எண்ணங்களும் செயல்களும்

எண்ணங்களும் செயல்களும்

நபிகளார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

'செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமையும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் நாடியதே உரித்தாகும். எவனுடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனது றஸுலுக்காகவும் மேற்கொள்ளப்பட்டதோ, அவனது ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனது றஸுலுக்காகவும் மேற்கொள்ளப்பட்டதாகும்.'

உமர் (றழி) அறிவிக்கின்ற இந் நபிமொழி ஸிஹாஹ் ஸித்தா என வழங்கப்படும் ஆறு ஹதீஸ் கிரந்தங்களிலும் பதிவாகியுள்ள மிகப் பிரபல்யம் வாய்ந்த ஸஹீஹான ஒரு ஹதீஸாகும். இந்த ஹதீஸின் சிறப்பைப் பல இமாம்கள் புகழந்துரைத்துள்ளனர்.

'ஹதீஸ்களில் இதனைவிடப் பொருளடக்கமிக்க கருத்துச் செறிவுள்ள, கூடிய பயனுள்ள வேறொரு, ஹதீஸ் இல்லை' என அபூ உபைதா (றழி) குறிப்பிடுகின்றார்.

'இந் நபிமொழி அறிவின் மூன்றிலொரு பகுதியை அடக்கியுள்ளது' என இமாம்களான ஷாபிஈ, அஹ்மத் பின் ஹன்பல், அப்துர் ரஹ்மான் பின் மஹ்தி, அலி இப்னுல் மதனி, அபூதாவூத், அல்-தாரகுத்னி போன்றோர் கருதுகின்றனர்.

'ஹதீஸுன்னிய்யாஹ் எனப்படும் இந்நபிமொழி, சட்டத்துறையின் எழுபது பகுதிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது' என இமாம் ஷாபிஈ குறிப்பிடுகின்றார்.

இந்நபிமொழியில் இருந்தே 'செயல்கள் அனைத்தும் நோக்கங்களுடன் தொடர்புடையன' என்ற அடிப்படை இஸ்லாமியச் சட்டவிதி பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உண்மையில், இஸ்லாம் செயல்களின் பெறுமதியை எப்போதும் அவற்றிற்கான உள்நோக்கங்களையும், உந்தற்காரணிகளையும் வைத்தே தீர்மானிக்கின்றது: அனைத்துச் செயல்களும் தூய்மையான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றது. நல்ல நோக்கத்துடன் செய்யப்படுகின்ற எச்செயலையும் உயர்ந்த இபாதத்தாக இஸ்லாம் கருதுகின்றது. அது முழுக்க உலோகாயதம் சார்ந்ததொன்றாக இருப்பினும் சரியே. அதே நேரத்தில் தூய்மையற்ற எண்ணத்தோடு மேற்கொள்ளப்படுகின்ற செயல்கள் உயர்ந்த இபாதத்துகளாக இருப்பினும் கூட, அவை அங்கீகரிக்கப்படாமற் போவது மாத்திரமின்றி, நன்மையையும் நற்கூலியையும் அளிப்பதற்குப் பதிலாகப் பாவத்தையும் தண்டனையையும் தருவனவாக அமைந்து விடும். மனித சமூகத்துக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற தூய எண்ணத்துடன் ஒரு கட்டடத்தைக் கட்டுவதும் விவசாயத்தில் ஈடுபடுவதும் கூட மேலான நன்மையைத் தரக்கூடிய இபாதத்தாக மாறிவிடுகின்றது.

