கால்கள் ஒரு ஜமாஅத்தில், கண்களோ உம்மத்தில்!
Last Updated (Tuesday, 23 August 2016 15:33) Tuesday, 23 August 2016 09:39

புத்தளம் தில்லையடி முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் முப்பெரும் விழா சில வாரங்களுக்கு முன் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. இதில் விஷேட பேச்சாளராகக் கலந்துகொண்ட பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளரும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவருமான ஏ.சி.அகார் முஹம்மத் (நளிமீ) ஆற்றிய விஷேட உரையின்தொகுப்பு.
இன்று இலங்கையிலுள்ள சகல அரபுக் கலாசாலைகளையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டுவரவேண்டிய ஒரு கடப்பாடு நம் எல்லோருக்கும் இருக்கிறது. இதற்காக ஒரு குழுச் செயற்திட்டம் தேவைப்படுகிறது. எல்லோருமாக இணைந்து செயற்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. கால்பந்தாட்டப் போட்டியில் அந்த அணி வெற்றிபெற வேண்டும் என்றால் அந்த அணியிலுள்ள எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். தனித்தனியாக கோல் போடுவதற்கு முயற்சித்தால் நிச்சயமாக வெற்றிபெற முடியாது.
அதுபோல இன்று அரசியல் மட்டங்களிலும் சரி, தஃவா மட்டத்திலும் சரி, சமூகப் புனர் நிருமாண மட்டங்களிலும் சரி, எல்லோரும் நல்லெண்ணத்துடன் தனித்தனியாக கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். சில கோல்கள் போடப்படுகிறது. ஆனால் அணி வெற்றிபெறுவதற்கான ஆரோக்கியமான அறிகுறிகள் தென்படுவதாக தெரியவில்லை. உங்களுக்கு மத்தியில் நீங்கள் சர்ச்சையில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு நீங்கள் சர்ச்சையில் ஈடுபட்டால் பலவீனமடைந்து படுதோல்வி அடைவீர்கள் என்று அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
நாம் இலங்கை நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நாட்டைப் பொறுத்தவரை எமது முன்னுரிமைகள் என்ன, நாம் ஆற்ற வேண்டிய பணிகள் யாவை, எமக்கு முன்னாலுள்ள சவால்கள் என்ன என்பதை நாம் அனைவரும் அடையாளம் கண்டு அவற்றுக்கு முகம்கொடுக்கும் வகையில் நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்த வேண்டும். எனவே, பாரம்பரிய முரண்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் சமூகத்தின் இருப்போடு, பாதுகாப்போடு, எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்ட, எதிர்கால தலைமைகளின் இருப்போடு சம்பந்தப்பட்ட விடயங்களில் கவனங்களை செலுத்தத் தவறினால் நிச்சயமாக எமக்கு ஏற்படப் போகின்ற பாதிப்பை எவராலும் தடுக்க முடியாமல் போய்விடும்.
மூவினத்தவர்களும் வாழும் இந்த நாட்டில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற கலையை நாம் படிக்க வேண்டும். இன்று இந்த நாட்டில் முஸ்லிம்களைப் பற்றி, இஸ்லாத்தைப் பற்றி பல்வேறு தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றன. பெண்களின் ஹிஜாப், இஸ்லாம் தீவிரவாத்தை போதிக்கின்றதா? இதுபோன்ற எத்தனையோ கேள்விகள் தொடுக்கப்படுகின்றன.
எனவே, இவ்வாறான கேள்விகளுக்கு அழகாக, ஆக்கபூர்வமாக, அறிவான, தெளிவான விளக்கங்களை சொல்லும் எத்தனை பேரை நாம் உருவாக்கியிருக்கிறோம்? இவர்களை உருவாக்க வேண்டியது அரபுக் கலாசாலைகளின் கடமைகளாகும். பட்டச்சான்றிதழ் அல்ல முக்கியம். தகுதியுள்ள, ஆளுமையுள்ள, மொழி வளமுள்ள, எந்த சந்தேகத்திற்கும் தெளிவான விளக்கத்தை கொடுக்கும் ஆட்களை உருவாக்கும் மிகப் பெரும் கடப்பாடு நம் அனைவருக்கும் இருக்கிறது.
எல்லோரும் விளக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். தெளிவை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தெளிவுபடுத்தக்கூடியவர்களை, இவ்வாறான ஆளுமையுள்ளவர்களை நாம் உருவாக்கியிருக்கிறோமா என்பது பெரும் கேள்வியாகவுள்ளது. மூத்த உலமாக்கள், அரபுக் கலாசாலையின் நிருவாகிகள், அதிபர்கள், தனவந்தர்கள், புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும். ஓதியவர்கள் ஒரு பக்கமும், படித்தவர்கள் மறுபக்கமும் பிரிந்து செல்லும் போக்கு ஆரோக்கியமானது அல்ல. இந்த இரு சாராரும் இணையும் இடத்தில்தான் சமூகத்துடைய வெற்றி இருக்கிறது.
