இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் இப்னு தைமிய்யா - ஆய்வுச் சுருக்கம்
Last Updated (Sunday, 10 February 2013 16:12) Sunday, 10 February 2013 15:53

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுமுல்லாஹ்)
வாழ்வும் பணியும் ஓர் ஆய்வுக் குறிப்பு
அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி), பிரதிப் பணிப்பாளர், ஜாமிஆ நளீமிய்யா
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்)
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் வாழ்ந்த காலம் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியும் மூன்றாம் நூற்றாண்டின் முதலாம் அரைப் பகுதியுமாகும். இக்காலப் பிரிவு பிக்ஹு இமாம்களின் இறுதிப் பகுதியாகும். மேலும் இது இஸ்லாமிய அறிவு, கலை, கலாசார வரலாற்றில் மிக வளமான காலமுமாகும். மறுபக்கத்தில் அந்நிய கலாசார நாகரிகங்களின் அறிவுக் கருவூலங்களை முஸ்லிம்கள் உள்வாங்கிய காலப் பிரிவும் இதுவாகும். குறிப்பாக, கிரேக்க தத்துவம் வியக்கத்தக்க விதத்தில் முஸ்லிம் தத்துவவியலாளரிடம் செல்வாக்குச் செலுத்திய காலமாக இது விளங்கியது. மதத்திற்கும் தத்துவத்திற்குமிடையே இணக்கம் காணும் சிந்தனை முஸ்லிம் தத்துவ மேதைகளிடம் வளர்ந்திருந்தது கதரிய்யாக்கள் தோன்றியிருந்தனர் முஃதஸிலாக்கள் உருவாகி முதிர்ச்சி பெற்றிருந்தனர். அதுவரை தூய இஸ்லாத்தின் காவலராக இருந்து வந்த ஆட்சியாளர்களிடமும் புதுக் கோட்பாடுகளின் தாக்கம் எதிரொலிக்கலாயிற்று. கலீபா அல்மஃமூனும் முஃதஸிலா கொள்கையினால் கவரப்பட்டிருந்தார். அல்லாஹ்வின் பண்புகளில் சில வற்றை இல்லாமல் செய்யும் ஷகுர்ஆன் படைக்கப்பட்டது| என்ற கோட்பாட்டையும் ஏற்றுக் கொண்டிருந்தார். இக்கருத்துடன் முரண்பட்ட அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவைச் சேர்ந்தோர் பல்வேறு பிரச்சினைகளுக்கும் நெருக்குதல்களுக்கும் உள்ளாகும் நிலை உருவாகியிருந்தது.
உண்மையில் இஸ்லாமிய வரலாற்றில் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ உலமாக்கள் அரசியல் பீடத்திலிருந்து எதிர்நோக்கிய முதல் அறைகூவலாக இது கருதப்படுகின்றது. முஃதஸிலாக்களின் குறித்த கொள் கையை ஏற்றுக் கொள்ளாத ஒருவரை அரச பதவியொன்றில் அமர்த்துவதோ அவரின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்வதோ கூடாது என்று தடையுத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருந்தது. முஃதஸிலாக்களின் கொள்கைகளும் அவை சார்ந்த நிலைப்பாடுகளும் குர்ஆன், ஸுன்னாவையும் தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழிமுறையையும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த தூய இஸ்லாத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததைக் கண்ட இமாம் அஹ்மத்,
முஃதஸிலாக்களுக்கெதிராக மிகவும் துணிச்சலாக செயற்படலானார். இது இமாம் அவர்கள் மேற்கொண்ட ஷதூய இஸ்லாமியப் போராட்டம்| என வர்ணிக்கப்படுகின்றது.
இமாம் அஹ்மதின் இந்நிலைப்பாடு அன்றைய சூழல் வேண்டி நின்றதொன்றாகும்.
தூய இஸ்லாமியக் கோட்பாடானது ஏக காலத்தில் தன் முதற் தன்மையையும் (ஊழவெநஅpழசயசல) உடனிகழ்வுத் தன்மையையும் (ழுசபைiயெடவைல) பெற்றதாகும் என்பதை இது காட்டுகின்றது. இமாம் அஹ்மதின் தூய இஸ்லாமியப் போராட்டத்தை விளங்கிக் கொள்வதற்கு முஃதஸிலாக்கள், அவர்களின் கொள்கை பற்றிய தெளிவு அவசியமானதாகும்.
கிரேக்க, ஸுர்யானிய அறிவியற் கலைகளின் தாக்கத்தினால் தோன்றிய முஃதஸிலாக்கள் பரந்த அறிவையும் சிறந்த விளக்கத்தையும் பெற்றிருந்தபோதிலும் அறிவில் ஆழத்தையோ நுணுக்கத்தையோ பெற்றிருந்தனர் எனக் கூறுவதற்கில்லை.
இவர்களில் பலர் தீனின் உண்மை நிலையை விளங்கிக் கொள்ளத் தவறி விட்ட னர். பகுத்தறிவின் ஆதிக்கத்தையும் மனித அறிவின் எல்லையையும் நிர்ணயிப்பதில் இவர்கள் அத்துமீறி விட்டனர். மார்க்கம் பற்றியும் இயற்கைக்கு அப்பாலுள்ள விடயங்கள் பற்றியும் இவர்கள் மேற்கொண்ட ஆய்வு களும் முன்வைத்த கோட்பாடுகளும் முதிர்ச்சியடைந் தவையாக இருக்கவில்லை. மாறாக, நுணுக்கத்தை இழந்த அவசர முடிவுகளாகவே அவை அமைந்தன.
முஃதஸிலாக்களை நியாயப்படுத்தும் சிந்தனைப் போக்கைக் கொண்ட கலாநிதி அஹ்மத் அமீன், பகுத்தறிவைப் பூஜிப்பதிலும் அதன் பலத்தையும் வலுவையும் விசுவாசிப்பதிலும் முஃதஸிலாக்கள் அத்துமீறி விட்டனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றார். அவர் முஃதஸிலாக்களுக்கும் (இமாம் அஹ்மதின் தலைமை யிலான) அன்றைய முஹத்திஸீன்களுக்கும் இடையில் நிலவிய கருத்து வேறுபாட்டைப் பற்றி பின்வருமாறு விளக்குகின்றார்:
“இவர்களுக்கும் முஃதஸிலாக்களுக்குமிடையில் நிலவிய அடிப்படைக் கருத்து வேறுபாடு பகுத்தறிவின் ஆதிக்கம், அதன் பரப்பு, எல்லை பற்றியதாகும். முஃத ஸிலாக்கள், மனித அறிவானது அல்லாஹ்வுடன் தொடர் புடைய விடயங்களில் கூட ஆதாரங்களை முன்வைத்து நிறுவும் அளவுக்கு பலமும் பரப்பும் கொண் டது. பகுத்த றிவுக்கு அதன் ஆதாரங்களைத் தவிர வேறு எல்லைகள் இல்லை.
சான்றாதாரம் கிடைத்து விட்டால் தவறுக்கோ பிழைக்கோ இடமில்லை என்று கருதினர். எனவே, மிக நுணுக்கமானதும் சிரமமானதும் சிக்கலானதுமான விடயங்களிலும் அவர்கள் சான்றாதாரங்களைப் பிரயோகித்தனர். அத்தகைய விடயங்களிலும் சத்தியத்தைக் கண்டறியும் ஆற்றல் பகுத்தறிவுக்குண்டு எனக் கண்டனர். முஃதஸிலாக்களின் இச்சிந்தனைப் பாங்கு அவர்களின் அனைத்து ஆய்வுகளிலும் பிரதிபலித்தது. (பகுத்தறி வின்) சான்றாதாரத்தின் எல்லைக்கே அவர்கள் சென்றனர். மிகவும் சிரமமானதும் சிக்கலானதுமான பிரச்சினைகளைக் கிளறி அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிய முற்பட்டனர். அவ்வாறு தீர்வைக் கண்டு விட்டால் அல்லது தீர்வு பெறப்பட்டு விட்டதாக அவர்கள் நம்பினால் அதற் கேற்ப அல்குர்ஆன் வசனங்களை விளக்க முற்பட்டனர். ஆனால், அடுத்த தரப்பினரோ (அதாவது முஹத்திஸீன்கள்) இதற்கு நேர்மாற்றமாக நடந்து கொண்டனர். பகுத்தறிவு பலவீனமானது அல்லாஹ் தொடர்பான விட யங்களைப் புரிந்து கொள்வதில் அதன் சக்தி வரையறைக்குட்பட்டதாகும்.