நபிகளார் (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்: 'அநியாயம் செய்யும் நோக்கமோ அத்துமீறும் நோக்கமோ இன்றி எவரொருவர் ஒரு கட்டடத்தைக் கட்டினாரோ அல்லது ஒரு பயிரை நட்டாரோ அதனைக் கொண்டு ரஹ்மானுடைய படைப்புகள் நன்மையடையும் காலமெல்லாம் அவருக்கு நிலையான நற்கூலி கிடைத்துக் கொண்டே இருக்கும்.' (அஹ்மத்)

மேலும் கூறினார்கள்: 'ஒரு முஸ்லிம் நட்ட பயிரிலிருந்து ஒரு பறவையோ மனிதனோ மிருகமோ சாப்பிடும்போது அது அவருக்கு தர்மமாக அமையும்.' (முஸ்லிம்)

நோக்கம் தூய்மையாக அமைந்துவிடும்போது ஒருவர் தனது உடலிச்சையைத் தீர்த்துக்கொள்வதுகூட வணக்கமாக மாறிவிடுகின்றது. தனது கற்பையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கத்துடன் தனது இல்லாளுடன் உடலுறவு கொள்வதையும் இஸ்லாம் இபாதத் எனக் கூறுகின்றது. 'உங்களில் ஒருவர் தனது மனைவியுடன் உடலுறவு கொள்வதும் ஸதக்காவாகும்.' (முஸ்லிம்). தனது மனைவிமக்களுக்காக உழைப்பதும் உணவளிப்பதும் கூட இவ்வாறே கருதப்படுகின்றது. 'அல்லாஹ்வுடைய திருமுகத்தை நாடி நீ மேற்கொள்கின்ற ஒவ்வொரு செலவும், உனது மனைவியின் வாயில் வைக்கப்படுகின்ற உணவுக் கவளம் போன்றவையும் கூட உனக்கு நற்கூலியைத் தரும்.' (புகாரி)

'உனக்கு நீ உணவளித்ததும் உனக்கு தர்மமாகும். உனது குழந்தைக்கு நீ உணவளித்ததும் உனக்கு தர்மமாகும். உனது மனைவிக்கு உணவளித்ததும் உனக்கு தர்மமாகும்.' (அஹ்மத்)

ஒரு நற்காரியத்தைச் செய்யவேண்டுமென்ற கலப்பற்ற எண்ணமிருந்து, அதனைச் செய்ய முடியாமற்போனாலும் அதற்குரிய நன்மையைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு யுத்தத்தின் போது நாயகம் (ஸல்) அவர்கள் தம்மோடு சென்ற படையை நோக்கி கீழ்வருமாறு கூறினார்கள்: 'நாம் மதீனாவிலே சிலரை விட்டுவிட்டு வந்திருக்கின்றோம். நாம் ஒரு கணவாயில் நுழையினும், ஒரு பள்ளத்தாக்கைக் கடப்பினும் அங்கெல்லாம் (எமக்குக் கிடைக்கும் கூலியில்) அவர்களும் எம்முடன் இருக்கின்றனர். நிர்ப்பந்தம் அவர்களை எம்முடன் வராது தடுத்தவிட்டது.'

சிலவேளை நோக்கங்களும் எண்ணங்களும் தூய்மையற்றவையாக அமையும்போது வணக்க வழிபாடுகள் பயனற்றுப் போவது மட்டுமன்றி, பாவகரமானவையாகவும் மாறிவிடுகின்றன. 'தங்கள் தொழுகையில் பராமுகமாக இருக்கும் தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் ஜனங்களுக்குக் காண்பிக்கவே தொழுகின்றனர்.' (அல்-குர்ஆன்)

ஓர் உயர்ந்த இபாத்தான தொழுகை இங்கு முகஸ்துதியின் காரணமாக பெரும் குற்றச் செயலாக மாறிவிடுவதைக் காணலாம். 'அற்ப முகஸ்துதியும் ஷிர்க்காகும்.' (அல்-ஹதீஸ்)

ஒருமுறை ஒருவர் நபிகளாரிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே, 'நான் தானதர்மம் செய்கின்றேன், இன பந்துத் தொடர்பை இறுக்கமாக வைத்துள்ளேன். இவற்றையெல்லாம் அல்லாஹ்வுக்காகவே செய்கின்றேன், ஆயினும், எனது இந்நற்செயல்கள் பற்றிப் பிரஸ்தாபிக்கப்படும் போது நான் மனமகிழ்வதுண்டு. மக்கள் என்னுடைய செயல்களைப் பற்றிக் கதைப்பதையும் நான் விரும்பவே செய்கின்றேன்' என்றார், நபிகளார் பதில் கூறாது மௌனம் சாதித்தார்கள். அப்போது கீழ்வரும் மறைவசனம் இறங்கியது:

