதீஸொன்றைக் குறிப்பிட வேண்டி ஏற்படின், அதன் உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்றும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இன்றேல் இத்தகைய மனிதரும் நாம் விளக்க எடுத்த ஹதீஸில் குறிப்பிட்டுள்ள தண்டனைக்கு ஆளாக நேரிடுவதுடன், றஸுல் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைத்தவர்களின் பட்டியலில் இவரும் அடங்குவாரென்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, ஹதீஸ்களை அறிவிக்கும் விடயத்தில் அதிக பேணுதலோடு நடந்துகொள்ள வேண்டியதும், பிறர் சொல்லக் கேட்கும்பொழுது அவதானத்தோடு இருப்பதும் மிக முக்கியமானதாகும்.