அல்லாஹ்வின் இருப்பு, நுபுவ்வத், முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் களின் தூதுத்துவம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கே அதற்குச் சக்தியுண்டு. அல்லாஹ்வின் யதார்த்தத்தையோ, பண்புகளையோ அடையும் ஆற்றல் அதற்கு வழங்கப்படவில்லை. எனவே, அதைப் பற்றி அவனது தூதர்கள் கொண்டு வந்து கூறி யதை நம்புவோம் அவர்கள் கூறிய விடயங்களுடன் நின்று விடுவோம் நபிமார்கள் பேசாத பேச்சுக்களை கிளறாமல் இருப்போம் அவ்வாறு சர்ச்சைகளைக் கிளப்புகின் றவர்களுக்கு முன்னால் பாதையை மூடி விடுவோம் அவர்களோடு நாம் ஏதாவது ஒரு விடயமாக விவாதித்தால் அவர்களின் பிழைகளையும் அவர்களது வழிமுறையின் பிழைகளையும் விளக்கவே விவாதிப்போம்” என்றனர்.
கட்புலனாவதுடன் கட்புலனாகாததை ஒப்புநோக்கும் முஃதஸிலாக்களின் போக்கை மற்றNhர் இடத்தில் அஹ்மத் அமீன் பின்வருமாறு விளக்குகின்றார்:
“அவர்களிடம் காணப்பட்ட பிரதான குறைபாடு யாதெனில், அவர்கள் கற்புலனாவதுடன் கட்புலனாகா ததை, மனிதனுடன் அல்லாஹ்வை ஒப்பு நோக்குவதில் அளவு கடந்து சென்றமையாகும் எனலாம். அவர்கள் இவ்வுலக நியதிகளுக்குள் அல்லாஹ்வைக் கொண்டு வந்தனர்.
பகுத்தறிவை பூஜித்து அதற்கு தெய்வீக அந்தஸ்தை வழங்குகின்ற, நம்பிக்கைகளையும் மற்றும் பல உண்மை களையும் கொண்ட சமய ஒழுங்கை இறைவனது தாத், ஸிபாத், அஃப்ஆல்களைக் கூட பகுத்தறிவின் ஆளுகைக்கு உட்படுத்துகின்ற, கட்புலனாகாததை கட்புலனாவதுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற முஃதஸிலாக்களின் சிந்தனைப் போக்கானது இஸ்லாத்திற்கு ஓர் அச்சுறுத்தலாகவே அமைந்தது. இஸ்லாமிய சமூகத்தில் பெரும் சீர்குலைவின் வாயிலையும் திறந்து விட்டது. மேலும் இது ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கொண்டு வந்த எளிமையானதும் செயலுடன் கூடிய துமான சன்மார்க் கத்தை மனித அறிவை வைத்து, அறிவும் விவேகமும் பெற்றவர்களால்கூட புரிந்து கொள்ள முடியாத நுணுக்கமான, வெறும் சித்தாந்த வடிவிலான தத்துவமாக மாற்றியது. மேலும் இச்சிந்தனைப் போக்கு உணர்வுக்கெதிராக பகுத்தறிவை வளர்த்தெடுப்பதாகவும் ஈமானை பலவீனப் படுத்துவதாகவும் சந்தேகங்களையும் ஐயங்களையும் உரு வாக்குவதாகவும் அமைந்தது. அதேபோன்று, அறிவால் நியாயம் கற்பிக்க முடியாத சான்றாதாரத்தை முன்வைக்க முடியாத, நபி கொண்டு வந்த விடயங்களிலும் அவ நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது.
முஃதஸிலாக்கள் கலீபா மஃமூன் ஆட்சிபீடம் ஏறும் வரை பல முஸ்லிம் சிந்தனைப் பிரிவுகளில் ஒரு பிரிவாகவே இருந்து வந்தனர். அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒரு பலம் வாய்ந்த அமைப்பாக இருக்கவில்லை. கலீபா மஃமூன் ஆட்சிபீடம் ஏறியதையடுத்து நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. மஃமூன் இயல்பாகவே தத்துவ சிந்தனைப் பாங்குடையவராகவும் மார்க்க அடிப்படைகளைப் பேணிய நிலையில் சுதந்திர சிந்தனையை ஆதரிப்பவராகவும் விளங்கினார். இதனால் கூடிய சுதந்திர சிந்தனைப் போக்கைக் கொண்ட, அதிகம் பகுத்தறிவில் தங்கி நின்ற முஃதஸிலா சிந்தனை இவருக்கு மிகவும் ஏற்புடையதாக அமைந்தது. எனவே இவர் முஃதஸிலாக்களைப் படிப்படியாக நெருங்கலானார். காலப்போக்கில் அவர்கள் அரச மாளிகையில் மிகவும் செல்வாக்குப் பெற்றவர்களாக மாறினர்...”
இவ்வாறுதான் முஃதஸிலாக்கள் அப்பாஸிய ஆட்சி யில் பலமும் செல்வாக்கும் பெற்றார்கள். முஃதஸிலா சிந்தனை பிரதம நீதியரசர் உட்பட மேலதிகாரிகள் அனைவரதும் நம்பிக்கையாக மாறி உத்தியோகபூர்வ கொள்கையின் அந்தஸ்தைப் பெற்றது. முஃதஸிலாக்களின் இயல்பானது நாட்டில் இரு வேறுபட்ட சிந்தனை இருப்பதை நியாயம் காண விரும்பவில்லை.
அவர்களிடம் ஒரு வகை விசித்திரமான இயல்பு காணப்பட்டது. ஏக காலத்தில் அவர்கள் பிடிவாதப் போக்கையும் தீவிர சுதந்திர சிந்தனைப் போக்கையும் கொண்டிருந்தனர். வரலாற்றில் ஒரு பக்கத்தில் தீவிர சிந்தனைச் சுதந்திரத்தை வலியுறுத்தியவர்களிடத்தில் மறுபக்கத்தில் கடும் பிடிவாதப் போக்கு மிகைத்து நின்றதையும் காண முடிகின்றது. இவர்கள் சிந்தனைச் சுதந்திரத்தை தமது ஏகபோக உரிமையாகக் கருதியதுடன் பிறருக்கு அதனை மறுக்கும் மனப்பாங்குடையோராகவும் இருந்தனர். முஃதஸிலாக்கள் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டுக்கான ஏக வியாக்கியானமாக முஃதஸிலா சிந்தனையே அமைதல் வேண்டும் எனக் கருதினர். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் அரசோச்சும் ஏக கொள்கையாக அவர்களது கொள்கையே இருத்தல் வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. அல்குர்ஆன் படைக்கப்பட்டமை தொடர்பான சட்டப் பிரச்சினை இவர்களது கொள்கையை கணிப்பிடுவதற்கான சிறந்த அளவுகோலாக அமைந்தது. எனவே, அவர்கள் குறித்த சட்டப் பிரச்சினைக்கு அழுத்தம் கொடுத்து அதனை ஈமானுக்கும் குப்ருக்கும் இடையிலான பிரி கோடாகவும் தௌஹீதின் பிரகடனமாகவும் அகீதாவின் சீர்மைக்கான நிபந்தனை (ஷர்த்)யாகவும் ஆக்கினர்.
இவர்களின் நிலைப்பாட்டின்படி அல்லாஹ் மட்டுமே பூர்வீகமானவன் (கதீம்) அவனல்லாத அனைத்தும் புதிதாக உருவாக்கப்பட்டவையும் படைக்கப்பட்டவையு மாகும். ஆனால், முஹத்திஸீன்களோ, இந்நூதன விளக் கத்தை கடுமையாக ஆட்சேபித்தனர்.