''எவர் தன்னுடைய இறைவனைச் சந்திக்க விரும்புகின்றாரோ, அவர் நற்கருமங்களைச் செய்து. தன் இறைவனுக்கு ஒருவரையும் இணைவைக்காது (அவனையே) வணங்கி வரவும்.'' (18:110)

அறிவுத் துறையில் ஈடுபடுவோர் கூடிய மனத் தூய்மையுடன் நடந்துகொள்ளவேண்டும். பெருமைக்காகவும் புகழுக்காகவும் அறிவைத் தேடுவதும் அதனைப் பிறருக்குப் புகட்டுவதும் பெரும் குற்றமாகும். 'அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்திற்காகவே தேடப்பட வேண்டிய அறிவை உலக நன்மை ஒன்றைப் பெறும் நோக்கத்துடன் ஒருவர் கற்றாராயின், அவர் மறுமையில் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்.' (அபூதாவூத்)''அறிஞர்கள் மத்தியில் பெருமையடிப்பதற்காகவோ, மடையர்களை விவாதத்தில் வெற்றிகொள்ளவோ, சபைகளில் முன்னுரிமை பெறவோ அறிவைக் கற்காதீர்கள். அவ்வாறு நடந்துகொள்வோருக்கு நரகமே உரித்தாகும்.' (இப்னு மாஜா)

தூய எண்ணமின்றி மலையளவு நற்கருமங்கள் புரிவதைவிடத் தூய எண்ணத்துடன் செய்யப்படும் அற்ப சொற்ப செயல்கள் மனிதனுக்குப் போதுமானவையாகும். 'தூய்மையுடன் நடந்துகொள். அப்போது குறைந்த செயல்கள் உனக்குப் போதுமானதாகும்.' (அல் ஹாகிம்)

நல்ல நோக்கத்துடன் செய்யும் எச்செயலும் நன்மை அளிக்கும் எனும்போது, பாவங்களையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது, என்ற கருத்தைக் கொள்ளலாகாது, நோக்கங்கள் எவ்வாளவு புனிதமாயினும் பாவங்கள் பாவங்களே, இதனால்தான் 'நன்னோக்கம் ஹராத்தை நியாயப்படுத்தாது' என்ற சட்ட விதி வகுக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாம் தன்னுடைய இலட்சியத்தைப் புனிதமாகக் கருதுவது போலவே அதனை அடைவதற்கான வழிகளும் புனிதமாக இருக்கவேண்டும் என்ற விடயத்தில் கண்டிப்பாக இருக்கின்றது.

'ஹராமான வழியில் உழைத்த செல்வத்தை ஒருவன் தர்மம் செய்தால் அது அவனுக்கு நறகூலியைக் கொடுக்காது, மாறாக, பாவமே கிட்டும்.' (இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான், அல் ஹாகிம்)

'ஓர் அடியான் தான் உழைத்த ஹராமான செல்வத்தை தர்மம் செய்தால் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. அதனைச் செலவு செய்தால் அதில் பரக்கத் ஏற்படாது. தனக்குப் பின்னால் அதனை விட்டுச்சென்றால் அது அவனை நரகத்தின்பால் கொண்டு செல்கின்ற கட்டுச் சாதமாகவே அமையும்.' (முஸ்னத் அஹ்மத்)

நற்காரியங்களையே செய்ய வேண்டும், அவற்றைத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்காக என்ற கலப்பற்ற எண்ணத்துடன் செய்யவேண்டும், அப்பொழுதுதான் இறைத்திருப்தியைப் பெற்றுக்கொள்ளலாம்.

'இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருமாறேயன்றி (வேறு எதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை; இதுதான் நிலையான மார்க்கம்' (98:5)

We have 21 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player