ஒரு பக்கம் படித்தவர்கள், மறுபக்கம் ஷரீஆத்துறை அறிஞர்கள், அடுத்த பக்கம் பணம் படைத்தவர்கள் இவர்கள் அனைவரும் கைகோர்க்கும் பட்சத்தில்தான் வெற்றியுள்ளது. இதற்கு ஜாமிஆ நளீமிய்யா நல்லதொரு உதாரணமாகும்.
ஒரு காலத்தில் நளீமிய்யாவை உருவாக்குவதற்கு மர்ஹூம் நளீம் ஹாஜியார் முன்வைத்த கருத்து 'என்னிடம் பணம் இருக்கிறது. படிப்பு இல்லை. உங்களிடம் படிப்பு இருக்கிறது. பணம் இல்லை. வாருங்கள் படித்தவர்களும், பணம் படைத்தவர்களும் இணைவோம். இந்த சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவோம்' என்று கூறினார். இதன் விளைவுதான் ஜாமிஆ நளீமிய்யாவாகும்.
ஒரு சிறுபான்மை சமூகம் ஒருபோதும் பலவீனமாக இருக்கக் கூடாது. ஐக்கியமாக, ஒற்றுமையாக இருக்கும் போது அல்லாஹ்வின் அருளினால் தொகையில் குறைந்ததாக காணப்பட்டாலும் பலமானதாக காணப்படும். சமூகத்தின் ஐக்கியத்திற்கும், ஒற்றுமைக்கும் எந்த நேரத்திலும் தியாகத்தைச் செய்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இலங்கையின் அடுத்த சமூகங்களோடு , சமயத்தவர்களோடு, கரைந்து போகாமல் கலந்து வாழும் கலையை கற்க வேண்டும். அத்துடன், அரபுக் கலாசாலையில் ஷரீஆக் கல்வியோடு, சமூக நல்லிணக்கம் பற்றியும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இவை இன்றைய காலத்தின் தேவையாகும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஊடாக 95 வருட வரலாற்றிலே முதற் தடவையாக அரபுக் கலாசாலைகளில் கல்வி கற்று பட்டம் பெற்று வெளியேறிய இளம் உலமாக்களுக்கான ஒரு பயிற்சி நெறியை ஆரம்பித்திருக்கிறோம். அந்த பயிற்சி நெறியில் இந்த இளம் உலமாக்களை சமகாலத்து சவால்களுக்கு முகம்கொடுக்கக் கூடிய, சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புவது, சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது, சக வாழ்வை கட்டியெழுப்புவது, முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு காண்பது மாத்திரமன்றி, இக்காலத்து சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய திறன்களை வளர்த்துக்கொள்வது தொடர்பில் பாடத்திட்டங்களை உள்ளடக்கி அவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கி வருகிறோம்.
ஏனெனில் எமது அடுத்த தலைமுறையினரை சரியான முறையில் வழிகாட்ட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. அவர்களது ஒழுக்கம், பண்பாடு, நடத்தை தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருக்கிறோம். பண்பாட்டு வீழ்ச்சியை உலகம் எதிர்நோக்கியிருக்கிறது.
உலக மயமாக்கலின் விளைவு இளைஞர், யுவதிகள் மத்தியில் பாரிய ஒழுக்க சீர்கேடுகள் பரவி வருகின்றது என்பதை நாம் பார்க்கிறோம். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும். எமது இந்த சொற்பொழிவு (பயான்) ஒழுங்கு இந்தக் காலத்து இளைஞர்களுக்கு சரிவராது.
ஒரு மட்டத்திலுள்ளவர்கள்தான் இவற்றை பேசுவார்கள். அதன் பின்னர் இந்தப் பக்கத்தையே பாரக்கமாட்டார்கள். அவ்வாறு வந்தாலும் அவர்களுடைய கைகளில் ஸ்மார்ட் போன்கள்தான் காணப்படும். அவர்கள் வட்ஸ் அப்பில் , பேஸ்புக்கில், வைபரில் இருப்பார்கள்.
இந்த இளைய சமூகத்தை வழிநடாத்துகின்ற பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே, இலங்கையிலுள்ள சகல அரபுக் கலாசாலைகளும் பொதுவான, காலத்திற்கு தேவையான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இளம் உலமாக்களுக்கு ஆளுமைகளை, திறன்களை, மொழியாற்றலை, தேவையான வழிகாட்டல்களை வழங்கி சம காலத்து சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கு வழிசெய்கின்ற மிகப் பெரும் பொறுப்பு நமக்குள்ளது.
ஒவ்வொரு அருளும் அமானிதமாகும். ஆயுள் ஓர் அருள். ஆனால் அது ஓர் அமானிதம். இளமை ஓர் அருள் ஆனால் அது ஓர் அமானிதம். செல்வம் ஓர் அருள் ஆனால் அது ஓர் அமானிதம். பதவி ஓர் அருள் ஆனால் அது ஓர் அமானிதம். மதரஸா ஓர் அருள் ஆனால் அது ஒரு அமானிதம். இந்த அமானிதம் பற்றி நாளை நிச்சயமாக விசாரிக்கப்படுவோம்.