“அல்குர்ஆன் அல்லாஹ்வுடைய கலாமாகும். அது படைக்கப்பட்டது என்றNh, படைக்கப்படாதது என்றNh நாம் கூற மாட்டோம். இத்தகையதொரு பிரச்சினையை கிளப்புவது பித்ஆவாகும். இதுபற்றி நபியோ அவர்களது தோழர்களோ பேசவில்லை. அல்குர்ஆன் அல்லாஹ்வின் கலாமாகும் என்று கூறுவதுடன் நாம் நிறுத்திக் கொள்வோம். இதை மட்டுமே அல்லாஹ் தனது குர்ஆனில் கூறியுள்ளான்” என்று வாதிட்டனர். ஆனால், முஃதஸிலாக்களோ அவர்கள் உருவாக்கிய பகுத்தறிவுப் பின்னணியில் இந்நம்பிக்கையை வலியுறுத்துவது கட்டாயக் கடமை என்று கருதினர். இதில் இஸ்லாமிய அரசு விட்டுக் கொடுக்கவோ, சகிப்புத்தன் மையுடன் நடந்து கொள்ளவோ, பாராமுகமாக இருக்கவோ முடியாது என்று கண்டனர். இந்த வகையில் அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்ற நம்பிக்கையிலேயே இஸ்லாம் தங்கியுள்ளது என்று கருதியே இவர்கள் இஸ்லாமிய அரசின் அன்றைய கலீபாவான மஃமூனை இக்கொள் கையை மக்கள் ஏற்கச் செய்யுமாறு வற்புறுத்தினர்.
ஹிஜ்ரி 218ஆம் ஆண்டு மஃமூனும் நாட்டு மக்கள் (முஸ்லிம்கள்) அனைவரும் குறித்த கொள்கையை ஏற்கு மாறு பணிப்புரை வழங்கினார். இதுபற்றி முதலாவதாக பக்தாத் கவர்னராக இருந்த இஸ்ஹாக் இப்னு இப்றாஹீ முக்கு ஒரு விசேட நிரூபம் அனுப்பினார். அதில் பின்வரு மாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
“சன்மார்க்கத்தைப் பாதுகாப்பதும் அதனை நிலைநாட் டுவதும் பிரஜைகள் மத்தியில் சத்தியத்தின் அடிப்படையில் செயற்படுவதும் முஸ்லிம்களின் கலீபாவின் கடமையா கும்.” மேலும் இந்நிருபத்தில் அவர் “அல்குர்ஆன் பூர்வீக மானது என்று கூறுபவர்களும் அது படைக்கப்பட்டது என்பதை நிராகரிப்பவர்களும் உம்மத்தின் மிகவும் கெட்ட வர்களும் தௌஹீதில் குறைபாடுள்ள வழிகேட்டின் தலைவர்களும் ஆவர். வாய்மையையிட்டு குற்றம் சாட்டப்படுவதற்கும் சாட்சி நிராகரிக்கப்படுவதற்கும் சொல்லையோ செயலையோ நம்பாமல் இருப்பதற்கும் மிகவும் தகுதியுடையோருமாவர்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், கவர்னர் மக்களை ஒன்றுகூட்டி, குறித்த விடயத்தில் அவர்களின் நம்பிக்கையைப் பரீட்சிக்க வேண்டும். இந் நம்பிக்கையை ஏற்காதவர்களை அரச பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் பணிப்புரை வழங்கியிருந்தார்.
இவ்வாறுதான் வரலாற்றின் சோதனை (அல்மிஹ்னா) என வழங்கப்படும் இப்பிரச்சினை தோற்றம் பெற்றது. கலீ பாவின் பணிப்புரையின் கீழ் மக்களின் நம்பிக்கை பரீட் சிக்கப்பட்டது பலர் அரச பதவிகளிலிருந்து நீக்கப்பட் டனர். குறித்த தத்துவப் பிரச்சினை அரசு, கலீபா உட்பட நாட்டு மக்கள் அனைவரதும் ஏகப் பிரச்சினையாக மாறி யது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களால் இப்பிரச்சினையை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் பெரும் சிந்தனைச் சிக்கலில் மாட்டிக் கொண்டனர். இக்கொள்கையை ஏற்பதா, மறுப்பதா என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை.
இந்நிலையில் மக்களுக்கு ஒரு பெரும் வழிகாட்டல் தேவைப்பட்டது. வேறு வார்த்தையில் கூறுவதாயின் தூய இஸ்லாத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிராக அரசுடனும் அதிகாரிகளுடனும் துணிச்சலுடன் போராடி சத்தியத்தை நிலைநாட்டும் ஆற்றலும் ஆளு மையும் பெற்ற ஒரு சன்மார்க்கத் தலைமைத்துவம் தேவைப்பட்டது. இப்பின்னணியிலேயே காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இமாம் அஹ்மதின் களப் பிரவேசம் இடம்பெற்றது.
இமாம் அஹ்மதின் நிலைப்பாடுகள்
இமாம் அஹ்மதின் காலத்தில் முஃதஸிலாக்கள் உட்பட மற்றும் பல இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகள் பல்வேறு சன்மார்க்கப் பிரச்சினைகளை எழுப்பி அவை தொடர்பான வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தன. ஈமானின் உண்மை நிலை, கழா கத்ரும் மனிதனது சிந்தனை செயல் சுதந்திரமும், பாவங்களும் ஈமானில் அவை ஏற்படுத்தும் தாக்கமும், பெரும் பாவி பற்றிய நிலைப்பாடு, அல்குர்ஆன் படைக்கப்பட்டமை, மறுமையில் அல்லாஹ்வைக் கண்களால் காணுதல் ஆகியன தொடர்பான பிரச்சினைகள் உட்பட அல்லாஹ்வின் பண்புகளுடன் தொடர்பான கருத்துக்கள் முதலியனவும் இக்காலத்தில் அலசப்பட்ட பிரதான, நம்பிக்கை சார்ந்த சன்மார்க்கப் பிரச்சினைகளாகும்.
இப்பிரச்சினைகள் பற்றி இமாம் அஹ்மத் குர்ஆன், ஸுன்னா, தூய இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்கள் ஆகியவற்றின் ஒளியில் தூய இஸ்லாமிய நிலைப்பாடுகளை முன்வைத்தார். தற்கால தூய இஸ்லாமிய சிந்தனையின் பின்னணியைப் புரிந்து கொள்வதற்கு அதன் முன்னோடிகளில் ஒருவரான இமாம் அஹ்மதின் இந்நிலைப்பாடுகளை விளங்கிக் கொள்வது அவசியமானதாகும். எனவே, அந்நிலைப்பாடுகள் கீழே சுருக்கமாக விளக்கப்படுகின்றன.
ஈமானின் உண்மை நிலை
இமாம் அஹ்மத் வாழ்ந்த காலத்தில் இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகள் மத்தியில் பெரும் சர்ச்சைக்கு உற்பட்ட விடயங்களில் ஒன்றாக ஈமானின் உண்மை நிலை பற்றிய பிரச்சினை அமைந்திருந்தது. ஜஹ்மியாக்கள் ஈமான் என்பது அறிவாகும். செயலும் கட்டுப்பாடும் ஈமானுக்கு நிபந்தனையாக அமைவதில்லை என்று கருதினர். முஃதஸிலாக்கள் செயல்களை ஈமானின் ஓர் அங்கமாகக் கருதியதுடன் பெரும் பாவங்களில் ஈடுபடுபவர் கலிமாவை மொழிந்தவராக இருப்பினும் அவர் முஃமினாக இருக்க மாட்டார் அதேவேளையில் காபிராகவும் இருக்க மாட்டார். மாறாக இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட மூன்றாவது ஒரு நிலையில் இருப்பார் என்று கூறினர். கவாரிஜ்களோ செயல் ஈமானின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருப்பதோடு பாவங்களில் ஈடுபடுபவர் ஈமானை இழந்து காபிராகி விடுவார் என்று கூறினர்.
ஈமான் தொடர்பான மேற்குறித்த நிலைப்பாடுகள் அனைத்தும் குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையில் அமைந்த தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழிமுறைக்கு முரணானவையாக இருப்பதாக இமாம் அஹ்மத் கண்டார். ஈமானின் யதார்த்தம் பற்றிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவின் நிலைப்பாட்டை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில விளக்கினார். “ஈமான் என்பது சொல்லும் செயலுமாகும். அது கூடக்கூடியதும் குறையக் கூடியதுமாகும்” என்பது இமாம் அஹ்மதின் விளக்கமாக இருந்தது. ஈமான் என்பது சொல்லும் செயலுமாகும். அது கூடக் கூடியதும் குறையக் கூடியதும் ஆகும். எல்லா நன்மைகளும் ஈமான்பாற்பட்டதாகும். பாவங்கள் ஈமானில் குறைவை ஏற்படுத்தக் கூடியனவாகும்.
ஈமான் என்பது சொல்லும் செயலும் ஆகும். அது கூடக் கூடியதும் குறையக் கூடியதும் ஆகும். நன்மை செய்தால் அது கூடும். பாவம் செய்கின்றபோது அது குறையும். இந்நிலையில் ஒருவர் ஈமானிலிருந்து இஸ்லாத்திற்குச் செல்கின்றார். தௌபா செய்கின்றபோது மீண்டும் ஈமானுக்குத் திரும்புவார். ஷிர்க் வைத்தல், அல்லாஹ் விதித்துள்ள கடமைகளில் ஒன்றை நிராகரித்தல் ஆகியவையே ஒருவரை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும். ஒருவர் ஒரு சன்மார்க்கக் கடமையை பொடுபோக்கினால் அல்லது சோம்பலினால் நிறைவேற்றாது விட்டு விட்டால் அவர் அல்லாஹ்வின் நாட்டத்தில் விடப்பட்டவராவார். அவன் நாடினால் அவனைத் தண்டிப்பான் நாடினால் மன்னிப்பான்.
இமாம் அஹ்மதின் கருத்துப்படி ஈமான், இஸ்லாம், குப்ர் ஆகிய மூன்று உண்மைகள் இருக்கின்றன. இஸ்லாம் என்பது ஈமானுக்கும் குப்ருக்கும் இடைப்பட்டதாகும். பாவம் செய்தவர் முஃமினாக இருக்க மாட்டார். ஆனால், முஸ்லிமாக இருப்பார். இங்கு இமாம் அஹ்மத் முஃதஸிலாக்களின் நிலைப்பாட்டிற்கு அண்மித்த போதும் மீண்டும் செய்த நிலையில் மரணிப்பவர் நரகில் நிலையாக இருந்து வேதனை செய்யப்படுவார் என்று கூற, இமாம் அஹ்மத், அவ்வாறன்று இத்தகையோரை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் நாடினால் தண்டிப்பான் என்று விளக்குகின்றார்.
பெரும்பாவத்தில் ஈடுபட்டவர்
பெரும்பாவத்தில் ஈடுபட்டவர் பற்றிய தீர்ப்பிலும் இக்காலத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவின. கவாரிஜ்கள் அவர்களை காபிர் எனக் கருதினர். முஃதஸிலாக்கள் காபிரும் முஃமினும் அல்லாத மூன்றாம் நிலையில் வைத்து நோக்கினர். பாவங்கள் ஈமானில் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று முர்ஜியாக்கள் கருதினர். இந்நிலையில் இமாம் அஹ்மத் இது பற்றிய இஸ்லாமியக் கொள்கையை முன்வைத்தார்.
ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் எவரையும் அவர்கள் பெரும்பாவங்களில் ஈடுபட்டாலும் காபிர் எனக் கூற முடியாது. கலிமாவை மொழிந்து அதனை ஏற்று நம்பியோர் பாவங்களின் காரணமாக நரகில் நிலையாக வேதனை செய்யப்பட மாட்டார்கள். மாறாக, அவர்கள் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. அவன் நாடினால் அவர்களை மன்னிப்பான் நாடினால் வேதனை செய்வான் என்பது இமாம் அஹ்மதின் நிலைப்பாடாக இருந்தது.
முன்னேற்பாடும் நிர்ணயமும்
கதரியாக்கள் மனிதன் பூரண சிந்தனைச் சுதந்திரத்தையும் செயற் சுதந்திரத்தையும் பெற்றவன் அவன் எல்லாச் செயல்களிலும் தனது சுய சக்தியால் ஈடுபடுகின்றானே அன்றி இறை சக்தியால் அல்ல. அல்லாஹ் பாவங்களை நாடமாட்டான். எனவே, அவன் நாடாத எதனையும் ஏவவும் மாட்டான் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். இவர்களின் நோக்கில் நாட்டமும் ஏவலும் ஒன்றNhடொன்று பின்னிப் பிணைந்தவையாகும். ஒன்றில்லாத இடத்தில் மற்றையது இருக்காது.
கதரிய்யாக்களின் கழா கத்ர் தொடர்பான மேற்குறித்த கருத்து இஸ்லாமிய அகீதாவுக்கு முரணானது என இமாம் அஹ்மத் கண்டார். அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவன். பிரபஞ்சத்தில் அல்லாஹ் நாடாத எதுவும் நடப்பதில்லை எல்லாம் அவனது நாட்டத்தினாலும் சக்தியினாலுமே நடைபெறுகின்றன என்ற அஹ்லுஸ் ஸுன்னாக்களின் கருத்தை இமாம் அஹ்மத் வலியுறுத்தினார்.
இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன் வாழ்நாள் முடியும் வரை கொண்டிருந்த நிலைப்பாடு யாதெனில், அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்று அதற்குக் கட்டுப்பட்டு அவனது முடிவை பொறுமையுடன் அங்கீகரித்து அல்லாஹ் ஏவியதை ஏற்று விலக்கியதை விட்டும் தூரமாகி அல்லாஹ்வுக்காக என்ற தூய்மையான எண்ணத்துடன் செயற்பட்டு நன்மை தீமை எல்லாம் அவனது ஏற்பாட்டின்படியே நடைபெறுகின்றன என்பதை நம்பி சன்மார்க்க விடயங்களில் தர்க்க குதர்க்கங்களையும் வாதப் பிரதிவாதங்களையும் தவிர்த்து நடந்து கொள்ளல் வேண்டும் என்பது தாபிஊன்கள், இமாம்கள், புகஹாக்களை உள்ளடக்கிய எழுபது பேரின் ஏகோபித்த முடிவாகும்.
இமாம் அஹ்மதின் மேற்குறிப்பிட்ட கருத்து, கழா கத்ர் பற்றிய அவரது நிலைப்பாட்டை விளக்குகின்றது. கழா கத்ர் விடயத்தில் அதனைப் பூரணமாக ஏற்று நம்புதல் வேண்டும். இது விடயத்தில் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவது கூடாது என்பது மேற்குறித்த கருத்திலிருந்து புலப்படுகின்றது.
அல்லாஹ்வின் பண்புகள்
அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் குறிப்பிடப்பட்டுள்ள அல்லாஹ்வின் எல்லாப் பண்புகளையும் ஏற்று நம்பும் நிலைப்பாட்டில் இமாம் அஹ்மத் இருந்தார். நாடுபவன் யாவற்றையும் அறிந்தவன் ஞானமுள்ளவன் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கமுள்ளவன். அவனைப் போல் எதுவும் இல்லை என்பது அவரின் நம்பிக்கையாக அமைந்தது.
அல்லாஹ்வுடைய பண்புகள் பற்றிய இமாம் அஹ்மதின் கொள்கையை, ஸிபாத் பற்றிய ஹதீஸ்கள் தொடர்பாக அவர் கூறும் பின்வரும் கருத்து நன்கு விளக்குகின்றது:
“இந்த ஹதீஸ்களை நாம் வந்துள்ளபடி அறிவிப்போம். அதாவது, அல்லாஹ்வின் ஸிபாத்களை உள்ளதை உள்ளவாறு ஏற்று நம்புதல் வேண்டும். அவற்றின் யதார்த்தத்தை ஆராய்தல் ஆகாது. அவற்றுக்கு விளக்கம் கொடுப்பது ஸுன்னாவுக்கு முரணானதாகும்” என்பது இமாம் அஹ்மத் அவர்களின் நிலைப்பாடாகும்.
மேலும் அல்லாஹ் ஆரம்பமற்ற பூர்வீகமானவனாக இருப்பது போலவே அவனது பண்புகளும் பூர்வீகமானவையாகும். அவனது பேச்சு (கலாம்) என்ற பண்பும் அத்தகையதே என்பதை அவர் வலியுறுத்தினார்.
அல்லாஹ்வுடைய பேச்சு என்ற பண்புடன் தொடர்பானதே அல்குர்ஆன் படைக்கப்பட்டது சம்பந்தமான சர்ச்சையுமாகும். குறித்த சர்ச்சையைக் கிளப்பியவர்கள் முஃதஸிலாக்களாவர். இவர்கள் “அல்லாஹ் மட்டுமே பூர்வீகமானவன் (கதீம்) அவனல்லாத அனைத்தும் புதிதாக உருவானவையும் படைக்கப்பட்டவையுமாகும். இந்த வகையில் அல்குர்ஆனும் அல்லாஹ்வின் படைப்பிலேயே அடங்கும்” என்ற வாதத்தினை முன்வைத்தனர்.
ஆனால், இமாம் அஹ்மத் இந்த புதுமையான விளக்கத்தை கடுமையாக ஆட்சேபித்தார். அல்குர்ஆன் அல்லாஹ்வின் கலாமாகும் அது படைக்கப்பட்டதென்றNh படைக்கப்படாததென்றNh கூறலாகாது. இத்தகையதொரு பிரச்சினையைக் கிளறுதல் பித்அத் (புதுமை) ஆகும். ஏனெனில், நபியோ அவர்களின் தோழர்களோ இது பற்றி எதுவும் பேசவில்லை என்ற நிலைப்பாட்டில் ஆரம்பத்தில் இருந்த இமாம் அஹ்மத், முஃதஸிலாக்கள் அல்குர்ஆன் படைக்கப்பட்டதே என்ற கொள்கையை தீவிரமாக வலியுறுத்தவே இது பற்றி ஒரு தெளிவான கருத்தை முன்வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்காளானார். இந்நிலையில் அல்லாஹ் பூர்வீகமானவனாக இருப்பது போலவே அவனது பண்புகளும் பூர்வீகமானவையாகும். இந்தவகையில் அவனது பண்புகளில் ஒன்றான பேச்சும் பூர்வீகமானதேயன்றி படைக்கப்பட்டதல்ல என்ற கருத்தை இமாம் அஹ்மத் முன்வைத்தார்.
மறுமையில் அல்லாஹ்வைக் காணுதல்
இமாம் அஹ்மதின் காலத்தில் அலசப்பட்ட மற்றnhரு சன்மார்க்கப் பிரச்சினை, மறுமையில் அல்லாஹ்வை அடியார்கள் காணுவதுடன் தொடர்புடையதாகும். முஃதஸிலாக்கள் மறுமையில் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்ற கருத்தை முன்வைத்தனர். பார்ப்பதற்கு ஸ்தூலம் தேவைப்படுகின்றது அல்லாஹ்வுக்கு ஸ்தூலம் இருப்பதாகக் கொள்வது அவனை சிருஷ்டிகளுக்கு ஒப்பிடுவதாக அமையும் என்று கூறினர். மேலும் அல்லாஹ்வை மறுமையில் காண்பது தொடர்பான அல்குர்ஆன் வசனங்களுக்கு அவர்கள் வேறு விளக்கங்களைக் கொடுத்தனர்.
ஆனால், இமாம் அஹ்மதோ குர்ஆன், ஸுன்னா சட்ட வசனங்களை ஆரம்ப கால தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழியில் அப்படியே எதுவித விளக்கமும் கூறாமல் ஏற்று நம்புதல் வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டின் அடிப்படையில் அல்லாஹ்வை மறுமையில் காணும் விடயத்தை முழுமையாக விசுவாசித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இது பற்றி அவர் பின்வருமாறு விளக்குகின்றார்:
“மறுமையில் அல்லாஹ்வைக் காண்பதை நம்புவது ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மூலம் நிறுவப்பட்டதாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது ரப்பைக் கண்டார்கள் என்பதும் நம்பகமான ஹதீஸ்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய ஹதீஸை அதன் வெளிப்படையான கருத்தில் நாம் நோக்குவோம். அது பற்றி விவாதிப்பது பித்அத் ஆகும். எனவே, இது விடயமாக எவரிடமும் நாம் விவாதிக்கப் போவதில்லை.”
அல்லாஹ்வைக் காண்பதை இமாம் அஹ்மத் உறுதி செய்த போதிலும் அதன் அமைப்பு பற்றியோ உண்மை நிலை பற்றியோ எதுவும் குறிப்பிடாதது மாத்திரமன்றி அத்தகைய ஆய்வில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டதாகும் என்றும் விளக்குகின்றார். இங்கு அவர் அல்லாஹ்வை மறுமையில் காண்பதை முற்றாக மறுக்கும் முஃதஸிலாக்களுக்கும் அல்லாஹ்வுக்கு ஓர் உருவத்தையும் இடத்தையும் கற்பிக்கும் அளவுக்கு படைப்புகளை நாம் காண்பது போல அவனைக் காணலாம் என்று கூறிய முஜஸ்ஸிமாக்களுக்கும் மத்தியில் இமாம் அஹ்மத் ஓர் இடைப்பட்ட மூன்றாம் நிலைப்பாட்டை எடுத்தமையைக் காண முடிகின்றது.
இக்காலப் பிரிவில் மெய்யியல் அறிஞர்களால் விவாதிக்கப்பட்ட பிரதான சன்மார்க்க, நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் பற்றி இமாம் அஹ்மதின் நிலைப்பாடுகள் எவ்வாறு அமைந்தன என்பதே இதுவரை நோக்கப்பட்டன. இவை இமாம் அஹ்மதின் சன்மார்க்க அணுகுமுறையை எடுத்துக்காட்டப் போதுமானவையாகும். இவர் இரண்டு பிரதான அடிப்படைகளில் தனது கொள்கைகளை வகுத்துக் கொண்டார் என்பது தெளிவாகின்றது. அவையாவன:
• ஏக மூலாதாரமாக சட்ட வசனங்களைக் கொள்ளுதல், அவற்றுக்கு வலிந்து எத்தகைய விளக்கமும் கொடுக்காமல் அவற்றை வெளிப்படையான கருத்தில் நேரடியாக விளங்குதல்.
• குர்ஆன், ஸுன்னாவில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லாஹ்வுக்குரிய ஸிபாத்துக்களை அப்படியே ஏற்று நம்புதல், அல்லாஹ் அவனது படைப்புகளில் ஒன்றுக்கு ஒப்பாகும் நிலையைத் தவிர்த்தல்.
இமாம் அஹ்மதின் பிக்ஹு கண்ணோட்டம்
பிற்பட்ட கால தூய இஸ்லாமிய சிந்தனையைப் புரிந்து கொள்வதற்கு அதன் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவரான இமாம் அஹ்மதின் அகீதா தொடர்பான நிலைப்பாடுகளை அறிந்து கொள்வது அவசியமானது போலவே அவரின் பிக்ஹுக் கண்ணோட்டத்தையும் விளங்கிக் கொள்வது முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில், இமாம் அஹ்மத் அகீதாவைப் போலவே பிக்ஹுத் துறையிலும் தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழிமுறையையே கடைபிடித்தார். இதனாலேயே பிற்பட்ட காலத்தில் தூய இஸ்லாமிய அகீதாவுக்கு புத்துயிர் அளித்தவர்களான இப்னு தைமியா, இப்னுல் கையிம், முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் முதலானோர் இமாம் அஹ்மதின் அகீதா சார்ந்த நிலைப்பாடுகளுடன் பிக்ஹுக் கண்ணோட்டங்களையும் ஏற்றுப் பின்பற்றினர். இதன் காரணமாகவே இவர்கள் மத்ஹபைப் பொறுத்த வரையில் ஹன்பலிகளாகக் கருதப்படுகின்றனர்.
இமாம் அஹ்மத் ஒரு முஹத்திஸேயன்றி ஒரு பகீஹ் அல்ல என்ற கருத்து சில ஆய்வாளர்களால் வலியுறுத்தப்பட்ட போதிலும் அவர் ஏக காலத்தில் ஒரு முஹத்திஸாகவும் பகீஹாகவும் இருந்தார் என்பதே உண்மையாகும்.
அப்துல் வஹ்ஹாப் அல்வர்ராக் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“நான் அஹ்மத் இப்னு ஹன்பலைப் போன்று எவரையும் கண்டதில்லை. அவரிடம் அறுபதாயிரம் சட்டப் பிரச்சினைகள் கேட்கப்பட்டன. அவை அனைத்துக்கும் ஷஹத்தஸனா| (எங்களுக்குக் கூறினார்,) ஷஅஹ்பரனா| (எங்களுக்கு அறிவித்தார்) என்றே பதிலளித்தார்.”
இக்கருத்திலிருந்து இமாம் அஹ்மதின் பிக்ஹைப் பற்றி இரு பெரும் உண்மைகள் தெரிய வருகின்றன. அவையாவன:
• இமாம் அவர்கள் பெருந்தொகையான சட்டப் பிரச்சினைகளுக்கு விளக்கம் அளித்துள்ளமை அவை அறுபதாயிரம் எனக் கூறப்பட்டிருப்பது சிலவேளை மிகைப்படக் கூறப்பட்டதாக இருப்பினும், இமாம் அஹ்மத் தன் காலத்து மக்களால் மிகவும் நம்பப்பட்டு, மதிக்கப்பட்ட காரணத்தினால் உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்காண மக்கள் அவரை அணுகி பெருந்தொகையான பிரச்சினைகளை முன்வைத்து அன்னாரிடமிருந்து சட்டத் தீர்ப்புகளை பெற்றுச் சென்றமை ஒரு வரலாற்று உண்மையாகும்.
• இமாமவர்களின் பிக்ஹு சட்டத் தீர்ப்புக்கள் ஹதீஸ்களையும் தூய இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களையும் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்தமை. இதனால்தான் இமாம் அஹ்மத் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்கும்போது ஷஹத்தஸனா| அல்லது ஷஅஹ்பரனா| என்று ஆரம்பிப்பார் என அப்துல் வஹ்ஹாப் அல் வர்ராக் குறிப்பிட்டுள்ளார்.
ஹதீஸ் துறை
இமாம் அவர்களுக்கு இல்முல் றிவாயா எனும் ஹதீஸ் அறிவுப்புக் கலையில் அற்புதமான அறிவு இருந்தது. அது போலவே ஸஹாபாக்களின் தீர்ப்புக்களையும் அதிகம் அறிந்து வைத்திருந்தார். மேலும் தாபிஊன்களின் கருத்துக்களையும் நன்கு தெரிந்து வைத்திருந்தார். எனவே, சட்டத் தீர்ப்புகளின்போது சட்ட வசனங்களையும் ஸஹாபாக்களின் தீர்ப்புகளையும் துணையாகக் கொள்வது அவருக்கு இலகுவானதாக இருந்தது. பொதுவாக இமாம் அஹ்மத் தனது தீர்ப்புகளுக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஸுன்னாவையே முதலில் நாடுவார் அடுத்த நிலையில் ஸஹாபாக்களின் தீர்ப்புக்களை அணுகுவார். இதற்கு அடுத்த நிலையில் தாபிஊன்களின் கருத்துக்களைக் கவனத்திற் கொள்வார். சிலபோது பிற்பட்ட கால மாலிக், அவ்ஸாயி போன்ற பிரபல புகஹாக்களின் கருத்துக்களையும் நோக்குவதுண்டு.
சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இமாம் அவர்கள் கைக்கொண்ட குறித்த அணுகுமுறையானது, அவர் தான் சுயமாக முடிவுகளைச் சொல்வதைத் தவிர்த்து தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழியில் நிற்பதில் எவ்வளவு தூரம் கண்டிப்பாக இருந்தார் என்பதைக் காட்டுகின்றது.
தனது பிக்ஹானது சன்மார்க்கத்தில் பித்ஆக்கள் தோன்றுவதற்கு எவ்வகையிலும் துணை நிற்கக் கூடாது என்பதனை உத்தரவாதப்படுத்துவதற்காக ஷஅல்பிக்ஹுத் தக்தீரி| எனும் சட்டப் பிரச்சினைகளை ஊகித்து கற்பனை செய்து அவற்றுக்கு சன்மார்க்கத் தீர்ப்புகளைக் கூறும் அமைப்பைத் (ளுpநஉரடயவழைn) தவிர்த்தார். இதனால் அதுவரை நடக்காத ஒரு பிரச்சினைக்கோ நடைமுறையில் இல்லாத பிரச்சினைக்கோ தீர்ப்புச் சொல்ல இமாம் அஹ்மத் தயாராக இருக்கவில்லை.
இமாம் அஹ்மத் தனது பிக்ஹை சட்ட வசனங்களுடனும் தூய இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களுடனும் சுருக்கிக் கொண்டமையை வைத்து அவரது பிக்ஹை தேக்கமுற்ற ஒன்றாகவும் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பற்ற ஒன்றாகவும் கருதுவது பிழையானதாகும். ஏனெனில், அவர் இபாதத்துகளிலேயே (வணக்க வழிபாடுகள்) ஷநஸ்| எனும் சட்ட வசனங்களிலும் ஸஹாபாக்களின் முன்மாதிரிகளிலும் சார்ந்து நிற்கின்றார். இபாதத்துகளில் சொந்த ஆய்வுகளுக்கோ ஒப்புவமைகளுக்கோ இடமில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
ஆயினும், முஆமலாத் எனும் கொடுக்கல்வாங்கல் முதலான லௌகிக விவகாரங்களில் இமாம் அஹ்மதின் நிலைப்பாடு மிகவும் பரந்ததாகவும் நெகிழ்வு கொண்டதாகவும் அமைந்தது. அடிப்படையில் அனைத்தும் அனுமதிக்கப்பட்டவையும் செல்லுபடியானவையுமாகும். ஒன்றை விலக்குவதாயின் அதற்கு உறுதியான ஷநஸ்| ஆதாரம் தேவை என்பது அவரின் கொள்கையாக அமைந்தது. இந்த வகையில் ஷரஃய்| எனும் சுய ஆய்வையும் கியாஸ் எனும் ஒப்புவமை காணலையும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த பிற மத்ஹபுகளைவிட முன்னோர் வழிமுறையில், பாரம்பரிய அமைப்பில் நின்று உருவான ஹன்பலி மத்ஹப் மிகவும் விரிந்ததாகவும் தாராளத்தன்மை பெற்றதாகவும் விளங்கியது.
'நஸ்ஸோ', 'அஸரோ' கிடைக்காதபோது 'மஸ்லஹா' எனும் பொதுநலனை அடிப்படையாகக் கொண்டு இமாம் அஹ்மத் தீர்ப்புகள் வழங்கிய சந்தர்ப்பங்களும் உண்டு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ஷமஸ்லஹா|வை சட்டத் தீர்ப்புகளின்போது கவனத்திற் கொள்ள முடியும் என்பதற்கு ஷரீஆ ஆதாரங்கள் இருப்பதை இமாம் அஹ்மத் நன்கு புரிந்து வைத்திருந்தார். ஆயினும், இமாம் மாலிக் மஸ்லஹாவுக்குக் கொடுத்த அழுத்தத்தை இவர் அதற்கு வழங்கவில்லை. நஸ்ஸுக்கு முன்னால் அவற்றுக்கு சரிசமமாக மஸ்லஹாவைக் கருதுவதை இமாம் அஹ்மத் சரிகாணவில்லை.
ஹன்பலி பிக்ஹானது அஷ்ஷராஇஃ என்ற மூலாதாரத்தையும் கூடியளவு கவனத்திற் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதாவது இலக்குகள், முடிவுகளுக்கு வழங்கும் தீர்ப்பை அவற்றை அடைவதற்கான வழிகள், முறைகள், காரணிகள் ஆகியவற்றுக்கும் வழங்கும் நிலைப்பாட்டை ஹன்பலி மத்ஹப் கொண்டுள்ளது. இது இம்மத்ஹப் வளமிக்கதாகவும் உயிரோட்டமுள்ளதாகவும் விளங்க பெரிதும் துணை புரிந்துள்ளது.
எனவே, ஹன்பலி பிக்ஹு என்பது பாரம்பரிய முன்னோர் வழிமுறை சார்புடைய ஒரு சிந்தனை மரபாக இருப்பினும் அதற்கு அடிப்படையாக அமைந்த வேறுபட்ட மூலாதாரங்களின் காரணமாக ஒரு பக்கத்தில் தன் முதற்தன்மை வாய்ந்ததாக அமைந்தாலும் மறுபக்கத்தில் உடனிகழ்வுத் தன்மையுடையதாகவும் விளங்குகின்றது என்ற முடிவு பெறப்படுகின்றது.
ஹன்பலி பிக்ஹின் சட்ட மூலாதாரங்கள்
ஹன்பலி பிக்ஹின் பொதுக் கண்ணோட்டங்களும் சட்ட அணுகுமுறைகளும் மேலே விளக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட விளக்கத்தின் ஒளியில் இமாம் அஹ்மத் சட்ட மூலாதாரங்களாகக் கொண்டவை எவை என்பது கீழே நோக்கப்படுகின்றது.
இமாம் அஹ்மத் தனது சன்மார்க்கத் தீர்ப்புகளுக்கு ஐந்து மூலாதாரங்களை துணையாகக் கொண்டார் என இமாம் இப்னுல் கையிம் குறிப்பிடுகின்றார். அவையாவன:
01. நஸ்ஸுகள்: இவை குர்ஆன், ஸுன்னா சட்ட வசனங்களைக் குறிக்கும். ஷநஸ்| இருக்கும்போது அதனை அடிப்படையாகக் கொண்டே இமாம் அஹ்மத் தீர்ப்புகளை வழங்குவார். நஸ்ஸுக்கு முன்னால் ஸஹாபாக்களின் (நபித் தோழர்கள்) தீர்ப்புகளை அவர் பொருட்படுத்துவதில்லை.
02. ஸஹாபாக்கள் (நபித் தோழர்களது) தீர்ப்புகள்: ஒரு விடயத்தில் ஸஹாபாக்களில் ஒருவருடைய தீர்ப்பு காணப்படும்போது அதற்கு முன்னால் மற்றnhருவரின் ரஃயையோ, விளக்கத்தையோ இமாம் அஹ்மத் அலட்டிக் கொள்வதில்லை.
03. ஒரு சட்டப் பிரச்சினை தொடர்பாக ஸஹாபாக்கள் மத்தியில் கருத்துவேறுபாடு நிலவி முரண்பட்ட கருத்துக்கள் காணப்பட்டால் அவற்றுள் குர்ஆன், ஸுன்னாவுக்கு மிக நெருக்கமான கருத்தை இமாம் அஹ்மத் தெரிவு செய்வார்.
04. மேற்குறித்த சட்ட மூலாதாரங்களில் ஒரு பிரச்சினைக்கான தீர்வு காணப்படாதபோது முர்ஸல், ழஈப் வகை ஹதீஸ்களை நாடுவது இமாம் அஹ்மதின் நிலைப்பாடாகும். இத்தகைய பலவீனமான ஹதீஸ்களை கியாஸை விட பலமானதாக அவர் கருதினார். பலவீனமான (ழஈப்) ஹதீஸ்கள் எனும்போது நிராகரிக்கத்தக்க கடும் பலவீனமான ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் கொண்டார் என்று கொள்ளலாகாது. ஏனெனில், அவர் ழஈப் ஆன ஹதீஸ்களில் கடும் பலவீனத்தைக் கொண்ட ஹதீஸ்களை நிராகரித்தார் என்பதே உண்மையாகும்.
05. கியாஸ்: நஸ்ஸு, ஸஹாபாக்களின் தீர்ப்பு, முர்ஸல், ழஈப் ஆகிய எதுவுமே காணப்படாத வேளையில் இமாம் அஹ்மத் கியாஸை (ஒப்புவமை காணல்) அணுகி ஒரு பிரச்சினைக்கான சட்டத் தீர்ப்பைக் காண்பதற்கு முயல்வார். இது பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்:
“நான் கியாஸைப் பற்றி இமாம் ஷாபியிடம் வினவினேன். அதற்கு அவர் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களிலேயே அது நாடப்படும்” என்றார்.
இவ்வாறு கியாஸுக்கு குறைந்த முக்கியத்துவத்தை இவர் வழங்கியமைக்கு இரு பிரதான காரணங்கள் கூறப்படுகின்றன:
• இவர் இஜ்திஹாதில் தூய இஸ்லாமிய வழிமுறையைப் பேணுபவராக இருந்தமை. இதனால் முடியுமானவரை நஸ்ஸுடன் நின்றுவிட இவர் முயன்றார். நிர்ப்பந்தங்களின்போதே கியாஸை நாடினார்.
• இவரிடம் போதுமானளவு நஸ்ஸுகள் இருந்தமை. ஹதீஸ் துறையில் புலமை பெற்றவராக இவர் இருந்ததனால் பெருந்தொகையான ஹதீஸ்களை இவர் அறிந்து வைத்திருந்தார்.
இவற்றுடன் மேலே விளக்கப்பட்டவாறு மஸ்லஹா (நலன்), ஷராஇஃ (இலக்குகளுக்கு இட்டுச் செல்லும் வழிகள்) ஆகியவற்றையும் இமாம் அஹ்மத் தேவைகளின்போது தனது சட்ட ஆய்வுகளுக்கு துணையாகக் கொண்டுள்ளார்.
இஜ்மாஃ (ஏகோபித்த முடிவு)வைப் பொறுத்தவரை இமாம் அஹ்மத் ஸஹாபிகளின் இஜ்மாவை மட்டுமே ஏற்றுக் கொண்டமை அவதானிக்கப்படுகின்றது.
ஸஹாபாக்களை அடுத்து வந்த காலங்களில் இஜ்மாஃ அடிப்படையிலான முடிவுகள் பெறப்படுவது சாத்தியமில்லை என்று அவர் கண்டமையே இந்நிலைப்பாட்டுக்குக் காரணமாகும்.
இஜ்மாஃ என்பது ஒரு குறிப்பிட்ட காலத்து உலமாக்கள் ஒரு மார்க்க விடயத்தில் ஏகோபித்த நிலைப்பாட்டைக் கொள்வதாகும். இந்த வகையில் ஒரு காலத்து உலமாக்கள் அனைவரையும் இனங்காண்பதும் குறித்த விடயம் தொடர்பாக அவர்கள் அனைவரது கருத்துக்களையும் அறிவதும் சாத்தியமற்றது என அவர் கருதினார்.
பொதுவாக இமாம் அஹ்மத் தனது பிக்ஹுக்கு அடிப்படையாகக் கொண்ட சட்ட மூலாதாரங்களை நோக்கும்போது அவை அனைத்தும் பெயரளவில் வேறுபட்டாலும் இறுதியில் ஸுன்னாவில் போய் நிற்பதைக் காண முடியும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நஸ்ஸின் ஆதிக்கமே இவரது பிக்ஹில் காணப்படுகின்றது.
இந்த வகையில் இவரது பிக்ஹானது தூய இஸ்லாமிய அறிஞர்களின் வழிமுறையை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும் என்ற முடிவுக்கு வரமுடிகின்றது. நேரடியாக இஜ்திஹாதில் ஈடுபட்ட விடயத்திலும் சரி, பிறரிடமிருந்து பெற்றுக் கூறிய தீர்ப்புகளிலும் சரி தூய இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கின் ஒளியே அவை அனைத்திலும் பளிச்சிட்டன. அவரின் இவ்வணுகுமுறை அவரது பிக்ஹை தேக்கமிக்கதாக ஆக்கவில்லை. மாறாக, அதனை வளம்மிக்கதாகவும் ஒளிமிக்கதாகவுமே அமைத்தது.
முடிவாக, இமாம் அஹ்மதின் அகீதா வழிமுறையும் பிக்ஹு சிந்தனையும் தொடர்ந்து வந்த தூய இஸ்லாமிய சீர்திருத்தவாதிகளுக்கும் சிறந்த முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் அமைந்தன என்பது ஒரு பேருண்மையாகும்.
இமாம் அஹ்மத் - வாழ்க்கைச் சுருக்கம்
அபூ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் அஷ்ஷைபானி என்பது இவரது முழுப் பெயராகும். இவர் ஹிஜ்ரி 164ல் (கி.பி.780) பக்தாதில் பிறந்தார். இமாம் அஹ்மத் அரபுப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது கோத்திரமான ஷைபானி வீரத்திற்கும் தியாகத்திற்கும் பேர்போனதாகும். பிரபல இஸ்லாமியத் தளபதி அல்முஸன்னா பின் ஹாரிதா இக்கோத்திரத்தைச் சேர்ந்தவராவர். இவரது குடும்பம் ஆரம்பத்தில் பஸராவிலும் பின்னர் குராஸானிலும் குடியேறி வாழ்ந்தபோதிலும் அஹ்மத் இப்னு ஹன்பல் பிறக்கும்போது பக்தாதில் வந்து குடியேறியிருந்தது. இமாம் அஹ்மத் இளமையிலேயே தந்தையை இழந்ததால் தாயின் பராமரிப்பிலேயே வளர்ந்தார்.
அன்று பக்தாத் உலகின் அறிவுத்துறை கேந்திரமாக விளங்கியது. அங்கு இக்காலத்தில் பல்துறை சார்ந்த மேதைகள் இருந்தார்கள். இமாம் அஹ்மதுக்கு ஷரீஆத் துறையிலேயே நாட்டம் ஏற்பட்டது. அன்று ஈராக்கில் ஷரீஆ சார்ந்த கலைகளைக் கற்பதற்கு இரு வழிமுறைகள் இருந்தன. ஹதீஸ் அறிவிப்பை விட சட்டத் தீர்ப்புகளைக் கண்டறிவதில் கூடிய ஈடுபாடு காட்டிய அஹ்லுர் ரஃயி என்றழைக்கப்பட்ட சட்டத்துறை அறிஞர்கள் புகஹாக்களின் வழிமுறை, சட்டத் தீர்ப்புகளைக் கண்டறிவதில் காட்டிய ஆர்வத்தை விட ஹதீஸ் அறிவிப்பு, மனனம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த முஹத்திஸீன்களின் (அஹ்லுல் ஹதீஸ்) வழிமுறை ஆகிய இரண்டுமே அவையாகும்.
இமாம் அஹ்மத் இரண்டாம் வழிமுறையைத் தெரிவுசெய்து கொண்டார். ஆரம்பத்தில் சுமார் ஏழு வருடங்கள் பக்தாத் வாழ் உலமாக்களிடம் ஹதீஸ் கலையைக் கற்றுக் கொண்ட அவர் பின்னர் பஸரா, கூபா, மக்கா, மதீனா, ஷாம், யமன் முதலான பிரதேசங்களுக்கும் சென்று அங்கிருந்த உலமாக்களிடம் கல்வி கற்றார். இமாம் ஷாபிஈ ஹிஜாஸிலிருந்து பக்தாதுக்குச் சென்றபோது அவரும் அங்கு சென்று அன்னாரின் அறிவினால் பயன் பெற்றார்.
இமாம் அஹ்மத் தனது நாற்பதாவது வயதில் ஹதீஸ், பிக்ஹுக் கலைகளைப் போதிப்பதில் ஈடுபடலானார். இக்காலத்தில் ஹதீஸ் கலையின் தலைமைத்துவம் இவரது கரங்களில் இருந்தது என்பர். இவரது புகழ் பக்தாதில் மட்டுமன்றி உலகின் ஏனைய பாகங்களுக்கும் பரவியது. உலகின் பல பிரதேசங்களிலிருந்தும் இவரிடம் கல்வி கற்பதற்காக மாணவர்கள் பெருந் தொகையில் வந்தனர். இவரது வகுப்புகளுக்கு சமுகமளிக்கும் மாணவர்களது தொகை சுமார் ஐயாயிரமாக இருந்தது என சில அறிவிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இமாம் அஹ்மதை முன்னோடியாகக் கொண்டு உருவான ஹன்பலி மத்ஹப் சிரியா, பலஸ்தீனம், பாரசீகக் குடாப் பிரதேசங்கள் முதலான இடங்களில் ஆரம்பத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. ஆயினும், நாளடைவில் அதன் வளர்ச்சி குன்றி விட்டது. இந்நிலையில் 18ஆம் நூற்றாண்டில் தோன்றிய முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாபின் இயக்கம் பரவியதைத் தொடர்ந்து அதனால் கவரப்பட்ட ஸஊதி நாட்டவர்கள் ஹன்பலி மத்ஹபைப் பின்பற்றத் தொடங்கினர்.
இப்னு தைமியா, அப்துல் காதிர் ஜீலானி முதலான மேதைகளும் ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இமாம் அஹ்மத் முஃதஸிலாக் கொள்கையை ஏற்க மறுத்ததாலும் அதற்கெதிராக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டதாலும் கலீபா மஃமூனின் காலத்தில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். கலீபா முதவக்கில் பதவியேற்கும் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குறிப்பாக, கலீபா முஃதஸிமின் ஆட்சியின்போது கடுமையாக இம்சிக்கப்பட்டார். இருபத்தெட்டு மாதங்கள் இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டு கசையடியும் கொடுக்கப்பட்டார். கலீபா முதவக்கிலின் காலத்தில் இமாம் அவர்களை கலீபா கண்ணியப்படுத்தியதோடு அவர்களது வகுப்புக்களை நடத்துவதற்கும் அனுமதி வழங்கினார். முஃதஸிலாக்களுக்கு மறுப்பளிப்பதற்கு கலீபாவினால் தெரிவு செய்யப்பட்ட உலமா குழுவிலும் அங்கம் பெற்றார்.
ஹிஜ்ரி 241ஆம் ஆண்டு (கி.பி. 855) இமாம் அஹ்மத் வபாத்தானார். இவரது ஜனாஸா நல்லடக்கத்தில் எட்டு இலட்சம் ஆண்களும் அறுபதாயிரம் பெண்களும் கலந்து கொண்டதாக வரலாறு கூறுகின்ளது. ஜாஹிலிய்யாக் காலத்திலோ அல்லது இஸ்லாத்தின்போதோ இத்தகையதொரு பெருங்கூட்டம் எச்சந்தர்ப்பத்திலாவது கூடியதாக நாம் அறிந்ததில்லை என இமாமவர்களின் ஜனாஸா ஊர்வலத்தைப் பற்றி அப்துல் வஹ்ஹாப் அல்வஸ்ஸாம் கூறுகின்றார்.
இவர் எழுதிய நூல்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:
01. அல்முஸ்னத்
02. கிதாப் அஸ்ஸுஹ்த்
03. கிதாப் அஸ்ஸலாத்
04. கிதாப் அல்மனாஸிக் அல்கபீர்
05. கிதாப் அல்மனாஸிக் அஸ்ஸகீர்
06. அத்தாரக்
07. அந்நாஸிஹ் வல்மன்ஸூஹ்
08. அல்முகத்தம் வல்முஅஹ்ஹர் பீ கிதாபில்லாஹ்
09. பழாஇலுஸ் ஸஹாபா
10. அர்ரத்து அலா ஸனாதிகா வல்ஜஹமிய்யா பீமா ஷக்கத் பீஹி மின் முதஷாபிஹில் குர்ஆன்
பொதுவாக இமாம் அஹ்மத் எழுத்தை விரும்பவில்லை. தனது பத்வாக்கள்கூட தொகுக்கப்படுவதையோ பரவலாக நகர்த்தப்படுவதையோ விரும்பவில்லை. ஆயினும், ஹதீஸ்களை எழுதிக் கொள்வதை மட்டும் அவர் விரும்பவே செய்தார். அவரின் இந்நிலைப்பாட்டின் காரணமாக அவர் எழுதிய நூல்கள் மிகவும் குறைவானவையாகும். எழுதப்பட்டுள்ள நூல்களும் ஹதீஸ்களுடன் தொடர்பானவையாகவே பெரும்பாலும் அமைந்துள்ளன.
பிக்ஹுத் துறையில் இவர் கைபட எழுதிய நூல்கள் எதுவும் இல்லை என்றே கூற வேண்டும். இவரது சட்டத் தீர்ப்புகளும் சன்மார்க்க நிலைப்பாடுகளும் பிற்பட்ட காலத்தில் இவரது பிள்ளைகளான ஸாலிஹ், அப்துல்லாஹ் உட்பட மற்றும் பல மாணவர்களால் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. அதனாலேயே ஹன்பலி பிக்ஹை தொகுத்தவர்களின் பட்டியல் நீண்டதாகும். இவர்களுள் அபூ பக்ர் அல்கல்லால் என்பவர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்.
